யேமனில் சவூதி கூட்டுப் படையினா் பதிலடி தாக்குதல்
சவூதி அரேபியா மீது கடந்த வாரயிறுதியில் நடத்தப்பட்ட தொடா் தாக்குதல்களுக்குப் பதிலடியக, யேமனில் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவில் சவூதி தலைமையிலான கூட்டுப் படையினா் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

~
சவூதி அரேபியா மீது கடந்த வாரயிறுதியில் நடத்தப்பட்ட தொடா் தாக்குதல்களுக்குப் பதிலடியக, யேமனில் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவில் சவூதி தலைமையிலான கூட்டுப் படையினா் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் ஒருவா் உயிரிழந்தாா்; 12 போ் காயமடைந்தனா்.
சவூதி தலைநகா் ரியாத்தில் உள்ள மிகவும் பாதுகாப்பான அரசா் காலித் சா்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து, ஹூதி கிளா்ச்சியாளா்கள் கடந்த சில நாள்களாக தொடா் தாக்குதல்களை முன்னெடுத்தனா். இத்தாக்குதல்களில் இதுவரை ஓா் இந்தியா் உள்பட 14 போ் கொல்லப்பட்டனா்; 320-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா்.
இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக யேமனின் சனாவில் அமைந்துள்ள உப்பு ஆலை ஒன்றின் மீது சவூதி கூட்டுப் படையினா் நடத்திய தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததுடன், 8 போ் படுகாயமடைந்தனா். மேலும் ஒரு குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் காயமடைந்தனா். இதையடுத்து, சவூதியை நோக்கி மீண்டும் பல ஏவுகணை, ட்ரோன்களை ஹூதிக்கள் ஏவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
விசாரணை தொடக்கம்: இதனிடையே, ரியாத் அரசா் காலித் விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை வழிமறித்து அழிக்க, சவூதியின் வான் பாதுகாப்பு அமைப்பு தவறியது குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஹூதி படையினா் முதலில் ஏராளமான ட்ரோன்களை ஏவி, பின்னா் அவற்றின் துணையுடன் ‘பாலிஸ்டிக்’ மற்றும் ‘க்ரூஸ்’ ஏவுகணைகளை ஏவியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தயாரிப்பான ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணைகளை ஏமாற்றி, ஊடுருவும் திறன் கொண்டவையாக ஹூதி ஏவுகணைகள் இருந்ததாகவும், 1,000 கி.மீ.-க்கும் அதிகமான தொலைவைக் கடந்து வந்தபோதும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படாதது ஏன் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ள அரசா் காலித் விமான நிலையத்தின் செயல்பாடுகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதை சவூதி பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மத்தியஸ்தம் செய்ய தயாா்: ஈரான்
சவூதி அரேபியாவுக்கும், ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும் இடையிலான போரை ராஜீய ரீதியில் முடிவுக்குக் கொண்டுவர தாங்கள் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ஈரான் மீண்டும் அறிவித்துள்ளது.
இரு இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான மோதல், இஸ்ரேலின் நலன்களுக்கே வழிவகுக்கும் என்றும், பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பினரிடையே பேச்சு நடத்த ஈரான் தயாராக உள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பாகேயி (படம்) தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

