சில்க் ஸ்மிதா, குஷ்பூ இப்போது சந்திரபாபு நாயுடு அடுத்து யாருக்கெல்லாம் கோயில் கட்டப் போகிறோம்?!

அன்று குஷ்பூ இன்று சந்திரபாபு நாயுடு அடுத்து யாருக்கெல்லாம் கோயில் கட்டப் போகிறோம்?!
சில்க் ஸ்மிதா, குஷ்பூ இப்போது சந்திரபாபு நாயுடு அடுத்து யாருக்கெல்லாம் கோயில் கட்டப் போகிறோம்?!

தமிழர்கள் நாம் ஒருகாலத்தில் நடிகை குஷ்பூவுக்கு கோயில் கட்டினோம், இது நடிகையின் மீதான ரசிகர்களின் அபிமானம் எனில் இதற்கு சற்றும் சளைக்காத வகையில் ஆந்திராவில் மாநில முதல்வரான சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்டவிருக்கிறார்களாம் அம்மாநில திருநங்கை அமைப்புகள். குஷ்பூவுக்கு கோயில் கட்டப்பட்டது தான் பரபரப்புச் செய்தியானதே தவிர இன்று அந்தக்கோயிலின் கதி என்னவானது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. நாளை சந்திரபாபு நாயுடு கோயிலுக்கும் அப்படியே நேரலாம். நேராமலும் போகலாம். அது கோயில் கட்டுகிறவர்கள் பாடு. கோயிலில் தெய்வமாக நிற்க வைக்கப்படவிருப்பர்கள் பாடு. ஆனால், மானுடர்களை ஆராதனை செய்து இப்படி கோயில் கட்டப் போகிறோம் எனச் சிலர் கிளம்புகையில் சம்மந்தப்பட்டவர்கள் அதைக் குறித்து எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காமல் அதை ஊக்குவிப்பது போல் வாளாவிருப்பது மிக்க வேடிக்கையாக இருக்கிறது.

தனது ஆளுகைக்கு உட்பட்ட மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் சேவை செய்ய வேண்டியது ஒரு மாநில முதல்வரின் கடமை. மக்கள் என்றால் அதில் திருநங்கைகள், திருநம்பிகள் என அனைவரும் அடக்கம். இதில் திருநங்கைகளுக்காக உழைத்தவர், திருநங்கைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கான ஓய்வூஉதியத் திட்டம், இலவச வீடு, இதர நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றினார் என்ற பெயரில் அவருக்கு அம்மாநில திருநங்கைகள் கோயில் கட்ட முனைவது வேடிக்கையான விஷயம் மட்டுமல்ல, கேலிக்குரிய விஷயமும் தான். சந்திரபாபு நாயுடு தனது கடமையைத் தானே செய்தார். ஒரு மாநில முதல்வர் தனது கடமையைச் செய்ததற்கு எதற்காக இத்தனை ஆராதனை? 

திருப்பதி கோயிலை விஸ்தரித்து அதன் இன்றைய புகழுக்கு காரணமான மாமன்னர் கிருஷ்ணதேவராயரின் சிலைக்கு அக்கோயில் வளாகத்தில் எத்தனை மதிப்பிருக்கிறது? என்று அறியாதவரா சந்திரபாபு நாயுடு. சும்மா பரபரப்புக்கு எதையாவது செய்து மக்களின் கவனத்தை திசை திருப்ப நினைக்கும் இத்தகைய செயல்களுக்கு ஒரு திறன் வாய்ந்த முதல்வராக சந்திர பாபு நாயுடு ஆட்சேபம் தெரிவித்திருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும். இல்லையேல் திறமையே இன்றி வெறும் செட் பிராப்பர்ட்டியாக இன்று முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டு அதிகார சுகம் காணும் ஏனைய சில முதல்வர்களைப் போலத்தான் சந்திரபாபு நாயுடுவும். ஒரு சில சாதனைகளுக்காக அவரைக் கொண்டாட வேண்டிய அவசியம் கூட இனி இல்லையோ என்று தோன்றுகிறது.

இந்தியாவில் தலைவர்களின் சிலைகளுக்கு கிடைக்கும் சந்தர்ப்பவாத மரியாதைகளைக் கண்ட பிறகும் இந்த அரசியல்வாதிகளுக்கு தங்களுக்கு சிலை வைத்துக் கொள்ளும், கோயில் கட்டச் செய்து சுய ஆராதனை செய்து கொள்ளும் பேராசை எப்படித்தான் கிளர்ந்தெழுகிறது என்று புரியவில்லை.

