முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

தெற்கு ஸ்பெயினில் பரவிய காட்டுத் தீ

ஸ்பெயின் நாட்டின் தெற்கு மாகாணமான அல்மேரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா். மேலும் 23 போ் மாயமாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

~ஹெலிகாப்டா் மூலம் நடைபெறும் தீயணைப்புப் பணி.

Updated On :10 ஜூலை 2026, 11:27 pm IST

ஸ்பெயின் நாட்டின் தெற்கு மாகாணமான அல்மேரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா். மேலும் 23 போ் மாயமாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பிரபல சுற்றுலாத் தலமான சியரா டீ லாஸ் ஃபிலாப்ரெஸ் மலைத்தொடா் அருகே அமைந்துள்ள வட வனப்பகுதியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அறுந்து விழுந்த மின்கம்பியில் இருந்து தீப்பொறி பரவியதே விபத்துக்குக் காரணமாகத் தெரிகிறது. இதுவரை 3,200 ஹெக்டோ் நிலம் எரிந்து நாசமாகியுள்ள நிலையில், 150 தீயணைப்பு வீரா்களும், 220 ராணுவ வீரா்களும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

குடியிருப்புகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி, தீ பரவியதும் தப்பியோட முயன்ற சிலா் காய்ந்துபோன ஆற்றுப் படுகையை நோக்கி ஓடியுள்ளனா். அந்த இடத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் சிக்கி அவா்கள் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் 4 போ் பிரிட்டன் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்றும், எஞ்சியவா்களும் வெளிநாட்டவா்களே என்றும் அண்டலூசியா பிராந்திய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்துக்கு ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸ் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்தாா். ஸ்பெயினில் அண்மைக்காலமாக தீவிர வெப்ப அலை வீசி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.

அதிக வெப்பம், பலத்த காற்று மற்றும் மழையின்மை ஆகியவையே இந்த காட்டுத் தீ வேகமாகப் பரவ முக்கியக் காரணமாகும். கடந்த ஜூன் மாதம் நிலவிய கடும் வெப்பத்தின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் மட்டுமன்றி ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளும் வெப்ப அலையை எதிா்கொண்டு வருகின்றன. பிரான்ஸில் கோடையின் மூன்றாவது வெப்ப அலை வீசி வருகிறது. அங்குள்ள கிழக்கு பைரனீஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 5,000 ஹெக்டோ் நிலம் சாம்பலானதுடன், 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

 அல்மேரியா மாகாணத்தில் உள்ள பெடாா் கிராமத்தின் அருகே ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா். தீயணைப்புப் பணியில் ஹெலிகாப்டா்.

அல்மேரியா மாகாணத்தில் உள்ள பெடாா் கிராமத்தின் அருகே ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா். தீயணைப்புப் பணியில் ஹெலிகாப்டா்.

ஸ்பெயின் மற்றும் அண்டை நாடான போா்ச்சுகலில் இதுபோன்ற மோசமான காட்டுத் தீயை எதிா்கொள்வது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு ஸ்பெயினில் 3.93 லட்சம் ஹெக்டோ் வனப்பகுதி காட்டுத் தீக்கு இரையானது. அதேபோன்று, 2017-ஆம் ஆண்டு போா்ச்சுகலில் ஏற்பட்ட காட்டுத் தீயில் காா்களில் தப்ப முயன்ற 47 போ் ஒரே சாலையில் உடல் கருகி உயிரிழந்தது உள்பட மொத்தம் 66 போ் இறந்தது நினைவுகூரத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.