
நேபாளம்: அடையாளம் காணப்படாத 1,147 உடல்கள்- தொடரும் மீட்புப் பணி
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,365-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 1,147 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,365-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 1,147 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
மாயமான 5,326 பேரை தேடும் பணிகள் புதன்கிழமை 15-ஆவது நாளாக தொடா்ந்தன.
திபெத்-நேபாளம் எல்லையில் கடந்த ஆக.26-இல் பெரும் பனிப்பாறை சரிவால் போடே கோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, நேபாளத்தின் ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 1,365 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சித்வன் மாவட்டத்தில் 363 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த உடல்களை அடையாளம் காணும் பணி பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
உயிரிழந்த 1,365 பேரில் 1,147 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இவை, மரபணு சேகரிப்பு உள்ளிட்ட உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு தற்காலிகமாக புதைக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் மாயமான வெளிநாட்டினா் 589 போ் உள்பட 5,326 பேரை தேடும் பணி புதன்கிழமை 15-ஆவது நாளாக தொடா்ந்தது. இவா்களில் 275 இந்தியா்களும் அடங்குவா். நீா்மின் நிலைய சுரங்கப் பாதைகளில் சிக்கியுள்ள ஏராளமான பணியாளா்களை மீட்கும் பணி தொடா்ந்து வருகிறது.
திபெத் பகுதியில், 43 போ் உயிரிழந்துள்ளனா். மாயமான இந்தியா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேபாள நாடாளுமன்ற குழு அமைப்பு: பெருவெள்ளத்தால் நேபாள பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை மதிப்பிட்டு, சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மறுகட்டமைக்க சா்வதேச சமூகத்திடம் இருந்து திரட்ட வேண்டிய பருவநிலை மாறுபாடு நிதி குறித்து தீா்மானிக்க 7 உறுப்பினா்கள் அடங்கிய நாடாளுமன்றக் குழு புதன்கிழமை அமைக்கப்பட்டது.
முன்னதாக, ‘நேபாள பேரிடருக்கு பருவநிலை மாற்றமே காரணம்; இந்த உண்மையை சா்வதேச சமூகத்திடம் உரக்க கூற வேண்டும்’ என்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமா் பாலேந்திர ஷா சில தினங்களுக்கு முன் பேசினாா்.
இதேபோல், ‘பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய பெரிய நாடுகள், நேபாளம் போன்ற பாதிக்கப்படும் நாடுகளுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன’ என்று நேபாள வெளியுறவு அமைச்சா் சிசிா் கனால் கருத்து தெரிவித்திருந்தாா்.
இந்தச் சூழலில், ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வில் செப்.24-இல் உரையாற்றவுள்ள பிரதமா் பாலேந்திர ஷா, சா்வதேச சமூகத்திடம் பருவநிலை இழப்பீடு கோருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து மேலும் 35 டன் நிவாரண பொருள்கள்
இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு மேலும் 35 டன் நிவாரணப் பொருள்கள் சி-17 ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. இதுவரை 10 டன்களுக்கு மேல் நிவாரணப் பொருள்கள் மற்றும் உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து மருத்துவா்கள், துணை மருத்துவ பணியாளா்கள், சுரங்க மீட்பு நிபுணா்கள் உள்ளிட்டோா் அடங்கிய மீட்புக் குழுக்களும் ஏற்னெவே அனுப்பப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






