‘ராசியில்லாத வீடு’  நம்பிக்கையா? / மூட நம்பிக்கையா?

சிலர் வலுக்கட்டாயாமாகவேனும் சில மூட நம்பிக்கைகளை அறவே ஒதுக்கித் தள்ளத் தான் பார்க்கிறார்கள், அவர்களின் பிரயத்தனம் விழலுக்கு இறைத்த நீராய் வீட்டிலுள்ள மனைவி, மக்கள், மற்றுமுள்ள இன்னோரன்ன சொந்த
‘ராசியில்லாத வீடு’  நம்பிக்கையா? / மூட நம்பிக்கையா?

மூடநம்பிக்கை... மூடநம்பிக்கை என்கிறோமே அதன் எல்லை தான் எது? வெறும் சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கையில் சேர்த்தி இல்லையா? இன்னும் சிலர் செய்வினை என்கிறார்கள்... அட நமக்குத் தெரியாத செய்வினை, செயப்பாட்டு வினையா என்ன? அதெல்லாம் தெரியும் போங்கடா சாமிகளா! என்று அதை புறம் தள்ளவே பெரும் தைரியம் வேண்டியிருக்கிறது, இதில் எங்கிருந்து அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று ஒதுக்கித் தள்ள!

மனித இனம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதெல்லாம் தொடர்ந்து கொண்டே தான் இருந்திருக்கக் கூடும்?! வெவ்வேறு ரூபங்களிலும் வேறு, வேறு நம்பிக்கைகளிலும், இதில் வாஸ்து வேறு சேர்ந்து கொள்ள அதற்கென்று கருத்து யுத்தம் நடத்தி பார்க்கும் வரையில் மட்டுமே இன்று நாம் முன்னேறி இருக்கிறோம், சிலர் வலுக்கட்டாயாமாகவேனும் சில மூட நம்பிக்கைகளை அறவே ஒதுக்கித் தள்ளத் தான் பார்க்கிறார்கள், அவர்களின் பிரயத்தனம் விழலுக்கு இறைத்த நீராய் வீட்டிலுள்ள மனைவி, மக்கள், மற்றுமுள்ள இன்னோரன்ன சொந்த பந்தங்களால் மீறப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது .

கடந்த மாதம் நண்பர் ஒருவர் புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்தார். கிட்டத் தட்ட ஐம்பது லகரத்தை தொடக் கூடிய அளவில் நவீன வசதிகள் கொண்ட அல்ட்ரா மாடர்ன் ஃபிளாட். இரண்டே இரண்டு சயன அறைகள், சின்னதாக கைக்கு அடக்கமான ஒரு சமையலறை, கொஞ்சம் பரவாயில்லை எனும்படியான இடவசதியோடு இரண்டு குளியல் அறைகள், படுக்கை அறையை விட கொஞ்சமே கொஞ்சம் பெரிய அளவில் ஒரு ஹால் இவ்வளவு தான். சின்னதோ பெரியதோ சென்னையில் சொந்த வீடு என்பது சாமான்யர்களுக்குச் சாமான்ய காரியமில்லையே! அப்படிப் பார்த்தால் நண்பர் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம் என்றார்கள் அக்கம்பக்கத்தினர்.

இங்கே நாம் குறித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயம் ‘அதிர்ஷ்டத்தின்’ மீதான நமது அர்த்தமற்ற நம்பிக்கைகள். நண்பரது விஷயத்தில் அவர் வீடு வாங்கியது அவரது கடின உழைப்பின் பலன் என்று தானே கூற வேண்டும். அதை விடுத்து... எல்லாம் அவரது அதிர்ஷ்டம் என்றால் அதுவும் ஒருவகையில் மூடநம்பிக்கையில் சேர்த்தியா இல்லையா? இதையெல்லாம் நாம் ஏன் எப்போதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை.

ஒரு வீட்டில் குடி இருக்கிறோம், விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏதேனும் அந்த வீட்டில் நாம் குடி இருக்கையில் நிகழ்ந்தால் அது மனிதச் செயல் அல்லவென்றே நம்பத் தொடங்குகிறோம். உடனே வீடு ராசி இல்லை... வாஸ்து சரி இல்லை... இதெல்லாம் தான் அதற்குக் காரணம் என்று சொல்லிக் கொள்கிறோம். எனில், அப்படியா? அது தான் விரும்பத்தகாத காரியங்கள் நடப்பதற்கான காரணமா?

