12. தெய்வமகள்

ஆணாக இருந்தாலும் தன்னைப் பெண்ணாகப் பாவித்து இறைவனைக் காதலித்த அருளாளர்கள் முதல், தன் மகனாக நினைந்து கண்டித்த அருளாளர்கள் வரை பலதரத்துப் பெரியோர்கள் தமது இறைநெறியைக் காட்டிநின்ற மண் இது.
12. தெய்வமகள்

பொதுவாக, தெய்வத்தை நம்முடைய உறவுமுறையாக எண்ணிப் பார்ப்பதே ஒரு சுவைதான். தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக, நண்பனாக இப்படி அவரவர் மனத்துக்குத் தகுந்தபடி தெய்வத்தை எண்ணிப்பார்ப்பது ஒருவிதமான பக்தி. அத்தகைய பக்தி வெளிப்பாடே சிறந்த அளவிலும் நன்னெறியில் கொண்டு சேர்க்கும். அத்தகைய பக்தி பூண்டவர்களாகப் பல அருளாளர்களைப் பார்க்கிறோம்.

ஆணாக இருந்தாலும் தன்னைப் பெண்ணாகப் பாவித்து இறைவனைக் காதலித்த அருளாளர்கள் முதல், தன் மகனாக நினைந்து கண்டித்த அருளாளர்கள் வரை பலதரத்துப் பெரியோர்கள் தமது இறைநெறியைக் காட்டிநின்ற மண் இது. இதில் வரலாற்று ரீதியாகவும் இத்தகைய உயர்நெறி பொதுமக்களிடையேயும் இருந்தமையை அறிந்துகொள்ள முடிகிறது.

‘இத்தளி தேவனார் மகள்’ என்று தம்மைக் குறிப்பிட்டுக்கொள்ளும் கல்வெட்டுகள் பழுவூரில் உள்ளன. இவை இறைவனாரைத் தந்தையாகக் கருதும் தன்மைக்கு எடுத்துக்காட்டு. இதனைப் போலவே, மற்றொரு அருள் சுரக்கும் உள்ளமொன்று, உலகன்னையாம் உமையன்னையைத் தனது மகளாகக் கருதிய செய்தியைக் குறிப்பிடுகிறது. கருந்திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டு இந்தச் செய்தியைத் தருகிறது. உத்தம சோழனின் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு, இதற்கான செய்தி முதலாம் பராந்தகனின் காலத்தில் நிகழ்ந்ததைக் குறிப்பிடுகிறது.

தேவியாரின் மகளான சிலவையார் என்பார் தனது மகளான உமாபட்டாரகியாருக்கு, அதாவது உமையன்னைக்கு நிலம் கொடுத்ததைப் பற்றி இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மனான முதலாம் பராந்தகனின் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டில், சிலவையார் மணலொக்கூர் என்னும் ஊரின் ஊர்மன்றத்தில் இருந்து நிலத்தை வாங்கினாள் அந்தப் பெருமாட்டி. அதனைத் தடைபடாமல் வரியின்றி காத்து, இறைவிக்கு வேண்டுவன செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான படியோலை, திருநறையூர்நாட்டு மூவேந்தவேளானிடம் இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமல் போக, அவன் கைத்தீட்டை அதாவது ஆவணமான ஓலையைக் காட்டினான். இதை சிறுவேலூருடையான் என்பவனிடமும் காட்டினான். கோயில் அதிகாரிகளும் கரணத்தானும், இந்தச் செய்தியை கல்லில் வெட்டச் சொன்னார்கள். இதற்கு ஒப்புக்கொண்டவர்கள் கையெழுத்தும் இட்டனர் என்று கல்வெட்டு கூறுகிறது.

கருவிட்டகுடி மஹாதேவர்க்கு தேவியார் மகளார் சிலவையார் தம் மகளார் உமாபட்டாரகியார்க்கு மதுரைகொண்ட கோப்பரசேகரி வர்மருக்கு யாண்டு 38-ஆவது ஆவூர் கூற்றத்து மணலொக்கூர் ஊராரிடை விலைகொண்ட பூமியால் தடையுமிடைஞ்சலும் படாமே இறியில் காத்தூட்டுவதாக தந்த கைத்திட்டு திருநறையூர் நாட்டு மூவேந்த வேளான் வாழைக்கண்ணாற்று ஓலை என்வசம் இருந்ததென்று மதினாயகம் செய்கின்ற சிறுவேலூருடையானுக்கு கைத்திட்டு காட்ட...

அதாவது, பொ.நூ. 945-இல் உமையன்னையைத் தனது மகளாகக் கருதிய சிலவையார், அவளுக்கு நிலத்தை அளித்தாள். அதற்கான கல் வெட்டப்பெற்றது பொ.நூ. 985-இல். அதாவது, நாற்பது வருடங்களுக்குப் பிறகு அதற்கான ஓலையை வைத்து கல்வெட்டு வெட்டி மீண்டும் கொடையைப் புதுப்பித்திருக்கிறார்கள். ஆக, நாற்பது வருடங்கள் கடந்தாலும் எவரும் கைப்பற்றிக்கொள்ளாமல் இறைவிக்கு நிலம் கிடைத்தது வெறும் செய்தி. இறைவியையே தனது மகளாக நினைந்து அவளுக்கு வேண்டுவன செய்வதற்காக நிலத்தையும் தானமாக அளித்த செய்தி திருச்செய்தி.

இப்படி ஒரு பக்திச் செழிப்போடு நாடு திகழ்ந்திருந்ததால்தான், கோயில் நிலங்களும் ஆக்கிரமிக்கப்படவில்லை; அவை பல்லாண்டுகள் கழித்தும் மீண்டும் கோயில்களுக்குக் கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com