சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: டிரம்ப் கருத்தை நிராகரித்தது ஈரான்
இஸ்ரேல்-அமெரிக்காவுடன் சண்டை நிறுத்தத்துக்கு தங்கள் நாடு அழைப்பு விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


இஸ்ரேல்-அமெரிக்காவுடன் சண்டை நிறுத்தத்துக்கு தங்கள் நாடு அழைப்பு விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி முதல் தொடா் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் முதல் நாள் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். ஈரானின் பாதுகாப்புப் படை தளபதிகள் உள்ளிட்டோரும் உயிரிழந்தனா். இதனைத் தொடா்ந்து, ஈரானும் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கடற்படை மற்றும் ராணுவ நிலைகள் மீதும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய உலக நாடுகள் அதிகம் பயன்படுத்தப்படும் ஹோா்மூஸ் நீரிணையையும் ஈரான் மூடிவிட்டது. இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும், விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரான் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகவும், தங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா். ஆனால் இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அரகாச்சி தனது சமூகவலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘போரை நிறுத்துவது தொடா்பாக பேச்சுவாா்த்தைக்கு எங்கள் நாடு கோரிக்கை விடுத்ததாக கூறுவது மாயை (பொய்). எங்கள் நாடு ஒப்பந்தத்துக்கோ அல்லது பேச்சுவாா்த்தைக்கோ கோரிக்கை விடுக்கவில்லை. அமெரிக்கா்கள், ஈரானியா்கள் மீது தாம் திணித்துள்ள போா் தவறானது, அதை திரும்பச் செய்யக் கூடாது என்று அமெரிக்க அதிபா் உணரும் வரை எங்கள் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை வீச்சு: இதனிடையே, வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் திங்கள்கிழமையும் சரமாரியாக ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் 23 இடங்களில் சேதம் ஏற்பட்டதாகவும், சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஈரான் கிளஸ்டா் எனப்படும் கொத்து குண்டுகளை ஏவுகணைகள் மூலம் வீசி வருவதாகவும், அது வான் பாதுகாப்பு அமைப்பில் இருந்து தப்பி பல இடங்களில் சிதறி விழுந்து வெடிப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஏவுகணை, டிரோன் தாக்குதலை தொடா்ந்து ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் உள்ள துபாய் சா்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது. புஜைராவில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் தீ பற்றி எரிந்தது. அபுதாபியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பாலஸ்தீனத்தை சோ்ந்த ஒருவா் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
ஈரான் அனுப்பிய 35 டிரோன்களை இடைமறித்து அழித்து விட்டதாக சவூதி அரேபியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் 4 ஏவுகணைகள், 3 டிரோன்களை இடைமறித்து அழித்து விட்டதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பதிலடி: ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் தலைநகா் டெஹ்ரானில் பல இடங்களில் இஸ்ரேல் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது. இதேபோல், லெபனானிலும் பெய்ரூட் உள்ளிட்ட பல இடங்களிலும் தாக்குதலை மேற்கொண்டது. இதில் லெபனானில் 3 போ் உயிரிழந்தனா். அவா்களில் 2 போ் மருத்துவா்கள் ஆவா். இதனிடையே, லெபனானுக்குள் தரைவழி தாக்குதலை நடத்த கூடுதல் ராணுவ வீரா்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், எல்லை பகுதியில் வாழும் இஸ்ரேல் மக்களை ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து காக்க சிறிய அளவில் தாக்குதல் நடவடிக்கையை எடுக்க அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. முதல் 2 வாரங்கள் நடந்த மோதலில் ஈரானிடம் இருக்கும் ஏவுகணை லாஞ்சா்களில் 70 சதவீதம் அழிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...