திரும்பும் வரலாறு: ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள்

வரலாற்று பக்கங்களில் 2021ஆம் ஆண்டில் தவிர்க்க முடியாத சம்பவங்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது இடம்பெற்றுள்ளது.
காபூல் விமான நிலையம்
காபூல் விமான நிலையம்

இந்தாண்டு உலகளவில் பெரிதும் பேசப்பட்ட வார்த்தைகள் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் என்றால் மறுக்க இயலாது. வரலாற்று பக்கங்களில் 2021ஆம் ஆண்டில் தவிர்க்க முடியாத சம்பவங்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது இடம்பெற்றுள்ளது. 

அமெரிக்க ஆதரவு அரசின் பதவி காலத்தில், ஆப்கானிஸ்தான் மக்கள் எந்தவித பலனையும் அனுபவிக்கவில்லை என்றாலும், தலிபான்களின் பிற்போக்குத்தன்மையான சட்டங்களிலிருந்து மீண்டு சுதந்திர காற்றை சுவாசிக்கத் தொடங்கிய நிலையில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தின் மீது 2001 செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு தான் அமெரிக்கா - தலிபான்களுக்கு இடையே முதன்முறையாக மோதல் ஏற்பட்டது. இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு தலிபான்கள் பாதுகாப்பு கொடுத்ததே இதற்கு காரணம்.

இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பின்பு செப்டம்பர் மாத இறுதிக்குள் பின்லேடனை ஒப்படைக்குமாறு ஆப்கனில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தலிபான்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை பொறுப்படுத்தாமல் இருந்த ஆப்கன் மீது அமெரிக்காவின் படைகள் தாக்குதல் நடத்தின. 2001 நவம்பர் 13ஆம் தேதி காபூலுக்குள் புகுந்த அமெரிக்க படைகள் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதன்பின், அமெரிக்க ஆதரவுடன் ஹமீத் கர்சாயின் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆப்கனின் பாதுகாப்பிற்காக லட்சக்கணக்கான வீரர்களை அமெரிக்கா அனுப்பியது. பல்லாயிரம் கோடி டாலா்களை செலவிட்டு ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் அமெரிக்கா கட்டமைத்தது.

ஆனால், ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளித்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பிற்கும், நாட்டு மக்களின் படிப்பறிவை மேம்படுத்தவும் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை.

தலிபான்கள்
தலிபான்கள்

இதனால், தலிபான் அமைப்புகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சேரத் தொடங்கியதன் விளைவு மீண்டும் தலிபான்கள் வலுப்பெற்று நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கினர்.

2018ஆம் ஆண்டு பாதிக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அவ்வப்போது அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தினாலும், இறுதியில் தலிபான்களின் கைகளே ஓங்கின.

இதன் பின்பும் தனது படைகளையும், அதற்கான செலவையும் இழக்க வேண்டாம் எனக் கருதிய அமெரிக்கா, பிப். 29, 2020இல் தலிபான்களுடன் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. அமெரிக்கப் படைகள் அடுத்த 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க | மீள்பார்வை 2021

அமெரிக்க அதிபராக 2020இல் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

டேனியல் சித்திகிக்கு அஞ்சலி
டேனியல் சித்திகிக்கு அஞ்சலி

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் ஊடகப் பிரிவுத் தலைவர் தாவா கான் மேனாபால், இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனியல் சித்திகி உள்ளிட்டோரை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.

2021 ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் பல முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றினர். ஏராளமான படைப் பிரிவுகள் மோதல் இல்லாமலேயே தலிபான்களிடம் சரணடைந்தன.

தலைநகரில் ரத்த வெள்ளத்தை ஏற்படுத்த விரும்பாததால் ஆட்சிப்பொறுப்பை விட்டு செல்வதாக தெரிவித்த அதிபா் அஷ்ரஃப் கனி, ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டைவிட்டு வெளியேறினார்.

அதிபர் மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள்
அதிபர் மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள்

இதையடுத்து, காபூலுக்குள் புகுந்த தலிபான்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர். மேலும், ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஆகஸ்ட் 16ஆம் தேதி தலிபான் செய்தி தொடர்பாளர் முகமது நயீம் அறிவித்தார். தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் பல எதிர்த்தாலும் பாகிஸ்தானும், சீனாவும் வரவேற்றனர்.

தலிபான்களின் ஆட்சியில் மீண்டும் பிற்போக்குத்தன்மையை சந்திக்க அச்சமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள காபூல் விமான நிலையத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் குவிந்தனர்.

காபூல் விமான நிலையத்தில் குவிந்த மக்கள்
காபூல் விமான நிலையத்தில் குவிந்த மக்கள்

விமான நிலையத்தில் குவிந்தவர்கள் யாரும் இந்த நாட்டிற்குத்தான் போக வேண்டும் என நினைக்கவில்லை. எந்த விமானத்தில் இடம் கிடைக்கின்றதோ அந்த நாட்டிற்குச் சென்று உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டனர்.

குழந்தைகள், பெண்களுடன் விமான நிலையத்தில் குவிந்த ஆப்கானியர்கள் எந்த விமானம் தரையிறங்கினாலும் அதில் முந்தியடித்து ஏறினர். கூட்டநெரிசலில் சிக்கிய பலர் தங்கள் உயிரைப் பலி கொடுத்தனர். மேலும் சிலர், அமெரிக்கா நாட்டினரை மீட்டுச் சென்ற விமானப் படையின் விமானத்தின் இறக்கையில் அமர்ந்து பயணம் செய்ய துணிந்ததன் விளைவு, வானிலிருந்து கீழே விழுந்து உயிரைப் பலி கொடுத்தனர்.

அமெரிக்க விமானத்தின் வெளிப்புறத்தில் ஏறிய ஆப்கன் மக்கள்
அமெரிக்க விமானத்தின் வெளிப்புறத்தில் ஏறிய ஆப்கன் மக்கள்

விமான நிலையங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்க படையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் கூட்டநெரிசலில் சிக்கி பலியாகினர். இந்த துயர சம்பவங்களை கண்ட சர்வதேச நாடுகள் அதிர்ந்து போயின.

இதையடுத்து தங்கள் நாடுகளை சேர்ந்த மக்களை திருப்பி அழைத்துச் செல்வதற்காக அனுமதி பெற்று சிறப்பு விமானங்கள் மூலம் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற தலிபான்கள் பள்ளிகளில் மாணவர்கள், மாணவிகள் ஒன்றாக அமர்ந்து படிக்க கூடாது போன்ற தங்களின் பிற்போக்குத்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கத் தொடங்கினர். இதற்கு அனைத்து நாடுகளிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல நாடுகளில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலிபான்களுக்கு எதிரான போராட்டம்
தலிபான்களுக்கு எதிரான போராட்டம்

இதற்கிடையே, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பொருளாதார உதவிகள் நிறுத்தப்பட்டதால் ஆப்கனில் சுமார் 1.4 கோடி மக்கள் தண்ணீர், உணவு, அடிப்படை மருத்துவ சேவை, போதிய ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியனவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர்  ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பிரச்னையில் சர்வதேச நாடுகள் தலையிடாவிடில் 10 லட்சம் குழந்தைகளுக்கு மேல் பலியாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், உலக நாடுகளுடன் தலிபான்கள் சமரச பேச்சுவார்த்தையை நடத்தி ஆப்கனுக்கான பொருளாதார உதவிகளை விரைந்து பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com