2. கனவில் வந்த கடவுள்

கனவுக்குப் பிறகு அவன் எடுப்பித்த ஆலயமே இன்று தென்காசியில் எழிலுற வீற்றிருப்பது. அதை அவன் தொடங்கிய நாள், சிவலிங்கம் நிறுவிய நாள், கோபுரம் கட்டிய நாள் ஆகியவற்றை கல்வெட்டிலும் பொறித்துவைத்தான்.
2. கனவில் வந்த கடவுள்

பொதுவாக, அருட்செயல்களையெல்லாம் கேள்விப்படும்போது நமக்கு இருவகையான எண்ணங்கள் தோன்றும். ஒன்று, இவை உண்மைதானா என்பது. இரண்டாவது, நமக்கு ஏன் இவ்விதம் தோன்றுவதில்லை என்பது. இறைவன் பலருக்குக் கனவில் வந்த செய்தியைப் புராணங்கள் தொட்டு கேட்டிருப்போம். நமக்கும் சிலவேளை தோற்றமிருப்பதாகக் கனவுகள் தோன்றியிருக்கலாம். ஆனால் நம்முடைய கனவுகளின் நிலை நமக்கே தெரிகிறது. அருளாளர்களின் கனவில் தெய்வம் தோன்றியிருந்தால் அது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அது உண்மையென்று நம்புவதற்கும் அதற்கான தொடர்ந்த நிகழ்வுகள் வேண்டுமல்லவா. அது வரலாற்றின் பக்கங்களில் ஏதாவது ஒருவகையில் பதிவாகியிருக்குமா என்பது எதிர்பார்ப்பாக இல்லாமல் இல்லை. இதற்கு விடை கூறவும் ஒரு கல்வெட்டு இருக்கிறது.

மன்னிய சீர் திகழ்ந்த மாமன்னர் மாண்புடைத்த மாமதுரை, இஸ்லாமியர் படையெடுப்பில் சிறிது காலம் இயல்பிழந்து நின்றது. அரசைக் காப்பாற்றிக்கொள்ள, வழிவழியாய் ஆட்சி செய்த வானகர் போலும் தலைநகரை விடுத்த பாண்டியர்கள், தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். இவர்கள் தென்காசி பாண்டியர்கள் என்றே பெயர் பெற்றனர். அத்தகைய பாண்டியர்களுள் புகழ்பெற்ற மன்னவனாகத் திகழ்ந்தவன் கோசடிலவர்மனான ஸ்ரீபராக்கிரம பாண்டியன். அம்மையும் அப்பனுமாய் அனைத்து உயிர்க்கும் இம்மைப் பயனும் மறுமைக்கு உறுதியும் மேம்பட நல்கி வீற்றிருந்தருளியதாக இவனைப் பற்றி இவனுடைய மெய்க்கீர்த்தி புகல்கிறது. இப்படி ஏற்றமுடன் இலங்கியிருந்த இந்த மன்னவன், பொ.நூ. 1422 முதல் 1463 வரை, நாற்பத்தோராண்டுகள் செங்கோலோச்சியவன். தென்கலை - வடகலைத் தெளிவுறத் தெரிந்து என்று மெய்க்கீர்த்தி கூறுவதால், தமிழையும் வடமொழியையும் தனிச்சிறப்போடு தேர்ந்தவன் என்பது தெளிவு. சங்கர சரண பங்கயம் சூழ செங்கோலோச்சியவன் என்று, இவன் சிவபெருமானின் திருவடித் தாமரையில் ஈடுபட்ட கிடந்த விதத்தை மெய்க்கீர்த்தி எடுத்தியம்புகிறது.

இந்த மன்னவன் ஒருநாள் கனவு கண்டான். கனவினில் வந்தவர், காசினி போற்றும் காசியில் வீற்றிருக்கும் விஸ்வநாதர். தோன்றிய அவர், இஸ்லாமியர் படையெடுப்பால் தமது காசியின் ஆலயம் இடிந்துபட்டதால், தெற்கே தமக்கு தக்ஷிணகாசியாக – தென்காசியாக ஆலயம் எடுப்பிக்க வேண்டுமென்று அருளாணை பிறப்பித்தார்.

இதோ கல்வெட்டின் வரிகள்..

உடையார் விசுவநாதர் உத்தர காசியில் எழுந்தருளி இருந்த சிவாலயம் ஜீரணமாகையாலே தென்னாரி நாட்டு சித்ரா நதி உத்தர தீரத்திலே நமக்குத் தக்ஷிண காசியாக ஆலயம் செய்து தரவேணும் என்று எங்களுடைய கர்த்தர் பெருமாள் அரிகேசரி தேவர் என்று திருநாமமுடைய பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டிய தேவர் எழுந்தருளிய இடத்தின் உடனே ஸ்வப்பனத்திலே திருவுள்ளம் பற்றி அருளுகையாலே..

