11. ஆராயாது தண்டித்தால்..

அதிகாரியே ஆனாலும் ஊர் மன்றம் அவரை அழைத்துக் கேட்க வேண்டும். தொடர்புடைய அதிகாரியும் கழுவாய் தேட வேண்டும். அந்தக் கழுவாய், ஊருக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும்.
11. ஆராயாது தண்டித்தால்..
Published on
Updated on
2 min read

அதிகாரம் ஒரு விசித்திரமான போதை. அதில் ஈடுபட்டோர் தன்னையும் மறப்பர். நேர்மையாளர்களும்கூட, செருக்கேறினால் தவறிழைப்பர். அத்தகைய அதிகாரத்தால் அதிகாரிகள் தவறிழைத்தால், அவற்றை எதிர்த்துக் கேட்கவோ, தவறிழைத்தவர்கள் மனம் நொந்து அதற்கு கழுவாய் தேடுவதோ பெரும்பாலும் நேரிடுவதில்லை. இப்போதும்கூட, அதிகாரிகள் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்வோர் உண்டு. அதற்குப் பிறகு அந்த அதிகாரிகளை விசாரிப்பது முதலியவை நிகழ்ந்தாலும், அவர்களாக முன்வந்து கழுவாய் தேடுவதில்லை. ஆனால், வரலாறு இதற்கான பக்கங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

திருக்கோயிலூர் அருகேயுள்ள ஊர் ஜம்பை. பல்வேறு வரலாற்றுத் தகவல்களைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளைக் கொண்டது இவ்வூர் கோயில். சம்புநாதர் என்ற பெயருடைய இந்தக் கோயிலில், பல்வேறு கல்வெட்டுகள் சுவையான தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. அவற்றுள், இரண்டாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்று அலாதியானது. அவனுடைய மூன்றாம் ஆட்சியாண்டை, அதாவது பொ.நூ. 1054-55-ஐ சேர்ந்த இந்தக் கல்வெட்டு, அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கண்முன்னே நிறுத்துகிறது.

கூகூர்பாடி என்னும் இடத்தில் வாழ்ந்த பழங்கூரன் குன்றன் என்பான் வரிகள் பெறும் அதிகாரி. அவன் அவ்வூரில் வாழ்ந்த வீரபுத்திரன் என்பவனின் தாயான சேந்தன் உமையாள் என்பாளிடம் இறை கட்டச் சொல்லிக் காட்ட, அவள் வரி கட்டும் கடமையில்லை என்று கூறினாள். அந்த அதிகாரி அதற்கான நடவடிக்கை எடுத்தான். அவளோ மனம் நொந்து நஞ்சு குடித்து இறந்தாள். அப்போது அவ்வூரில் இருந்த நானாதேசிகளான வணிக மன்றத்தினர், அந்த அதிகாரியை அழைத்து அவனுடைய குற்றத்தைப் பழியாகக் கூறினர். அவனும் மனம் நொந்து வாளையூரில் வீற்றிருக்கும் பெருமானுக்கு விளக்கேற்ற 32 காசுகளைக் கழுவாயாக வழங்கினான்.

கல்வெட்டு வரிகளாவன..

கூகூர்பாடியிலிருக்கும் மலையமான் காட்டி மேலூருடையான் பழங்கூரன் குன்றன் மேற்படியூரிலிருக்கும் வீரபுத்திரன் தாய் சேந்தன் உமையாளை இறைகாட்ட இறை கடவேனல்லேனென்று சொல்ல அவளை கோச்செய்விக்க அவள் நஞ்சு குடித்து சாவ நான்குதிசை பதிணெண் பூமி நானாதேசியும் கூட நிரந்து இந்தப் பழங்கூரன் குன்றன் மேல் பழியாக்கி இவன் மேலிந்த பழிதீர கொண்ட நடையாவது..

இவ்விதம் கல்வெட்டு செல்கிறது. ஆக, அதிகாரி ஒருவன் தவறாகக் கூறுவதும், அதனால் விபரீதம் நிகழ்வதும், ஊர் வணிக மன்றத்தினர் அழைத்துக் கேட்பதும், அவனும் மனம் நொந்து அதற்கான கழுவாயைத் தேடுவதும் என்று இத்தகையதோர் வழக்கம் இருந்திருப்பது கல்வெட்டின் மூலம் தெளிவாகிறது. இப்போதும் அதிகாரிகள் திட்டுவதும் மனமுடைந்து பிறர் மேற்கொள்ளும் செயலும்கூட செய்திகளில் வருகின்றன. ஆயினும், அதிகாரிகள் அதற்காக மனம் நொந்து கழுவாய் செய்ததாகத் தகவல்கள் இல்லையே.

இதுதான் வரலாறு தரும் பாடம். அதிகாரியே ஆனாலும் ஊர் மன்றம் அவரை அழைத்துக் கேட்க வேண்டும். தொடர்புடைய அதிகாரியும் கழுவாய் தேட வேண்டும். அந்தக் கழுவாய், ஊருக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com