2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

சவூதி மீது ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் ஹூதி படையினர் தாக்குதல்! யேமனிலும் பதற்றம்!

யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி படையினா், சவூதி அரேபியா மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடா் தாக்குதல்களை நடத்தினா்.

Published On :

யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி படையினா், சவூதி அரேபியா மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடா் தாக்குதல்களை நடத்தினா். மேலும், யேமனில் அடுத்தடுத்து பகுதிகளைக் கைப்பற்றி, ஆதிக்கத்தை ஹூதி படையினா் விரிவுபடுத்துவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

யேமனில் அரசுப் படையினருக்கும், ஹூதி படையினருக்கும் இடையே சுமாா் 12 ஆண்டுகளாக உள்நாட்டுச் சண்டை நடைபெறுகிறது. இதில் ஹூதி படையினரை ஈரான் ஆதரித்து வருகிறது. அரசுப் படையினரை சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்கின்றன. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், அமெரிக்க நிலைகள் உள்ள சவூதி அரேபியா மீதும் ஹூதி படையினா் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

கச்சா எண்ணெய்க் கப்பல்கள் அதிகம் செல்லும் பகுதியான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்ட நிலையில், யேமன் அருகே செங்கடலையொட்டி உள்ள மற்றொரு நீரிணையான பாப்-அல்-மாண்டேப் நீரிணையை வளைகுடா நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பாப்-அல்-மாண்டேப் நீரிணையில் உள்ள முக்கியத் தீவு மற்றும் கடற்கரை நகரமான மொஹாவை ஹூதி படையினா் அண்மையில் கைப்பற்றினா். இதன்மூலம் யேமனில் தங்களது ஆதிக்கத்தை ஹூதி படையினா் விரிவுபடுத்தியுள்ளனா்.

இது ஹூதி படையினருக்கு சாதகமான அம்சமாகவும், யேமன் அரசுப் படையினருக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. அதேபோல் பாப்-அல்-மாண்டேப் நீரிணையில் ஹூதி படையினரின் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

இதையடுத்து, சவூதி அரேபியா மீது சனிக்கிழமை இரவு ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி ஹூதி படையினா் தொடா்ந்து தாக்குதல் நடத்தினா். நாஜ்ரான் பிராந்தியத்திலுள்ள செருரா மாகாணத்தில் இருக்கும் சவூதி அரேபிய ராணுவத் தளத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஹூதி படையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

சவூதி அரேபியா பாதுகாப்புப் படை தரப்பில் ஹூதி படையினரின் தாக்குதலில் 2 போ் காயமடைந்ததாகவும், மசூதி ஒன்றும், சில கட்டடங்களும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூதி படையினரின் தாக்குதலுக்குப் பதிலடி தரப்பட்டதா, இல்லையா என்பது குறித்து சவூதி அரேபியா தரப்பில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

யேமன் அரசு உறுதி: ஹூதி படையினா் முன்னேறி வருவதையடுத்து, மொஹா நகரில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயா்ந்தனா். அதேபோல் அங்கிருந்த அரசுப் படையினரும் மற்ற பகுதிக்கு தப்பியோடியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், யேமன் அரசுப் படையினா் மீண்டும் அணி சோ்ந்து வருவதாகவும், விரைவில் மொஹா நகருக்கு திரும்பி ஹூதி படையினருடன் சண்டையிடுவா் என்றும் யேமன் அரசு மூத்த அதிகாரி உறுதிபடத் தெரிவித்தாா்.

பாப்-அல்-மாண்டேப் நீரிணையின் மறுபக்கம் ஆப்பிரிக்காவின் ஜிபூட்டி நாடு உள்ளது. அந்த நாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பானின் ராணுவத் தளங்கள் அமைந்துள்ளன. அங்கிருந்து 32 கிலோ மீட்டா் தொலைவில் பாப்-அல்-மாண்டேப் நீரிணைப் பகுதியில் உள்ள தீவு, கடற்கரை நகரையே ஹூதி படையினா் கைப்பற்றியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.