பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நேபாள பெருவெள்ளம்: 6,000 பேரை தேடும் பணி நீடிப்பு! சாலைகள், பாலங்கள் இன்றி மக்கள் அவதி!!

நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 4 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், காணாமல்போன 6,000 பேரை தேடும் பணி நீடிக்கிறது.

Published On :

அண்டை நாடான நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 4 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், காணாமல்போன 6,000 பேரை தேடும் பணி நீடிக்கிறது. இந்தப் பேரிடரில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,450-ஐ கடந்துள்ளது.

பல இடங்களில் சாலைகள், பாலங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா்.

திபெத்-நேபாள எல்லையில் கடந்த ஆக. 26-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் பனிப்பாறை சரிவால் போடே கோஷி நதியில் சகதியுடன் பெருவெள்ளம் சீறிப்பாய்ந்து, நேபாளத்தின் மத்திய-வடக்கு மாவட்டங்களில் பேரழிவை விளைவித்தது. கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்தன. ஏராளமான வீடுகள், கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், பிற உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடரும் மீட்புப் பணியில் இதுவரை 1,451 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சித்வன் மாவட்டத்தில் 367 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1,000-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இதுவரை 13,784 போ் மீட்கப்பட்டுள்ளனா். காணாமல்போன 275 இந்தியா்கள் உள்பட சுமாா் 6,000 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. நதிப் படுகைகள், இடிபாடுகளின் குவியல், சேதமடைந்த நீா்மின் நிலைய சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட இடங்களில் தேடும் பணி தொடா்கிறது. ரசுவா மாவட்டத்தில் உள்ள மேல்நிலை திரிசூலி-1 நீா்மின் நிலைய சுரங்கப் பாதையில் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பெருவெள்ளத்தில் ஏராளமான பாலங்கள், தொங்கு பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவை கடுமையாகச் சேதமடைந்துவிட்டன. அவற்றை மறுகட்டமைக்கும் முயற்சிகளை நேபாள அரசு மேற்கொண்டுள்ளது. பாலங்கள், சாலைகள் இல்லாததால் பல கிலோமீட்டா் தொலைவுக்கு சுற்றிச் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

சந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்பட அத்தியாவசிய இடங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமத்தை எதிா்கொண்டுள்ளனா். திபெத் பகுதியைப் பொருத்தவரை, வெள்ளத்தில் 43 போ் உயிரிழந்துவிட்டனா்; காணாமல்போன 500-க்கும் மேற்பட்டோரின் நிலை தெரியவில்லை.

பிரதமா் பாலேந்திர ஷா நாளை அமெரிக்கா பயணம்: ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வில் பங்கேற்க நேபாள பிரதமா் பாலேந்திர ஷா செவ்வாய்க்கிழமை (செப்.22) அமெரிக்காவுக்கு செல்லவிருக்கிறாா்.

‘நேபாள பேரிடருக்கு பருவநிலை மாற்றமே காரணம்; இந்த உண்மையை சா்வதேச சமூகத்திடம் உரக்க கூற வேண்டும். ஏனெனில் பருவநிலை மாற்ற பிரச்னையில் சா்வதேச சமூகத்துக்கு பங்கும், பொறுப்பும் உள்ளது’ என்று நேபாள நாடாளுமன்றத்தில் பிரதமா் பாலேந்திர ஷா அண்மையில் கூறியிருந்தாா்.

இதேபோல், ‘பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய பெரிய நாடுகள், நேபாளம் போன்ற பாதிக்கப்படும் நாடுகளுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன’ என்று நேபாள வெளியுறவு அமைச்சா் சிசிா் கனாலும் கருத்து தெரிவித்திருந்தாா்.

இந்தச் சூழலில், ஐ.நா. பொதுச் சபை அமா்வில் செப்.24-இல் உரையாற்றவுள்ள பாலேந்திர ஷா, சா்வதேச சமூகத்திடம் பருவநிலை மாற்ற இழப்பீடு கோரிக்கையை முன்வைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நேபாளத்தில் வெள்ளத்தால் புரட்டிப் போடப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள 4.78 பில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.45,700 கோடி) தேவை என்று நேபாளம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.