ஆந்திர மாநிலத் திருநங்கைகள் தங்களுக்கு முதல்வரின் மீதிருக்கும் அபிமானத்தை, பக்தியை, நன்றியுணர்வைக் காட்ட 30 கிலோ வெள்ளித்திருமேனி செய்து அதை கோயில் கட்டி ஆராதிப்பதைக் காட்டிலும் அதற்கு ஆகும் செலவை தங்களைப் போன்ற திருநங்கைகளில் மிகுந்த வறியவர்களின் கல்விச் செலவுக்கோ, மருத்துவச் செலவுக்கோ பயன்படுத்தலாமே? அதனால் என்ன கெட்டு விடப்போகிறது?

திருநங்கைகள் இப்படி ஒரு கோரிக்கையுடன் தங்களை அணுகும் போது அதைத் தடுத்து அவர்களை வேறு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடச் சொல்லி கட்டளையிட வேண்டிய அரசு அதிகாரிகளும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும் கூட அப்படியெதையும் செய்யாமல் திருநங்கைகள் முதல்வருக்காக கட்டவிருக்கும் கோயிலின் பூமி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பது இன்னும் ஒரு படி மேலான நகைப்புக்கு இடமாகிறது. 

ஒரு மாநில முதல்வருக்கு மட்டுமல்ல... இனி இந்தியாவில் யாருக்கும் கோயில் கட்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் போதும், போதுமெனக் கதறும் அளவுக்கு தெருவுக்குத் தெரு, லட்சக்கணக்கில் கோயில்கள் உண்டு. இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு எத்தனை கோயில்கள் கட்டப்படுகின்றன? அவற்றில் எத்தனையெத்தனை கட்டிய மாத்திரத்தில் கைவிடப்படுகின்றன?  எவையெவை எந்தெந்த ஆதாயங்களின் பால் கட்டப்படுகின்றன? என்றெல்லாம் கூட இனி புள்ளி விவரக் கணக்குத் துறை ஓவர் டியூட்டி பார்த்துச் சொன்னால் தேவலாம். 

சந்திரபாவு நாயுடு சமர்த்தான முதல்வர், அதிபுத்திசாலி என்றொரு நம்பிக்கை அண்டை மாநில மக்களில் ஒருசாரரிடையே இப்போதுமிருக்கிறது. காரணம் மாநில நலனுக்கான அவரது செயல்திட்டங்களாக இருக்கலாம். நேரலையில் மாநில ஆட்சியர்கள் மற்றும் அந்தந்த துறை சார்ந்த எம் பி, எம் எல் ஏக்கள் சந்திப்பு நிகழ்த்தி நேருக்கு நேராகப் பல விஷயங்களைப் பற்றிப் பேசி மக்களிடையே அரசு இயந்திரம் செயல்படும் விதத்தை வெளிப்படையாக்கிய தன்மையாக இருக்கலாம். இல்லை வெள்ளச் சேதம், பூகம்பம் உள்ளிட்ட அவசர ஆபத்து காலங்களில் களத்தில் இறங்கி மக்களோடு மக்களாகக் கலந்து அவர்களுக்கு உதவும் மனப்பான்மையாக இருக்கலாம். மேற்குறிப்பிட்டவாறு திருநங்கைகளின் உணர்வுகளை மிகச்சரியாகப் புரிந்து கொண்டு அவர்களின் நலனுக்கு ஆவண செய்வதில் முதல்வர் என்ற வகையில் கூட அவருக்கான மரியாதைகள் பெருகி இருக்கலாம். அதையெல்லாம் இந்தக் கோயில் விவகாரம் இன்று நகைப்புக்கு இடமாக்கி இருக்கிறது.

அதை உணர்வீரா ஆந்திர முதல்வரே? இல்லை திருநங்கைகள் ஏதோ அபிமானத்தில் செய்கிறார்கள். அதற்கும் எனக்கும், சம்மந்தமில்லை என்று ஒதுங்கி இருந்து உங்கள் கோயில் ஒவ்வொரு செங்கல்லாக மேலெழும்புவதை உவகையுடன் வேடிக்கை பார்ப்பீர்களா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com