8. ஏரி பாதுகாப்பு

ஏரி மடைகளை உடனே அடைத்தல் நல்லது. இப்படி அடைப்பதற்கு அரசாங்கத்தை எதிர்பாராது, ஊரில் உள்ள பெருமக்களே முன்னின்று அடைத்தால், பணி விரைவிலும் நடக்கும். பயனும் அளிக்கும்.
8. ஏரி பாதுகாப்பு

நீர்நிலைகளே நாட்டின் உயிரோடும் நாடி. வானம் பார்த்த பூமிக்கெல்லாம் வாழ்வளிப்பது ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள்தானே. ஆகவேதான், அவற்றைப் போற்றிப் பாதுகாப்பது நமது கடமையாகிறது. இந்தச் செயலைப் பல்வேறு மன்னர்களும் தனிமனிதர்களும் மேற்கொண்டமையைக் கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. ஏரிகளைப் பழுதுபார்த்த செய்தியும், அவை உடைந்துபட்டபோது கரையெழுப்பிய செய்தியும் நிறைய கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.

இத்தகையதோர் பழுதுபார்ப்பு 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவனான கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இந்தக் கல்வெட்டு, புதுச்சேரியை அடுத்த திரிபுவனியில் உள்ள வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்வெட்டு, பதிமூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியைச் சேர்ந்த அவனி ஆளப்பிறந்தானான கோப்பெருஞ்சிங்கனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு, இந்த அரசன் கர்நாடக - ஆந்திர மன்னர்களை வென்றமையைக் குறிப்பிடுகிறது. பிறகு, திரிபுவனமகாதேவி சிற்றூரில் உள்ள ஏரியின் கரையில் ஏரம்ப கணபதிக்கு அரசன் ஒரு கோயிலை எடுப்பித்து, ஏரியின் கரைகளையும் மதகுகளையும் கலிங்குகளையும் பழுதுபார்த்ததாகக் குறிப்பிடுகிறது.

திரிபுவனமாதேவி ஏரிக்கரை பல இடங்களிலும் உடைந்து, ஏரியும் துகுந்து மதகுகளும் முறிந்து கலிங்குகளும் அழிந்து கிடக்கையில் உடைந்த மடைகளும் அடைத்து ஏரியும் கல்லி கரையும் கற்கட்டி மதகுகளுமட்டுவித்து கலிங்குகளும் செய்தபடி என்பது கல்வெட்டு வரி.

திருவக்கரையில் உள்ள அதே அரசனின் மற்றொரு கல்வெட்டு, அங்குள்ள ஏரியை அவன் பழுதுபார்த்ததைக் குறிப்பிடுகிறது.

இந்தக் கல்வெட்டு, அரசனைக் காடவன், அவனியாளப்பிறந்தான், கட்கமல்லன் மற்றும் கிருபாணமல்லன் என்றும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு ஒழுகறையில் அமைந்த ஏரிக்கு மதகும் கட்டுவித்து, அதை நிரப்ப வாய்க்காலும் கட்டுவித்த செய்தியைத் தருகிறது. அந்த வாய்க்காலுக்கு திரிபுவன நிருபநாதன் என்று பெயரும் வைத்ததைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஒழுகறையும் புதுச்சேரிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த ஊர் கல்வெட்டுகளில், குலோத்துங்க சோழ நல்லூர் என வழங்கப்பெற்றுள்ளது.

இவ்விதம், ஏரிகளைப் பழுதுபார்த்தும், உடைந்தபோது கரையெடுப்பித்தும் நம்முடைய அரசர்கள் பாதுகாத்தனர்.

பொதுவாக, பெருமழை பொழிந்து ஏரிகள் நிரம்பிய பின்னர் மடையுடைந்து நீர்பெருகி வெள்ளமாகும். அத்தகைய ஏரி மடைகளை உடனே அடைத்தல் நல்லது. இப்படி அடைப்பதற்கு அரசாங்கத்தை எதிர்பாராது, ஊரில் உள்ள பெருமக்களே முன்னின்று அடைத்தால், பணி விரைவிலும் நடக்கும். பயனும் அளிக்கும். அத்தகையதோர் நிகழ்ச்சி மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் பதிநான்காம் ஆட்சியாண்டில் நிகழ்ந்தேறியது. இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் என்னும் ஊரில் நிகழ்ந்தது. அவ்வூரில் உள்ள சோமநாதேசுவரர் கோயிலில் உள்ள மண்டபத்தின் கீழைச்சுவரில் அமைந்துள்ள கல்வெட்டு இதற்கு ஆவணமாக அமைந்துள்ளது. இவ்வூரின் மறுபெயர் பஞ்சநதி வாண சதுர்வேதி மங்கலம் என்பதாம். இவ்வூரில் இருந்த திருச்சுரகண்ணப்பன் திருவேகம்பமுடையான் காமன் கண்டவானவன் என்பான் இந்த அறச்செயலை மேற்கொண்டான்.

பன்னிரண்டாவது பெருவர்ஷம் பெய்து ஒரு நாளே ஏழிடத்தில் பெருமடையாக உடைந்த இது திருச்சுரக்கண்ணப்பந் திருவேகம்பமுடையான் காமன் கண்டவானவன் இம்மடை ஏழும் அடைப்பித்து பதின்மூன்றாவதும் ஏரி நிறைந்து இரண்டிடத்தில் உடைந்ததுவும் அடைப்பித்து இவ்வேரி பதிநாலாவது தைம்மாஸத்து திருச்சுரகண்ணப்பந் திருவேகம்பமுடையான் காமன் கண்டவானவன் பக்கல் இவ்வூர் மஹாஸபையோம் பொலியூட்டாகக் கைக்கொண்ட பழங்காசு என்று, அவன் ஏரி உடைந்ததை அடைவித்து மேற்கொண்டு அது உடையாமல் இருக்க மராமத்து முதலியவற்றை மேற்கொள்ள நாற்பது காசுகளையும் முதல் வைத்த செய்தி கல்வெட்டில் பதிவாகியிருக்கிறது. ஆக, அரசாங்கம் செய்யும் என்றில்லாமல், அருஞ்செல்வமுடையோர் தாமே முன்வந்து இத்தகைய பொதுச் செயல்களை மேற்கொண்டால் நாடும் வீடும் வளம் பெறுமல்லவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com