லக்கிம்பூர் கலவரம்: வன்மம் கடந்துள்ள பாதை!

2020-ல் நடைபெற்ற மறக்கமுடியாத கோரமான நிகழ்வுகளில் ஒன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த விவசாயிகள் மீது பாஜகவினர் கார் ஏற்றிக்கொன்ற லக்கிம்பூர் சம்பவம்.
லக்கிம்பூர் கலவரம்: வன்மம் கடந்துள்ள பாதை!

2020-ல் நடைபெற்ற மறக்கமுடியாத கோரமான நிகழ்வுகளில் ஒன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த விவசாயிகள் மீது பாஜகவினர் கார் ஏற்றிக்கொன்றது. இந்த சம்பவங்களுக்கு பிறகு நடந்த போராட்டங்களும், அதன் விளைவால் அதிகாரத்தின் முகத்திரை கிழிந்து அடுத்தடுத்து அம்பலமான உண்மைகளும் ஏராளம்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்போது மிக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு திரும்பப் பெற்றுள்ளது. ஆனால் அதற்காக நடந்த போராட்டங்களிலும், இழப்புகளிலும் லக்கிம்பூர் கெரி சம்பவம் முக்கியமானது. 

போராட்டக்களத்தில் விவசாயிகள்
போராட்டக்களத்தில் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் அக்டோபர் 3-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லக்கிம்பூரில் அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை, அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

அப்போது ஆஷிஸ் மிராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவியது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான நீண்ட போராட்டத்திற்கு இடையே பாஜகவினரின் இத்தகைய செயலால், ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினரின் கார்களுக்கு தீ வைத்தனர். இதனால் வெடித்த வன்முறையில் பத்திரிகையாளர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்தது. 

உயிரிழந்த விவசாயிகள்
உயிரிழந்த விவசாயிகள்

விவசாயிகள் மீது காரை ஏற்றிய செயல் தற்செயலானது அல்ல, அது திட்டமிட்ட சதி என்பது பின்னாளில் நடைபெற்ற விசாரணையில் அம்பலமானது. இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு

லக்கிம்பூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால், அவர்கள் யாருக்குமே அப்போது பாஜக அரசு அனுமதி வழங்கவில்லை. யோகி ஆதியநாத் தலைமையிலான அரசு புத்திசாலித்தனமாக அப்பகுதியில் யாரும் நுழையாத வகையில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், என விவசாயிகளை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக அவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். 

படுகொலையில் பாஜகவின் நாடகம்

விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவத்தின்போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா, காரில் இல்லை என்று பாஜக நாடகத்தை அரங்கேற்றியது. ஆனால் இந்தசம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ அடிப்படையிலான விசாரணையில் ஆஷிஸ் மிஸ்ரா காரில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

விவசாயிகள் மீது கார் மோதும் காட்சி
விவசாயிகள் மீது கார் மோதும் காட்சி

பின்னர், ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர். ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த சம்பவத்தில் ஆரம்பகட்டத்தில் தடயவியல் விசாரணை கூட நடத்தப்படாமல் இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைபேசியைக் கூட பறிமுதல் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் உச்சநீதிமன்றம் லக்கிம்பூர் சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது.

லக்கிம்பூர் கலவரத்தில் துப்பாக்கிகள்?

லக்கிம்பூர் சம்பவத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றியபோது, துப்பாக்கியும் பயன்படுத்தப்பட்டது என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உடலில் குண்டுப்பட்ட காயங்கள் இல்லை என்று உடற்கூராய்வு முடிவுகள் தெரிவித்தன. 

ஆனால், உத்தரப் பிரதேச காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு சிறையில் அடைக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றிய நான்கு துப்பாக்கிகளையும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பி வைத்தது. 

கலவரத்தில் தீப்பிடித்து எரியும் கார்
கலவரத்தில் தீப்பிடித்து எரியும் கார்

அதன் ஆய்வக முடிவில், ஆஷிஸின் துப்பாக்கி, முன்னாள் மத்திய அமைச்சர் அகிலேஷ் தாஸின் மருமகன் அங்கித் தாஸின் துப்பாக்கி மற்றும் தாஸின் பாதுகாவலர் லத்தீஃப் வைத்திருந்த துப்பாக்கி ஆகியவற்றிலிருந்து தோட்டாக்கள் வெளியேறியது கண்டறியப்பட்டது. 

கலவரத்தில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது என்று விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது யாரும் அதனை பெரிதுப்படுத்தவில்லை. ஆனால் தடய அறிவியல் அறிக்கை இதனை உறுதி செய்தது.

விவசாயிகள் மீது காரை ஏற்றியது திட்டமிட்ட சதி

லக்கிம்பூர் விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்த குழு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என இரு தரப்பிலும் விசாரணை நடத்தியது. 

இதில் விவசாயிகள் போராட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என கடந்த 12-ஆம் தேதி சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் உள்ளிட்ட 13 குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றவும் இக்குழு பரிந்துரை செய்தது.

நாடாளுமன்றத்தில் லக்கிம்பூர் விவகாரம்

கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செயப்பட்டதைக் கண்டித்து எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். 

இதற்கு மத்தியில் லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை, திட்டமிட்ட சதி என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்ததையடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தாக்கல் செய்தார். மிஸ்ரா ராஜிநாமா செய்ய வலியுறுத்தி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியிலும் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி
நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி

அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் மக்களவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக கோரி கடந்த வாரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அடுத்தடுத்த அமளியால் ஒரு நாள் முன்னதாகவே நாடாளுமன்ற  கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே டிச.22-ஆம் தேதியுடன் நிறைவுசெய்யப்பட்டது.

உரிய தண்டனை தேவை

லக்கிம்பூர் கலவரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் - ஹரியாணா நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான ராகேஷ் குமார் ஜெயின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

லக்கிம்பூரில் விவசாயிகளைக் கார் ஏற்றிக் கொன்றது திட்டமிட்ட சதிதான் என்று அடுத்தடுத்து உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டன. இதனிடையே சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான ஆஷிஸ் மிஸ்ரா உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உண்மைகள் அடுத்தடுத்து வெளிவரும்போது, இத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொண்டு அதிகார வர்க்கத்தினர் குற்றத்திலிருந்து தப்பிக்கும் வழிகளை மேற்கொள்வது அல்லது விசாரணை காலத்தை அதிகரித்து நீர்த்துப்போகச் செய்வது வாடிக்கையானது. ஆனால் கிடைக்க வேண்டிய நீதி அவசியத் தேவையானது.

விவசாயிகள் மீது கார் மோதிய காட்சிகள்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com