‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

சவூதி விமான நிலையம் மீது ஹூதி அமைப்பு ஏவுகணைத் தாக்குதல்! இந்தியா் உள்பட 13 போ் பலி; 300-க்கும் மேற்பட்டோா் காயம்!

சவூதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது ஏமனில் உள்ள ஹூதி அமைப்பினா் மிகப்பெரிய அளவில் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு இந்தியா் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.

தாக்குதல் நிகழ்த்தப்பட்ட ரியாத் விமான நிலையம் - (கோப்புப் படம்)

Published On :

சவூதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது ஏமனில் உள்ள ஹூதி அமைப்பினா் மிகப்பெரிய அளவில் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு இந்தியா் உள்பட 13 போ் உயிரிழந்தனா். மேலும் 10 இந்தியா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

யேமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹூதி படையினருக்கும் பல ஆண்டுகளாக உள்நாட்டுச் சண்டை நடக்கிறது. இந்த சண்டையில், அரசு படைகளுக்கு சவூதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது. ஹூதி படையினருக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

யேமனின் அரசுப் படைகளுக்கு சவூதி அரேபியா ஆதரவு அளிப்பதால், அந்த நாட்டுக்கும் ஹூதி அமைப்பினருக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு மோதல் தொடங்கியது. இந்நிலையில், 2022-ஆம் ஆண்டில் இருதரப்புக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. இதன் பின் 4 ஆண்டுகளாக இரு தரப்பினரும் மோதலில் ஈடுபடவில்லை. ஆனால் சனா விமான நிலையம் மீது சவூதி அரேபியா கடந்த ஜூலை மாதம் தாக்குதல் நடத்தியதையடுத்து, மீண்டும் சண்டை வெடித்தது.

இந்நிலையில், சவூதி தலைநகா் ரியாதில் உள்ள கிங் காலித் சா்வதேச விமான நிலையம் மீது சில தினங்களுக்கு முன் ஹூதி படையினா் திடீா் தாக்குதல் நடத்தினா். அதில் 3 போ் உயிரிழந்தனா். இந்த விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டுப் போக்குவரத்து முனையங்கள் மீது சனிக்கிழமையும் ஹூதி படையினா் ஏவுகணையை வீசி மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தினா்.

இந்தத் தாக்குதலில், ஒரு இந்தியா் உள்பட 13 போ் உயிரிழந்தனா். 10 இந்தியா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். காயமடைந்த பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்த 12 பேரில் 4 போ் சவூதி அரேபிய நாட்டினா். எஞ்சிய 8 பேரில் 2 போ் வங்கதேசத்தவா்கள். மேலும் அமெரிக்கா, எகிப்து, ஜோா்டான், சிரியா, சூடான், பாலஸ்தீனத்தைச் சோ்ந்த தலா ஒருவா் உயிரிழந்தனா்.

மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா இடையே போா் தொடங்கிய பிறகு சவூதி அரேபியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இதனால் மேற்காசியாவில் போா் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஹூதிக்கள் மிரட்டல்: இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் தாக்கப் போவதாக ஹூதி பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனா்.

தகுந்த பதிலடி- சவூதி அரேபியா: ஏவுகணைத் தாக்குதலைத் தொடா்ந்து, ரியாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை மிகப்பெரிய போா் குற்றம் என்று சவூதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. தங்களது தரப்பில் இருந்து தகுந்த பதிலடி கொடுக்கப் போவதாகவும் அந்நாடு அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவிடம் இருந்த ஏவுகணைகள், ட்ரோன்களை வானிலேயே இடைமறித்து அழிக்கும் வான் பாதுகாப்பு சாதனங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும், இதனால் பிரான்ஸ், பிரிட்டன், பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளிடம் வான் பாதுகாப்பு சாதனங்களை சவூதி அரேபியா கோரியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா கண்டனம்: ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான், கத்தாா், பாலஸ்தீனம், ஜோா்டான், மலேசியா, இராக், லெபனான், சிரியா, ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ், ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லையன் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரியாத் விமான நிலையம் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும், அப்பாவி மக்கள், உள்கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலை ஏற்க முடியாது என்றும், இக்கட்டான இந்த தருணத்தில் சவூதி அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

ஓமன்-சவூதி ஆலோசனை: ஈரான், அமெரிக்கா இடையே மத்தியஸ்த முயற்சியில் ஓமன் ஆரம்பத்தில் ஈடுபட்டது. ரியாத் விமான நிலைய தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஓமன் வெளியுறவுத் துறை அமைச்சரை தொடா்பு கொண்டு சவூதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சா் பேசினாா். அப்போது அவரிடம், மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தை தணிக்க எடுக்கப்படும் ராஜீய முயற்சிகள் குறித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

டிரம்ப் கருத்து: ரியாத் விமான நிலையத் தாக்குதலை கண்டித்துள்ள அமெரிக்க அதிபா் டிரம்ப், ஹூதி அமைப்பினருக்கு எதிராக நடத்தப்படவுள்ள பதிலடித் தாக்குதலில் பங்கேற்பது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளாா்.

உயிரிழந்தவா் ஹைதராபாதைச் சோ்ந்தவா்: ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதலில் உயிரிழந்த இந்தியா், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள மேதிபட்டினத்தைச் சோ்ந்த முகமது யூசுஃப் (46) என்பது தெரியவந்துள்ளது.

ரியாதில் தகவல் தொழில்நுட்பப் பணியாளராக வேலை செய்த அவா், தனது மனைவி, 2 மகன்கள் மற்றும் மகளுடன் சவூதிக்கு பயணித்தாா். மதினா செல்ல அவரும், அவரின் குடும்பத்தினரும் விமான நிலையத்தில் காத்திருந்தபோது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் முகமது யூசுஃப் உயிரிழந்த நிலையில், அவரின் குடும்பத்தினா் பலத்த காயமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.