4. அறம் செய விரும்பு

அறச்செயலை மேற்கொண்டால் அறம் எப்படி காப்பாற்றும், நிலைத்த புகழ் எப்படி நேரும் என்பதற்கு மங்கையர்க்கரசியும் நாற்பத்தெண்ணாயிர பிள்ளையுமே நமக்கு சாட்சியாக நிற்கின்றனர்
4. அறம் செய விரும்பு

பொதுவாக, தர்மம் செய்ய அறிவுரைக்கும் அனைவரும் கூறும் வார்த்தை “தர்மம் தலைகாக்கும்” என்பது. ஔவை பிராட்டியும் இதனைத்தான் “அறம்செய விரும்பு” என்றாள். எதையுமே நேரில் பார்த்தால்தான் நம்பும் நமக்கு, எவருக்கோ ஏதாவது செய்தால் நம்மை எப்படிக் காப்பாற்றும் என்ற கேள்விதான் எழுகிறது. ஆனால், காலத்தின் போக்கு விசித்திரமானது. எது எப்போது எங்கே நிகழும் என்ற முன்கூட்டிய ஊகங்களைத் தவிடுபொடியாக்குவதுதான் காலம். நமது கண்முன்னேயே அறம் செய்தோர் நொடிப்பதும், அறமற்றோர் செழிப்பதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். இவையாவும் ஊழ்வினைபயன் என்று நூல்கள் கூறினாலும், நேரடியாக ஏதாவது ஒரு வாய்ப்பிலாவது அறம் செய்தோர் அந்த அறத்தாலேயே வாழ்ந்துவிட்ட ஒரு செய்தியாவது கிடைக்காதா என்று மனம் கேட்காமல் இல்லை. இதற்கும் வரலாற்றின் பக்கம் சில வரிகளை வைத்திருக்கிறது.

அடிமுடிகாணாதபடி, அண்ணாமலையாக நின்ற பிரான் திகழும் இடம் திருவண்ணாமலை. இங்கு முதலாம் ஆதித்த சோழன் தொட்டு, பிற்காலம் வரையிலும் பல்வேறு கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் கொடைகளும் விளக்கப்பெற்றுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில், மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மூன்றாம் ராசராசனின் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளில் காணப்பெறும் ஒரு பெண்ணின் நல்லாளையும், அவளுடைய கணவனையும் பற்றித்தான் இப்போது பார்க்க இருக்கிறோம். அவளுடைய பெயர் மங்கையர்க்கரசி. என்ன பொருத்தமான பெயர். கணவனின் பெயர் நாற்பத்தெண்ணாயிரப் பிள்ளை. அவன் அருங்குன்றத்தின் கிழானாக இருந்தான். இருவரும், அண்ணாமலை நாயனாவுக்குப் பல்வேறு தொண்டுகள் புரிந்தனர். இவர்கள் செய்த அறச்செயலையெல்லாம் ஒரு கல்வெட்டு பட்டியலிடுகிறது. அந்த அறங்களாவன..

1. கோயிலில் திருமஞ்சனத்துக்கும் நுந்தா விளக்குக்கும் இட்ட பசு – 32

2. ஐந்தலை மணி

3. ஒரு சக்கிலியருக்கு தரிசனம் காட்டி, தோலால் செய்த திருவடிக்குப் போர்த்த செம்பொன் – 8 கழஞ்சு

4. நாச்சியாருக்குத் திருக்கண் வேர்வாளிக்குப் பொன் – 8 கழஞ்சு

5. சுந்தரப் பெருமானும் நாச்சிமாரையும் எழுந்தருள்விக்கக் கல்மண்டபம்

6. கல்லால் ஆன திருமஞ்சனக் கிணறு

7. பிரம்மதேசத்துத் தோப்பில் தென்னம்பிள்ளை நட்டது – 150

8. அரசனின் இருபத்து நாலாவது ஆண்டில் தோன்றிய பஞ்சத்தில், காசுக்கு உழக்கு அரிசி விற்ற காலத்தில், தான் பூண்டிருந்த பொன்னையும் தேடிய செல்வமும் வைத்து உடைந்த நதிக்கரையைச் சீரமைத்து ஏரி கண்டு காடு வெட்டி கட்டை பறித்து நிலத்தைத் திருத்தியமை