வீடென்பது வாய் பேசாப்பொருள்... என்னதான் உயிர்ப்புடன் இருப்பதாக நாம் நம்பினாலும் மனிதர்கள் இருக்கும் வரை மட்டுமே அதற்கு உயிர்ப்பு உண்டே தவிர, யாருமற்றுக் கைவிடப்படுகையில் அவை வெறும் ஜடப்பொருட்களே! சொல்லப் போனால் வீட்டைக் குறித்து நாம் தான் நமது ஞாபகங்களை வளர்த்துக் கொண்டு என் வீடு... என் தோட்டம்... என் சமையல் அறை, என் படுக்கை அறை என்றெல்லாம் பேசிப்பேசி மாய்ந்து போகிறோமே தவிர; வீடு எப்போதேனும் பேசி இருக்கக் கூடுமோ? ‘என்னுள் குடி இருக்கும் மனிதர்களை எனக்குப் பிடித்தம் இல்லை, இதோ இன்று அவர்கள் பயணம் செய்கையில் வண்டியில் இருந்து அவர்களைப் பிடித்து கீழே தள்ளி விடப் போகிறேன், அதில் தப்பி விட்டானா, சரி அடுத்த இலக்கு அவர்களது மகனோ மகளோ பள்ளி இறுதி தேர்வு எழுதப் போகிறார்களா நல்ல சான்ஸ் அவர்களை என் ராசியைக் கொண்டு ஃபெயில் ஆக்குகிறேன் பார்!’ என்று வீடு சங்கல்பம் ஏதும் செய்து கொள்ளக் கூடுமா?! 

இந்த ராசி சென்டிமென்ட் மனிதர்களின் பிரத்யேகக் கண்டுபிடிப்பேயன்றி வீடென்ன செய்யக் கூடும்?! புரியத்தான் இல்லை .

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கண்ணேறு (திருஷ்டி) கழிக்கிறோம் என்று காய்ந்த மிளகாய் வற்றல்களை அடுப்பிலிட்டு மொத்தக்குடும்பத்தினரையும் மூக்கில் கார நெடியேற்று இருமச் செய்து தெருமுக்குகள் தோறும் கொட்டி வைக்கிறோம். அல்லது அமாவாசை... பௌர்ணமிகளில் மொத்தமாக திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பது எனத் தொடங்கி எல்லாக் கடை வாசல்களிலும் பூசணிக்காய்களை பலி கொடுக்கிறோம். அகஸ்மாத்தாக வாகனஓட்டிகள் யாரேனும் கவனிக்காமல் அதன் மேல் தங்கள் இருசக்கர வாகனங்களை ஏற்றித் தொலைத்தால் அவர்களது மண்டைகளும் தான் தான் சில நேரங்களில் பலி பொருட்களாகின்றன. இதற்கென்ன சொல்ல? ஒருவருக்கு நன்மை தரக்கூடும் எனும் நம்பிக்கையில் செய்யப்படும் நமது சடங்கு சம்பிரதாயங்கள் கடைசியில் அடுத்தவருக்கு கெடுதல் இழைப்பதில் முடிவதைப் பற்றி நாம் ஏன் யோசிப்பதே இல்லை.

மற்றொரு உதாரண சம்பவத்தைப் பாருங்கள், ஒரு மாமி தன் பெண்ணின் திருமணத்தை முன்னிட்டு தன் வீட்டை ஒட்டி இருந்த அவரது காலி மனையை விற்று விட்டார், அதை விலைக்கு வாங்கியவர் அங்கே அடுக்கு மாடி வீடு கட்டி வாடகைக்கு விட்டு நல்ல வருமானம் பார்க்க ஆரம்பித்தார், அப்போது மாமிக்கு ஏற்பட்ட மன வருத்தத்தை சொல்லி மாளாது, இதற்குள் எந்த கடமைக்காக மனையை விற்றாரோ அந்தப் பெண்ணும் கணவன் சரியில்லை என்று வாழவெட்டியாக பிறந்தகம் வந்து விடவே நிலைமை... மாமியின் வயிற்றெரிச்சலை சொல்லில் விளக்கி விட இயலாமல் ஆனது.

