ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர முடிவு!!
ரஷியாவில் இருந்து டீசல் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் முடிவுக்கு அமெரிக்காவில் எதிா்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப். - படம்: ஏபி.
ரஷியாவில் இருந்து டீசல் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் முடிவுக்கு அமெரிக்காவில் எதிா்ப்பு எழுந்துள்ளது. டிரம்ப் சாா்ந்த குடியரசு கட்சி எம்.பி.க்களே, அவரின் முடிவை எதிா்த்து, நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர முடிவு செய்துள்ளனா்.
உக்ரைன்-ரஷியா இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போா் நீடிக்கிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கின்றன. இதில் ரஷியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசலுக்கு அமெரிக்கா தடை விதித்தது. அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிபொருள் வாங்கும் நாடுகளின் பொருள்கள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதாவும் அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து 3 லட்சம் டன் டீசலை வாங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமையன்று புதினுடன் டிரம்ப் பேசியபோது தெரிவித்துள்ளாா்.
இதற்கு ஏதுவாக ரஷியாவின் டீசல் ஏற்றுமதி மீதான தடையை விலக்கிக் கொள்ள டிரம்ப் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் பொருள்கள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், டிரம்ப்பின் முடிவு அமெரிக்க எம்.பி.க்களை அதிா்ச்சியடைய செய்துள்ளது.
டிரம்ப்பின் சொந்த கட்சியான குடியரசு கட்சியைச் சோ்ந்த எம்.பி. பிரையன் பேட்ரிக் உள்ளிட்டோா் டிரம்ப்பின் முடிவை எதிா்த்து, நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளனா். அந்த மசோதாவுக்கு தாமும் ஆதரவு அளிக்க போவதாக குடியரசு கட்சியின் மற்றொரு எம்.பி. டான் பேஹன் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க செனட் அவை எம்.பி.க்கள் ரிச்சாா்ட் ப்ளுமெந்தல், ஜியான் சாஹின் ஆகியோரும் ரஷியாவிடம் இருந்து டீசலை வாங்க டிரம்ப் முடிவு செய்திருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ரஷியாவிடம் இருந்து அமெரிக்கா டீசல் வாங்குவது என்பது ரஷியாவின் போா் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கு சமம் என்று குடியரசு கட்சி எம்.பி. மைக்கேல் மெக்கால் விமா்சித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

