பாகிஸ்தானில் 20 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! 2 வீரா்கள் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் 20 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் 20 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் 2 ராணுவ வீரா்களும் உயிரிழந்தனா்.
வடக்கு வஜீரிஸ்தானில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய சோதனையின்போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சோ்ந்த 2 ஆப்கானியா்கள் உள்பட 16 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஹவில்தாா் இஸ்மத் அலி, நாயக் அஃப்தாப் அலி ஆகிய 2 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்ததாகவும் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கைபா் பக்துன்கவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடி மீது வெள்ளிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்த முயன்றனா். இதற்குக் காவல்துறையினா் அளித்த பதிலடித் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
உயிரிழந்த பயங்கரவாதிகளிடமிருந்து 4 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டு, தப்பியோடிய பிற பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