என்று கல்வெட்டு வரிகள் செல்கின்றன.

வடக்கே அப்போது, பொ.நூ. 1444-ல் முபாரக் ஷா கொல்லப்பட்ட பிறகு உல்முல்க் என்பவன் சர்வாதிகாரியாக பல்வேறு கொடுஞ்செயல்களிலும் ஈடுபட்டான். அவனால் காசி விஸ்வநாதர் ஆலயமும் இடிபட்டது. அப்போது பலரும் தெற்கு நோக்கி வந்தனர். இந்தச் சூழ்நிலையில்தான் பராக்கிரம பாண்டியனும் காசி விஸ்வநாதரைக் கனவில் கண்டான். விஸ்வநாதர், உத்தரகாசியை விடுத்து தக்ஷிணகாசியான தென்காசியில் கோயில் கொள்ள முற்பட்டதாகக் கனவு அமைந்ததாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

இதே செய்தி, பாண்டிய குலோதயம் என்னும் வடமொழி காப்பியத்திலும் காணப்பெறுகிறது. இந்தக் காப்பியம், இதற்குச் சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இயற்றப்பெற்றது. மண்டலகவி என்பவர், பாண்டியர் வம்சத்தைக் காப்பியமாக யாத்தளித்த செல்வம் இது. இந்தக் காப்பியமும், பொன்னின் பெருமாளான பராக்கிரம பாண்டியனைக் காண அந்தணரும் மனைவியும் இரு குழந்தைகளோடு வந்ததைக் கண்டதாக கூறுகிறது. வடக்கே தமது வீடு இடிந்துபட்டமையால், தென்காசியில் அமைக்குமாறு வேண்டியதாகக் காப்பியம் கூறுகிறது. வந்தவர்களே ஈசனும் உமையும் இரு குழந்தைகளும் என்பதை அரசன் உணர்ந்ததாகவும் காப்பியம் தெரிவிக்கிறது.

இந்தக் கனவுக்குப் பிறகு அவன் எடுப்பித்த ஆலயமே இன்று தென்காசியில் எழிலுற வீற்றிருப்பது. அதை அவன் தொடங்கிய நாள், சிவலிங்கம் நிறுவிய நாள், கோபுரம் கட்டிய நாள் ஆகியவற்றைச் சக ஆண்டுக் குறிப்போடு தமிழ்ச் செய்யுள்களாகக் கல்வெட்டிலும் வெட்டிவைத்தான். அவை ஒவ்வொன்றும் வரலாற்றின் வண்ணப் பக்கங்களாக இதற்குச் சான்றாக அமைந்துள்ளன. கோபுரத்தின் இறுதி வடிவத்துக்கு முன்பே இறந்துபட்டமையால், அவனுடைய தம்பியான குலசேகரன் கட்டி முடித்தான். அவன் இறந்த பிறகு, புலவர் ஒருவர் அவனது பத்திமையைப் பாராட்டி பாடிய பாடல் இன்றளவும் அவன் அருட்செயலுக்கு அகச்சான்றாக மிளிர்கிறது.

     கோதற்ற பக்தி அறுபத்து மூவர்தம் கூட்டத்திலோ

     தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ செம்பொன் அம்பலத்தோ

     வேதத்திலோ சிவலோகத்திலோ விசுவநாதன் இரு

     பாதத்திலோ சென்று புக்கான் பராக்கிரம பாண்டியனே.

இத்தகைய ஆலயத்துக்குத் தான் அளித்த தானங்களைக் காக்க வேண்டி அவன் வெட்டிய கல்வெட்டுகளிலும், சேவேறிய வயல் தென்காசி ஆலயம் தெய்வச்செயலாலே சமைந்தது, இங்கென செயலல்ல என்று பாமாலையாகக் கல்வெட்டிலும் வெட்டுவித்தான்.

இப்படி, அருளாளர்கள் கனவில் ஆண்டவன் தோன்றுவான் என்பதற்கு இதனைக் காட்டிலும் அகச்சான்று வேண்டுமோ. இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விகளுக்கெல்லாம் வரலாறு பதில் சொல்லாது. ஆனால், இதுபோன்ற அருட்செயல்களையும் தனது வண்ணமாகக் கொண்டிருக்கும் வரலாற்றுச் செல்வத்தின் வனப்பு அறிந்தறிந்து வியப்புறத்தக்கதேயல்லவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com