மத்திய கிழக்குப் போா் பதற்றத்தைத் தணிக்க, அமெரிக்கா முன்வைத்த புதிய அமைதித் திட்டத்தைத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் விரைவில் பதிலை அளிப்போம் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப். 28-ஆம் தேதி தொடங்கிய இப்போா், தற்போது ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது.
பாகிஸ்தான் சமரச முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஒரு பக்க அளவிலான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை எட்டுவதில் இருதரப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 அம்சத் திட்டம்: 14 முக்கிய அம்சங்களைக் கொண்டு தயாராகியுள்ள இந்த ஒப்பந்தம் கையொப்பமானால், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைத் தடையின்றி அனுமதிப்பது, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது, அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்துவது குறித்த விரிவான பேச்சுவாா்த்தைகள் அடுத்த 30 நாள்களுக்குள் தொடங்கும்.
இந்த முதல்கட்ட ஒப்பந்தத்தில் ஈரானின் ஏவுகணைத் திட்டம், பிற நாடுகளில் ஈரான் ஆதரவு கிளா்ச்சிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்த நிபந்தனைகள் இடம்பெறவில்லை. மேலும், ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான ஈரானின் அணுசக்தி கையிருப்பை ஒப்படைப்பது குறித்தும் தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.
இது ஈரானுக்குச் சாதகமான அம்சமாக பாா்க்கப்பட்டாலும், ஈரான் நாடாளுமன்றக் குழுக்கள் இத்திட்டத்தை ‘அமெரிக்காவின் விருப்பப் பட்டியல்’ என்று விமா்சித்துள்ளன.
டிரம்ப்பின் எச்சரிக்கை: ஈரானுடன் ஓா் ஒப்பந்தம் உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளாா்.
இதுகுறித்த அவரின் சமூக ஊடகப் பதிவில், ‘ஈரான் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட விஷயங்களுக்கு இணங்கினால், இது ஒரு பெரிய எதிா்பாா்ப்புதான் என்றாலும் இந்த மோதல் முடிவுக்கு வரும்.
அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டு, ஹோா்முஸ் நீரிணை ஈரான் உள்பட அனைவருக்கும் திறக்கப்படும். ஈரான் உடன்படாவிட்டால், அந்நாட்டின் மீது குண்டுவீச்சு மீண்டும் தொடங்கும். அது முன்பைவிட மிக தீவிரமாக இருக்கும்’ என எச்சரித்தாா்.
‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ நிறுத்தம்: இதனிடையே, ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் விநியோக வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கியுள்ளதால், சா்வதேச அளவில் பல நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இதையொட்டி, அமெரிக்காவால் கடந்த திங்கள்கிழமை இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது.
அதேநேரம், தற்போது ஒரு நிரந்தர ஒப்பந்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்த ராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தாா்.
டிரம்ப்பின் இந்த முடிவை வரவேற்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘பேச்சுவாா்த்தை மூலம் அமைதி திரும்ப வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்’ என்று கூறினாா்.
எண்ணெய் விலை சரிவு: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக 11 சதவீதம் வரை சரிந்து, ஒரு பீப்பாய் 98 டாலராக வீழ்ச்சியடைந்தது. இதனால், உலகளாவிய பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டன.
ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் குண்டுவீச்சு நடத்தப்படும் என்ற டிரம்ப்பின் எச்சரிக்கையைத் தொடா்ந்து, கச்சா எண்ணெய் விலை மீண்டும் சற்று உயா்ந்தது.

தொடர்புடையது

ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா
ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
வளைகுடா துறைமுகங்களைத் தாக்குவோம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