9. திருவண்ணாமலை கோயிலுக்காக ஏரிப்பட்டியாக நிலம் அளித்தமை

இவ்விதம், பஞ்ச காலத்திலும் அத்தனை செல்வத்தையும் அளித்தமையால் அவர்கள் நொடித்துப்போயினர். அதனால், செல்வமின்றித் தவித்தனர். இதனைக் கண்ட கோயில் தானத்தார், அவர்கள் ஏரிப்பட்டியாகக் கொடுத்த நிலத்தைத் திருப்பிக் கொடுத்தனர். இது நிகழ்ந்தது, மூன்றாம் குலோத்துங்கனின் 24-ஆவது ஆட்சியாண்டு. அதாவது, பொ.நூ. 1202-ல்.

இவர்கள் ஏரி உடைந்து கிடந்தமையைச் சீரமைத்து கலிங்கம் இட்டு பயிர் செய்யாமல் கிடந்த நிலத்தைத் திருத்திய செய்தி, மற்றொரு கல்வெட்டில் பதிவாகியுள்ளது. மூன்றாம் ராசராசனின் காலத்தில், அதாவது பொ.நூ. 1236-ல் கொடுத்த கொடை மீண்டும் மற்றொரு கல்வெட்டில் பதிவாகியிருக்கிறது. அவர்கள் திருந்திகையாற்றைக் கரையடைத்த செய்தியும், தூம்பும் இட்ட செய்தியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டின் காலத்தில் மங்கையர்க்கரசியார் மரித்திருந்தார். நாற்பத்தெண்ணாயிரப் பிள்ளை தளர்ந்திருந்தார். அவருடைய மருமகன் காங்கையர் அவற்றை மீண்டும் செப்பனிட்டார். அதன் பிறகு அவர்களுடைய மகன்கள் அவற்றைச் செப்பனிட முடியாமல் போனாலும், நிலத்தில் இருகூறைத் திருப்பிக் கொடுத்து அதை வைத்துச் செப்பனிட்டுக்கொள்ளுமாறு வேண்டியதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவர்களின் மகன்களுடைய பெயர்கள் குன்றன் பல்லவராயன் மற்றும் கம்பன் நாற்பத்தெண்ணாயிரப் பிள்ளை.

இப்படி தலைமுறை தலைமுறையாக, அவர்கள் ஆறும் அடைத்து ஏரியையும் செப்பனிட்டு வந்தனர். தானத்தாரும் அவர்களுக்குத் திருப்பிச் செய்துவந்தனர். இதுதான் அறத்தைக் காப்பாற்றும் முறை. அறம் திருப்பிக் காப்பாற்றுவதும் இதுதான். பஞ்ச காலத்திலும் அவர்கள் ஏரியைக் காப்பாற்றிக்கொடுத்ததும், சாதி வேறுபாடின்றி அவர்கள் சக்கிலியருக்கும் தரிசனம் செய்துவைத்ததும் என்று அந்த தம்பதியினர் செய்த அறச்செயல்கள் என்றென்றும் வரலாற்றின் பக்கங்களுக்கு வண்ணத்தை ஏற்றிக்கொண்டே இருக்கும். அவர்தம் வழிவந்த மக்களும், ஏதும் இயலாத நிலையிலும் நிலத்தில் மூன்றில் இரு பங்கைத் திருப்பிக் கொடுத்து அறச்செயலை மேற்கொண்டமை, அறத்தில் இருந்த ஈடுபாட்டையும் அவர்களின் உறுதியையும் காட்டுகிறது.

ஆக, அறச்செயலை மேற்கொண்டால் அறம் எப்படி காப்பாற்றும், நிலைத்த புகழ் எப்படி நேரும் என்பதற்கு மங்கையர்க்கரசியும் நாற்பத்தெண்ணாயிர பிள்ளையுமே நமக்கு சாட்சியாக நிற்கின்றனர் அல்லவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com