2021 - நடிகர்களின் ஆண்டு : காரணம் என்ன ?

2021 ஆம் ஆண்டு வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்து ஒரு பார்வை. 
2021 - நடிகர்களின் ஆண்டு : காரணம் என்ன ?

பொதுவாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை இரண்டு வகையாக வகைப்படுத்துவர். அதில் ஒன்று, அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படங்கள். மற்றொன்று வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள். ஆனால் அவை இரண்டும் 2021 ஆம் ஆண்டு ஒரே பாதையில் இணைந்திருக்கின்றன.

இதற்கு முக்கியமான காரணம் நடிகர் ரஜினிகாந்த். லிங்கா தோல்விக்கு பிறகு பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் என இளம் இயக்குநர்களுடன் இணைகிறார் ரஜினிகாந்த். அந்த முடிவு அவருக்கு பெரிதும் கைகொடுக்கிறது. கமர்ஷியல் படங்கள் மூலம் மற்ற நடிகர்களுக்கு அவர் எப்படி முன்னோடியாக இருந்தாரோ அதனைப் போலவே, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மற்ற நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்தார் ரஜினிகாந்த். 

அவரைப் பின்பற்றி பிற நடிகர்களும் கதைகளில் கவனம் செலுத்தத் துவங்குகின்றனர்.  இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டு வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிய வெற்றிபெற்றன. 2021 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்து ஒரு பார்வை. ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படம் வசூல் ரீதியாக வெற்றி படம் என்று கூறப்படுகிறது. அது இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. காரணம் அண்ணாத்த வழக்கமான பாணியிலான கமர்ஷியல் படம். 

மாஸ்டர் 

தமிழின் முன்னணி நடிகரான விஜய், தமிழில் இரண்டே படங்களை இயக்கிய (மாஸ்டர் படத்தில் ஒப்பந்தமானபோது இயக்குநர் லோகேஷின் கைதி படம் வெளியாகவில்லை) லோகேஷ் கனகராஜுடன் இணைந்த படம் மாஸ்டர். அதுவரை அனைத்து தரப்பினரையும் கவரக் கூடிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் முதன்முறையாக வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தில் மது அருந்துபவராக, நடக்கும்போது தடுமாறி கீழே விழுபவராக என அதுவரை தனது பிம்பங்களை முற்றிலும் மாற்றிக்கொண்டு நடித்தார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அவரது காட்சிகளுக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் அனிருத்தின்  பாடல்களும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது. இந்தப் படத்தில் பெண்களின் உடை குறித்து ஒரு வசனம் பேசியிருப்பார். அதனை சிவகாசி படத்தில் அசினின் உடையை விமர்சிக்கும் காட்சியுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. இந்தப் படம் ரசிகர்களை முழுவதுமாக கவரவில்லையெனினும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. 

கர்ணன்:

தனுஷ் தொடர்ச்சியாக வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்திருக்கிறார். அவை பெரும்பாலும்  இயக்குநர்கள் செல்வராகவன், வெற்றி மாறன் படங்கள் மட்டுமே அடங்கும்.  அவர்கள் தவிர்த்து கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படங்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அதிக கவனம் பெற்றது கர்ணன். 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற கொடியங்குளம் கலவர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.

இந்தப் படத்தில் கர்ணன், கண்ணபிரான் என மகாபாரத கதாப்பாத்திரங்களை நினைவுபடுத்தும் விதமாக பெயர் அளிக்கப்பட்டிருக்கும். ஒரு உண்மை சம்பவத்தை அதன் வீரியம் குறையாமல் காட்சிப்படுத்திய வீதத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது கர்ணன். இந்தப் படத்தில் ஆண்டை தவறாக குறிப்பிட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. சந்தோஷ் நாராயணின் இசை இந்தப் படத்துக்கு பக்கபலமாக அமைந்தது. 

சர்பட்டா பரம்பரை 

ஆர்யாவுக்கு பெயர் பெற்றுத் தந்தது எல்லாம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் தான். அந்த வகையில் சார்பட்டா பரம்பரை அவரது திரையுலகில் முக்கியமான படமாக அமைந்தது. காரணம் ஒரு குத்து சண்டை வீரராக தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றிக்கொண்டு நடித்திருந்தார் ஆர்யா.

காலா படத்துக்கு பிறகு சுமார் 3 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் பா.ரஞ்சித் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 1970களின் காலக்கட்டத்தை தத்ரூபமாக பதிவு செய்தது இந்தப் படம். நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. 

டாக்டர்:

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேரடியாக திரையரங்குகளில் வெளியான படம் டாக்டர். எல்லா சிவகார்த்திகேயன் படங்களைப் போலவே நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் வித்தியாசம் என்னவென்றால் சிவகார்த்திகேயன் நகைச்சுவை செய்யவில்லை.

மிகவும் சீரியஸான கதை என்றாலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருந்தார் நெல்சன். குறிப்பாக படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். ஆனால் அனைத்தையும் அசத்தலான நகைச்சுவை காட்சிகள் மூலம் மறக்கடித்திருக்கிறார் இயக்குநர். 

ஜெய் பீம்: 

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் ஜெய் பீம். இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகியிருந்தது. தொடர் தோல்விகளில் இருந்த சூர்யாவுக்கு கடந்த வருடம் வெளியாகியிருந்த சூரரைப் போற்று திரைப்படம் புதிய நம்பிக்கையை அளித்திருந்தது. அந்த வகையில் சூர்யா தேர்ந்தெடுத்த நடித்த படம் தான் ஜெய் பீம். இந்தப் படத்தில் அவருக்கு காதல் காட்சிகள் இல்லை. பாடல்கள் இல்லை. ஒரு வழக்கறிஞராக மட்டும் தனது வேடத்தை சிறப்பாக செய்திருந்தார் சூர்யா. 

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. பழங்குடியின மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவது குறித்து பேசிய இந்தப் படம் மிக முக்கிய பதிவாக அமைந்தது. இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இருப்பினும் இந்தப் படத்துக்கு இந்தியா முழுவதும் இருந்து திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் படத்தை பாராட்டி கருத்து தெரிவித்தனர். 

மாநாடு: 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு. தனிப்பட்ட பிரச்னை, திரைப்படங்களின் தோல்விகள் என அவதிப்பட்டு வந்த சிம்புவுக்கு திருப்புமுனை ஏற்படுத்தியிருக்கிறது மாநாடு.

பழைய பாணி கதை தான் என்றாலும், டைம் லூப் என்ற முறையில் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு படத்தை மேலும் சுவாரசியப்படுத்தியது. யுவனின் பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com