தன் கண்முன்னே தனது காலி மனை அடுக்குமாடி வீடாக மாறி அங்கே கலகலவென்று மனிதர்கள் புழங்குவதைக் கண்டு மாமி புழுங்கித் தவித்தார்... ஐயோ இடம் போச்சே... போச்சே என்று மாமி இப்படிப் புலம்புவதைக் காதால் கேட்ட சிலர் தங்களுக்குத் தெரிந்த கதைகளை இட்டுக் கட்ட சமயம் பார்த்தனர்.

காக்காய் உட்காரப் பனம் பழம் விழுந்த கதை போல, புதிதாகக் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீட்டில் குடி இருந்த ஒரு குடித்தனக்காரருக்கு எதிர்பாராமல் தொழிலில் நஷ்டம் வர அவர் தொழிலை ஏறக்கட்டி விட்டு விற்றது போக மிச்சம் மீதி இருந்த பணத்தில் எளிமையாக ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு வாடகை வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்.

அடுத்து அந்த வீட்டுக்கு குடி வந்த குடும்பத்தில், வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் எண்பது வயதிலும் ஆரோக்கியமாக இருந்தவர் இந்த வீட்டுக்கு வந்ததும் சில மாதங்களில் உடல் நலக் குறைவால் இறந்தார். இதையும் முன்னதையும் சம்பந்தப்படுத்திப் பேச நல்ல சந்தர்ப்பம் அமையவே பேசும் நாக்குகள் வேலையை ஆரம்பித்தன.

முதலில் அந்த வீடு ‘ராசி இல்லாத வீடு’ ஆனது.

‘மாமி வயித்தெரிச்சல் தான் அங்க குடி இருக்கறவங்களை இந்தப் பாடுபடுத்துது.’

‘வேற வீடே இல்லையா என்ன?!’

‘இந்த வீட்டுக்குப் போய் குடி போகனுமா?!’

‘அதென்னவோ முந்தியெல்லாம் காட இருந்த இடம் தானே இதெல்லாம்! அங்க காத்து கருப்பு நடமாட்டம் இருந்துச்சோ என்னவோ? இல்லனா குடி இருக்கறவங்களை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தக் கூடுமா? என்னவோ இருக்கு அந்த இடத்துல?!’

‘அந்த இடத்தை வித்துத்தான் மாமி தம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சா... என்ன ஆச்சு சுவத்துல அடிச்சா பந்தாட்டம் மறு மாசமே பொண்ணு திரும்பி வந்துட்டா... என்னமோ இருக்குடீ அங்க... 

அம்புட்டுத் தான்... கதை முடிஞ்சது. வீடு ராசி இல்லாத வீடே தான் என அழுத்தமாக முத்திரை குத்தப்பட்டு விட்டது. .

இதில் குறிப்பிடத் தகுந்த சங்கதி ஒன்றை கட்டாயம் சொல்லித்தான் ஆக வேண்டும், மனையை விற்ற மாமிக்கு விற்றதில் ஒன்றும் நஷ்டம் இல்லை, நல்ல விலைக்கு விற்றுத்தான் பணம் வாங்கிக் கொண்டார். விலைக்கு வாங்கியவருக்கும் நஷ்டமே இல்லை. கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டு நல்ல லாபம் பார்க்கிறார் அவரும். குடி இருப்பவர்களை மட்டும் வீட்டு ராசி பாடாய்ப் படுத்துகிறதாம். 
‘என்னய்யா கொடுமை இதென்றால்?!’

‘கொடுத்தவங்களும் வாங்கினவங்களும் அந்த இடத்துல குடி இருக்கலை இல்ல? அந்த இடத்தை அனுபவிக்கிறவங்களுக்குத் தானே அதோட பலன். அப்படிப் பார்த்தா குடி இருக்கிறவங்களைத் தானேப்பா பாதிக்கும்!’

இதைப் படிப்பவர்கள் யாரேனும்... இப்போதேனும் சொல்லுங்கள் மூடநம்பிக்கை... மூட நம்பிக்கை என்கிறோமே அதன் எல்லை தான் எது?!’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com