மீண்டும் 5 ஆண்டுகள்: கிழக்கே மம்தா, தெற்கே பினராயி

2021ஆம் ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், அஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மீண்டும் 5 ஆண்டுகள்: கிழக்கே மம்தா, தெற்கே பினராயி

2021ஆம் ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், அஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை நிலைநாட்டவும், ஆளுங்கட்சியை அகற்றி அரியாசனத்தை கைப்பற்றவும் பல்வேறு விதமான உத்திகளை அனைத்து தேசிய, மாநில கட்சிகளும் மேற்கொண்டன.

தேசிய கட்சிகளை பொறுத்தவரை தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் போன்ற பெரிய மாநிலங்களில் பெரும் வெற்றியானது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இருந்தது எனக் கூறினால் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.

அதேபோல், மாநில கட்சிகளுக்கு இத்தேர்தலில் பெரும் வெற்றியின் மூலம் தனது கட்சியை பிற மாநிலங்களில் விரிவுப் படுத்தும் எண்ணமும், தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் எண்ணமும் நிலவின. குறிப்பாக மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸின் தலைவர் மம்தா பானர்ஜி இந்த தேர்தலின் வெற்றியின் மூலம் பல கணக்குகளை போட்டு வைத்திருந்தார்.

மேற்கு வங்கம் 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றன.

இந்த தேர்தலில் ஆளும் திரிணமூல், பாஜக கூட்டணி, கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி என மூன்று பெரும் கூட்டணிகள் மும்முனை போட்டிகளை எதிர்கொண்டன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் பெற்ற வெற்றியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற நோக்கத்தில் பாஜக களம்கண்டது. மறுபக்கம் இழந்த தனது கோட்டையை எப்படியாது மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்நோக்கியது.

இதற்கிடையே தேர்தலுக்கு முன்பே திரிணமூலின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் மம்தாவின் ஆட்சி பறிபோய்விடுமோ என்ற எண்ணம் அனைவரின் மத்தியிலும் ஒருபக்கம் தோன்றத் தொடங்கியது.

ஆனால் நடந்ததோ வேறு. சுமார் 215 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வரானார் மம்தா பானர்ஜி. இருப்பினும், 77 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2011ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பெற்றதைவிட 74 தொகுதிகளில் அதிகமாக வெற்றியை பதிவு செய்து எதிர்க்கட்சியாக தன்னை அமர்த்திக் கொண்டது பாஜக.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க மார்க்சிஸ்ட் கம்யூ. - காங்கிரஸ் கூட்டணி ஒரு இடங்களிலும் வெற்றி பெறாமல் படுதோல்வியைத் தழுவியது. 

இதற்கிடையே, கீழே விழாமலேயே மீசையில் மண் ஒட்டியது போன்று முதல்வர் வேட்பாளர் மம்தா தோல்வியை தழுவினார். தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

இந்த மாபெரும் வெற்றியின் மூலம், தன்னை அசைக்க முடியாத சக்தியாகவும், நிராகரிக்க முடியாத தலைவராகவும் மாற்றிக் கொண்ட மம்தா பானர்ஜி, தனது தேசிய அரசியலுக்கான பயணத்தை தொடர்கிறார். 

கட்சிகள்வெற்றி பெற்ற தொகுதிகள்
திரிணமூல் காங்கிரஸ்215
பாஜக77
காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்-

கேரளம்

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றன.

மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் பறிபோனது போல் கேரளத்தில் தனது ஆட்சி பறிபோகக் கூடாது என்ற நோக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தலில் களமிறங்கியது.

2019 மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்ற பிரசாரத்தை மேற்கொண்டது. காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் வேட்பாளராக போட்டியிட்டது கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, கேரளத்தில் எப்படியாவது இரட்டை இலக்கு வெற்றியை பதிவு செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் மெட்ரோ மேன் என்றழைக்கப்படும் ஸ்ரீதரனை தனது கட்சியின் முதல்வர் வேட்பாளராக பாஜக நிறுத்தியது.

ஆனால், அனைத்து விமர்சனங்களையும் மீறி 99 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் 41 இடங்களை மட்டுமே வென்றது.

கடந்த 2016 தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த பாஜக இம்முறை அனைத்து தொகுதிகளிலும் தோற்றது.

பல ஆண்டுகளுக்கு பிறகு கேரளத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த மார்க்சிஸ்ட் கூட்டணியின் முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றார். ஆனால், கடந்த அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றி நாடு முழுவதும் பிரபலமான சைலஜா உள்பட யாருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

கட்சிகள்வெற்றி பெற்ற தொகுதிகள்

இடது ஜனநாயக முன்னணி

மார்க்சிஸ்ட் - 62

இந்திய கம்யூ. - 17

பிற - 20

99

ஐக்கிய ஜனநாயக முன்னணி 

காங்கிரஸ் - 21

ஐயுஎம்எல் - 15

பிற - 5

41
பாஜக-

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவையின் 30 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்ததால், பெரும்பான்மையை இழந்த முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், பிப்ரவரி 22, 2021 முதல் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் வலுவான ஆளுங்கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் தேர்தலில் களமிறங்கியது.

மறுமுனையில், என்.ஆர்.காங்கிரஸுடன் இணைந்து புதுவையில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்தித்தது.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்பின் கடும் இழுபறிக்கு மத்தியில் என்.ஆர்.காங்கிரஸின் ரங்கசாமி முதல்வராக மீண்டும் பதவியேற்றார்.

கடந்த 2016 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்த அதிமுக இம்முறை போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. திமுக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கட்சிகள்வெற்றி பெற்ற தொகுதிகள்

தேசிய ஜனநாயக கூட்டணி

என்.ஆர். காங். - 10

பாஜக - 6

16

ஐக்கிய முற்போக்கு கூட்டணி

காங்கிரஸ் - 2

திமுக - 6

பிற - 1

9
சுயேட்சைகள்5

அசாம்

அசாம் மாநிலத்தில் பெரும்பாலான தொகுதிகள் மலைப் பகுதிகளில் உள்ளதால் மொத்தம் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெரும் நோக்கில் பாஜக கூட்டணியும், மீண்டும் தான் இழந்த ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கூட்டணியும் களம்கண்டது.

வாக்கெண்ணிக்கை முடிவில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. இருப்பினும், கடந்த 2016 தேர்தலைவிட 11 தொகுதிகள் குறைவாகவே வெற்றி பெற்றது.

இதையும் படிக்க | மீள்பார்வை 2021

இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற போதிலும், சர்பானந்த சோனாவாலுக்கு பதில், முதல்வர் பொறுப்பு ஹிமந்த விஸ்வ சர்மாவுக்கு அளிக்கப்பட்டது.

கட்சிகள்வெற்றி பெற்ற தொகுதிகள்

தேசிய ஜனநாயக கூட்டணி

பாஜக - 60

அசோம் கண பரிஷத்--9

ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்)--6

75

ஐக்கிய முற்போக்கு கூட்டணி

காங்கிரஸ் - 29

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி -16

போடோலாந்து மக்கள் முன்னணி -4

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -1

மற்றவை -1

 

50
சுயேட்சை1

தொடர்ந்து வருகின்ற 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் சட்டப்பேரவைகளுக்கும் இரண்டாம் பாதியில் ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடைபெறவுள்ளன.

இந்த தேர்தல்களின் வெற்றிதான் 2022இல் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com