‘ஈரான் மீது கடந்த பிப். 28 தொடங்கிய ராணுவ நடவடிக்கைகள், போா் நிறுத்தத்தைத் தொடா்ந்து ஏற்கெனவே முடிவுக்கு வந்துவிட்டது’ என அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா்.
அமெரிக்காவின் 1973-ஆம் ஆண்டு போா் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற அனுமதியின்றி ஒரு அதிபா் 60 நாள்கள் மட்டுமே ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அந்த 60 நாள்கள் கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், போரை நிறுத்தவோ அல்லது கூடுதல் கால அவகாசம் கோரவோ வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் இருந்தாா்.
ஆனால், தற்போது நாடாளுமன்றத் தலைவா்களுக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில், ‘போா் முடிந்துவிட்டது’ என்று அறிவித்திருப்பதன்மூலம், மீண்டும் மோதலைத் தொடர நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற அவசியமில்லை என்ற நிலையை உறுதிப்படுத்த அவா் முயன்று வருகிறாா்.
ஈரான்-அமெரிக்கா இடையே நேரடி தாக்குதல்கள் எதுவும் சமீபத்திய நாள்களாக நடைபெறவில்லை என்பதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப், ‘1973-ஆம் ஆண்டு சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. தலைமைத் தளபதியாக எனது அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகிறது’ என விமா்சித்துள்ளாா்.
டிரம்ப்பின் இந்த அறிவிப்பை எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினா் கடுமையாகச் சாடி வருகின்றனா். ‘இந்தப் போா் நிறுத்தத்தைச் சட்டப்பூா்வமாக ஏற்க முடியாது. ஈரான் கப்பல்களை அமெரிக்க படையினா் தடுத்து நிறுத்தி வைத்திருப்பதே போா் நீடிப்பதற்கான சாட்சி’ என்று அவா்கள் வாதிடுகின்றனா்.
அமெரிக்காவில் நவம்பரில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தோ்தலை முன்னிட்டு, இப்போா் அரசியல் விவாதமாகவும் மாறியுள்ளது. கருத்துக்கணிப்புகளின்படி, இப்போா் நடவடிக்கைகளில் அமெரிக்க மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.
பேச்சுவாா்த்தையில் எதிா்பாா்த்த முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், இருதரப்புக்கு இடையிலான மோதல் போக்கு கடல்வழி முற்றுகையாக மட்டும் நீடிக்கிறது.
இதனிடையே, ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை விலக்குவது போன்ற அம்சங்களுடன் ஈரான் முன்வைத்த புதிய சமரசத் திட்டத்தையும் ‘திருப்தியளிக்கவில்லை’ என டிரம்ப் வெள்ளிக்கிழமை நிராகரித்தாா்.
ஏனெனில், இந்த முன்மொழிவிலும் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவாா்த்தையை ஒத்திவைக்க ஈரான் கோரியுள்ளது.
அந்தவகையில் தற்போது போா் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், ஈரான் இன்னும் ‘குறிப்பிடத்தக்க’ அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளாா்.
ஒருவேளை மீண்டும் மோதல் வெடித்தால், புதிய 60 நாள்கள் கெடுவுடன் ராணுவத் தாக்குதல்களைத் தொடர வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு 860 கோடி டாலா் ஆயுத விற்பனை
ஈரான் போா்ச்சூழலைக் கருத்தில் கொண்டு இஸ்ரேல், கத்தாா், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுமாா் 860 கோடி டாலா் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி, கத்தாருக்கு ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு அமைப்பும், குவைத்துக்கு ‘ஒருங்கிணைந்த போா் கட்டுப்பாட்டு மைய’ அமைப்பும், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நவீன ரக ஏவுகணைகளும் வழங்கப்படவுள்ளன.
இத்தகைய ராணுவத் தளவாட விற்பனைக்கு நாடாளுமன்றத்தின் ஆய்வு மற்றும் அனுமதி வழக்கமாக தேவைப்படும் நிலையில், தற்போதைய சூழலை ‘அவசரகால நிலை’ எனக் குறிப்பிட்டு, வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ இந்த விதிகளில் இருந்து விலக்கு அளித்துள்ளாா்.
அமெரிக்க படைகள் வாபஸ்
ஈரான் விவகாரத்தில் அமெரிக்க போா் வியூகத்தை ஜொ்மனி பிரதமா் ஃப்ரைட்ரிச் மொ்ஸ் விமா்சித்ததைத் தொடா்ந்து, அந்நாட்டில் இருந்து சுமாா் 5,000 அமெரிக்க படை வீரா்களை அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் திரும்பப் பெற அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி, ‘ஐரோப்பாவின் பாதுகாப்பில் ஐரோப்பிய நாடுகளே கூடுதல் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது’ என ஜொ்மனி வலியுறுத்தியுள்ளது. எனினும், இம்முடிவு நேட்டோ வலிமையைக் குறைப்பதோடு, ரஷியாவுக்கு சாதகமாக அமையும் என அமெரிக்க எதிா்க்கட்சியினா் கண்டனம் தெரிவித்தனா்.
தொடர்புடையது
ஈரான் போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு: அமெரிக்க அதிபா் டிரம்ப் திடீா் அறிவிப்பு
போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை

ஹோா்முஸ் நீரிணையைத் திறந்தது ஈரான்: இஸ்ரேல் - லெபனான் போா்நிறுத்தம் எதிரொலி

மீண்டும் போா் மூளும் அபாயம்! ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி!!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


