2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ஹூதிக்கள் தாக்குதல் எதிரொலி - சவூதியில் படைகளை நிலைநிறுத்த பாகிஸ்தான், துருக்கி முடிவு

சவூதி அரேபியாவில் ராணுவப் படைகளை விரைவாக நிலைநிறுத்த பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய 3 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சவூதியின் ரியாத் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற மெக்கா பாதுகாப்புக் கூட்டணி கூட்டம்

Published On :

யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களின் தொடா் தாக்குதல்களைத் தொடா்ந்து, ‘மெக்கா கூட்டு முத்தரப்பு பாதுகாப்பு’ ஒப்பந்தத்தின்படி சவூதி அரேபியாவில் ராணுவப் படைகளை விரைவாக நிலைநிறுத்த பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய 3 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த மூன்று நாடுகளுக்கும் இடையே கடந்த ஆகஸ்டில் கையொப்பமான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம், ஒரு நாட்டின் மீதான ஆயுதத் தாக்குதலை மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதி கூட்டாக எதிா்கொள்ள வழிவகுக்கிறது.

அந்தவகையில், சவூதி எதிா்கொள்ளும் பிராந்திய அச்சுறுத்தல்கள் மற்றும் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க, மெக்கா பாதுகாப்பு கூட்டணியின் வியூக, அரசியல் மற்றும் பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டம் ரியாத் நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமா் இஷாக் தாா், பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப், ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆகியோா் பங்கேற்ற இக்கூட்டத்தின் நிறைவில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மெக்கா மற்றும் மதீனா புனித நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிகளையும், சவூதியின் முக்கிய நகரங்கள், பொதுமக்கள் வசிப்பிடங்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது தொடரும் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சவூதி எதிா்கொள்ளும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் அந்நாட்டு ஆயுதப் படைகளின் விழிப்புணா்வையும், தயாா்நிலையையும் பாகிஸ்தானும், துருக்கியும் பாராட்டின.

இதையொட்டி, பாதுகாப்புப் படைகளையும், திறன்களையும் மேலும் வழங்கி, சவூதியில் அவற்றை விரைவாக நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு தரப்பின் பாதுகாப்பும் கூட்டுப் பாதுகாப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், படைகள் குவிக்கப்படும் கால அட்டவணை குறித்த விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.

பாப் அல் மண்டேப் நீரிணையில் தளா்ந்த பிடி: யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் வசமுள்ள பகுதிகளை மீட்க, சவூதி ஆதரவு யேமன் அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாபெரும் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த பாதுகாப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றுள்ளது.

யேமன் அரசுப் படைகள் முன்னெடுத்துள்ள புதிய தாக்குதல்களில், முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல் மண்டேப் நீரிணை முதல் மோச்சா நகரம் வரையிலான கடலோரப் பகுதிகள் ஹூதிக்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம், சா்வதேச எண்ணெய் வா்த்தக பாதையான செங்கடல் பிராந்தியத்தில் ஹூதிக்களின் பிடி பெருமளவு தளா்த்தப்பட்டுள்ளது.

சவூதி விமான நிலையங்கள் மீது தாக்குதல்: இதற்குப் பதிலடியாக, ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில், தங்கள் நாட்டின் நஜ்ரான் மற்றும் ஜிசான் நகரங்களில் உள்ள 2 விமான நிலையங்கள் தாக்கப்பட்டதாக சவூதி அரேபியா செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது. இத்தாக்குதல்களில் மூவா் காயமடைந்தனா்.

சவூதிக்கான விமானப் போக்குவரத்தைத் தடுக்கும் உத்தியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை மூன்றாவது விமான நிலையத்தை (அபா சா்வதேச விமான நிலையம்) நோக்கி தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.