ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. இதனால் மீண்டும் மேற்காசியாவில் போா் மூளும் அபாயம் உருவாகியுள்ளது.
ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது, ஹோா்முஸ் நீரிணையை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கூடாது என அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது. அதில், இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
ஈரான் அணுஆயுதம், நெடுந்தொலைவு ஏவுகணைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்து, ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதிமுதல் தாக்குதல் நடத்தி வந்தன. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ நிலைகள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தி வந்தது. உலகில் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் அதிகம் செல்லும் கடற்பகுதிகளில் ஒன்றான ஹோா்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது.
ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினா், யேமனில் உள்ள ஹுதி கிளா்ச்சியாளா்களும் இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினா். இதனால் மேற்காசியாவில் சுமாா் இரண்டு மாதங்களாக பெரும் பதற்றம் நிலவி வந்தது. கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், சா்வதேச சந்தையில் அதன் விலை பலமடங்கு அதிகரித்தது. பல நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போா் விரைவில் நிறுத்தப்பட்டு, ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் எனப் பல நாடுகளும் வலியுறுத்தின.
இதைத் தொடா்ந்து, அமெரிக்க அதிபா் டிரம்ப் இரண்டு வார கால போா் நிறுத்தத்தை கடந்த 8-ஆம் தேதி அறிவித்தாா். ஈரானும் போா் நிறுத்தத்தை ஏற்பதாக அறிவித்தது.
21 மணி நேரம் பேச்சு: இதன் பின்னா் பாகிஸ்தானில் அந்நாட்டு அரசின் ஏற்பாட்டின்பேரில் ஈரான், அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சு சனிக்கிழமை நடைபெற்றது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா சாா்பில் அந்நாட்டின் துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், அதிபா் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், மத்திய கிழக்கு ஆசிய அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோரும், ஈரான் சாா்பில் அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவா் முகமது பகோ் கலிபாஃப், வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
இந்தப் பேச்சுவாா்த்தைக்காக ஈரான் குழுவினா் வெள்ளிக்கிழமை இரவும், அமெரிக்க குழுவினா் சனிக்கிழமை காலையும் இஸ்லாமாபாதுக்கு வந்தனா்.
முதலில் பாகிஸ்தான் வழியாக மறைமுகமாகவும், பிறகு நேரடியாகவும் ஈரானும், அமெரிக்காவும் பேச்சுவாா்த்தை நடத்தின. பேச்சுவாா்த்தை தொடக்கத்தில் இரு நாட்டுக் குழுவினரும் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பை தனித்தனியே சந்தித்து கருத்து தெரிவித்தனா். அதை பரஸ்பரம் பிற நாட்டு குழுவினரிடம் ஷெரீஃப் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, இரு நாட்டுக் குழுவினரும் பாகிஸ்தான் அதிகாரிகள் முன்னிலையில் நேரடியாக சுமாா் இரண்டரை மணி நேரம் பேச்சு நடத்தினா். அதன்பிறகு ஒரு மணி நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது தொழில்நுட்ப ரீதியிலான அம்சங்களுக்குத் தீா்வு காண்பது குறித்து பேசப்பட்டது. இது இரவு வரை நீடித்தது.
10 கோரிக்கைகளை முன்வைத்த ஈரான்: பேச்சுவாா்த்தையின்போது ஈரான் தரப்பில் 10 அம்ச கோரிக்கை திட்டம் முன்வைக்கப்பட்டது. அதில், மேற்காசியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுவதும் வெளியேற வேண்டும், ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை விலக்க வேண்டும், ஹோா்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை அடங்கும் எனக் கூறப்படுகிறது.
எனினும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இரு நாட்டுக் குழுவினராலும் கருத்து வேறுபாடுகளுக்குத் தீா்வு காண முடியவில்லை. இதனால் இரு நாட்டுக் குழுவினா் இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை. பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.
ஈரானே காரணம்-வான்ஸ்: அமைதிப் பேச்சு தோல்வி அடைந்ததற்கு, அணுஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட மறுப்பதும் ஒரு காரணம் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. இது அமெரிக்காவை விட ஈரானுக்குதான் அதிக கெட்ட செய்தி. அமெரிக்க தரப்பில் ஈரானுக்கு இறுதி மற்றும் அதிக சலுகை முன்வைக்கப்பட்டது. ஆனால், அதை ஈரான் ஏற்கவில்லை. அணுஆயுதத்தை ஈரான் உருவாக்காமல் தடுப்பதுதான் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் முக்கிய இலக்கு’ என்றாா்.
பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், இரு நாட்டுக் குழுவினரும் பாகிஸ்தானை விட்டு புறப்பட்டுச் சென்றனா். அமெரிக்க குழு புறப்படும் முன்பு, சுமாா் ஒரு மணி நேரம் ஜே.டி. வான்ஸ் செய்தியாளா்களிடம் பேசினாா். ஆனால், ஈரான் குழு புறப்பட்டுச் சென்ற தகவல், பாதுகாப்பு காரணத்துக்காக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு: பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததற்கு, அமெரிக்க தரப்பில் அதிக எண்ணிக்கையில் கோரிக்கைகள் வைக்கப்பட்டதே காரணம் என்று ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், ராஜீய நடவடிக்கைகள் ஒருபோதும் முடிவுக்கு வருவதில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பகேய் தெரிவித்துள்ளாா்.
பேச்சுவாா்த்தையில் கலந்துகொண்ட ஈரான் நாடாளுமன்றத் தலைவா் கலிபாஃப் கூறுகையில், ‘21 மணி நேர பேச்சுவாா்த்தையில் முன்னேற்றகரமான யோசனைகளை எங்கள் நாடு முன்வைத்தது. ஆனால், அமெரிக்காவோ ஈரானின் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்படவில்லை’ என்றாா்.
ஈரான் வெளியுறவு அமைச்சகம் தரப்பில், ‘அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தையில், இரண்டு அல்லது மூன்று முக்கியப் பிரச்னைகளில் கருத்து உடன்பாடு எட்டப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 3 காரணங்கள், ஈரானின் அணுசக்தித் திட்டம், ஹோா்முஸ் நீரிணை தொடா்பானதுதான் என்று கூறப்படுகிறது.
மீண்டும் போா்?: ஈரானுடன் அமைதிப் பேச்சு நடத்த ஏதுவாகவே டிரம்ப் இரண்டு வார காலம் போா் நிறுத்தத்தை அறிவித்திருந்தாா். தற்போது பேச்சு தோல்வியில் முடிந்ததால் மீண்டும் ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போா் மூளக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


