9. இறுதிச் சூளுரை

மைசூர் அருகே உள்ள பெளத்தூர் என்னும் இடத்தில் ஒரு கன்னடக் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு இரண்டாம் இராசேந்திரனின் காலத்தைச் சேர்ந்தது.
9. இறுதிச் சூளுரை

வரலாற்றில் பல்வேறு சூளுரைகளைப் பார்க்கமுடியும். எதிரிகளை வெல்லாமுன் இவை செய்யேன் என்று விலக்கிக் கூறும் சூளுரைகள் பலவுள. அவற்றுள், உடன்கட்டை ஏறும் முன் அரசி ஒருவள் செய்த சூளுரை தனியிடம் பெற்றது.

ஒல்லையூர் தந்த பூதபாண்டியன் இறந்துபட்டனன். கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி. பெருங்கோப்பெண்டான அவள் உடன்புக முற்பட்டனள். உடனிருந்த பெரியோர் தடுத்தனர். அவள் உடனே அவர்களைக் கண்டு சூளுரைத்தாள். பண்பு பல பயந்த பெரியோர்களே, நீயும் செல் என்று கூறாமல் செல்லாதே என்று தடுக்கிறீர்களே, நீங்கள் சூழ்ச்சியை உடையாரல்லவோ, நெய்யற்ற உண்டியை எள்துவையோடும் புளிப்பெய்து சமைத்த வேளைக்கீரையை உண்டு கைம்மை நோற்பேனென்று நினைந்தீரோ. அவன் மறைந்த தீயெனக்கு தாமரைப் பொய்கை என்று கூறினாள். இதற்கான பாடல் புறநானூற்றில் அமைந்திருக்கிறது.

பல்சான் றீரே பல்சான் றீரே

செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்

பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே

துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட

காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது   

அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்

வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை வல்சி ஆகப்

பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்

உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

நுமக்குஅரிது ஆகுக தில்ல எமக்குஎம்

பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற

வள்இதழ் அவிழ்ந்த தாமரை

நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே

என்று பொய்கையையும் தீயையும் ஒன்றாகக் குறிப்பிட்டு அவள் கூறிய வஞ்சினம், இன்றளவும் கவியுணர்ந்தார் சித்தத்தைக் கரைப்பது. இத்தகையதோர் மரபு கல்வெட்டிலும் காணப்பெறுவது உணர்ந்து மகிழத்தக்கது. சோழர் காலத்தில் உடன்கட்டை ஏறுதலும் நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. இராசராச சோழனின் தாயான வானவன்மாதேவி, கணவனான சுந்தர சோழனோடு உடன்கட்டை புகுந்தாள். முதலாம் இராசேந்திரனின் மனைவியான வீரமாதேவியும் அவனோடு உடன்கட்டை புகுந்தாள்.

மைசூர் அருகே உள்ள பெளத்தூர் என்னும் இடத்தில் ஒரு கன்னடக் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு இரண்டாம் இராசேந்திரனின் காலத்தைச் சேர்ந்தது. இதிலுள்ள வானியற் குறிப்புகளைக் கொண்டு, இதன் காலம் பொ.நூ. 1057 அக்டோபர் 27 ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பெற்றிருக்கிறது. இந்தக் கல்வெட்டு, குடிய இன மக்களின் இரு குடும்பங்களைப் பற்றிய தகவலைத் தருகிறது. அவசம் என்னும் குடும்பத்தைச் சேர்ந்த இரவிகனுக்கு மகளாகப் பிறந்தவள் தெகப்பே என்பவள். இரவிகன், சோழர்களால் வழங்கப்பெற்ற பதவிகளையும் விருதுகளையும் உடையவன். அவள் குறுவந்த குலத்தைச் சேர்ந்த ஏசனை மணந்தாள். அவன் மனுவையொத்தவன். நவல நாட்டின் தலைவன். ஆனால், ஊழ்வினையால் அரச குடும்பத்தவனோடு மல்யுத்தத்தில் ஈடுபட்டபோது, இவனால் அவன் கொல்லப்பட்டான். அதைக் கண்ட அரசன், ஏசனைக் கொல்ல ஆணையிட்டான். தலைக்காட்டில் அவன் கொல்லப்பட்டான்.

இதனைக் கேட்டு வெகுண்டாள் தெகப்பே. கணவனோடு உடன்கட்டை புக முனைந்தாள். மரபுக்கே வேளாகத் திகழ்ந்த கணவன் இறந்ததை எண்ணி எண்ணி மருகினாள். அப்போது அவளுடைய பெற்றோர் அவளைத் தடுத்தனர். வெகுண்ட அவள், இரு குல மாந்தர் காணும்படி நான் வாழமாட்டேன் என்று சூளுரைத்தாள். பிறகு அந்த தாமரை முகத்தாள் தன் செல்வத்தையும் மற்றைய பொருட்களையும் இறைவனுக்கு விளக்கேற்றுவதற்காகவும் மற்றைய திருப்பணிகளுக்காகவும் விடுத்தாள். மற்றையோர் போகாதே என்று தடுக்க, பெருங்கோப்பெண்டைப் போலவே செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும் என்ற வரிகளையே கூறியதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதன் பிறகு அவள் அழகையும் அவள் திறத்தையும் கல்வெட்டு புகழ்ந்து அவள் கற்பு திருமகள், மலைமகள், இந்திராணி, சீதை மற்றும் இரதி தேவிக்கு ஒப்பானதென்று புகழ்கிறது. பிறகு அவளுடைய தகப்பன் அவளுடைய நினைவாக தூணை எடுப்பித்து அதில் கல்வெட்டையும் பதித்தமை அறியக்கிடக்கிறது.

ஆக, சங்க கால இலக்கியமான புறநானூறு கூறும் அதே வடிவம், பெருங்கோப்பெண்டு சூளுரைத்த அதே வடிவம் இங்கேயும் கல்வெட்டில் பயின்று வந்திருக்கக் காணலாம். உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒவ்வாத செயலெனினும், இந்தக் கவிநயமும் அது பயின்று வந்திருக்கும் காலகட்டமும் கன்னட தேயத்திலும் ஒருமையோங்கும் செய்தியும் நமக்கு வரலாறு காட்டி நிற்கும் வண்ணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com