118. கிருஷ்ண லீலா

திருவண்ணாமலை தன்னை இழுத்துத் தன் பக்கம் வரவழைத்துக்கொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இறங்கிய கணத்தில் கேட்ட குழலோசை, அந்நகரின் மீது அவனுக்கு இருந்த பழைய பரவசமூட்டும் ஞாபகங்களை..

முதலில் வினோத்துக்கு சிரிப்பு வந்தது. பேருந்தை விட்டு இறங்கிய சில நிமிடங்கள் அங்கேயே சாலை ஓரமாகச் சென்று அமர்ந்து அந்தக் குழலோசையைக் கேட்டுக்கொண்டிருந்தான். சிரிக்க வேண்டும்போலத் தோன்றியதால் அனுபவித்துச் சிரிக்கவும் செய்தான். பிறகுதான் அந்த ஓசை எங்கிருந்து வருகிறது என்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஓசைதான் அது. இசையல்ல. வாசிக்கத் தெரியாத யாரிடமோ ஒரு புல்லாங்குழல் சிக்கிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தான். அவன் ஏன் திருவண்ணாமலையில் இருந்துகொண்டு தான் வந்து இறங்கும் நேரத்துக்குச் சரியாக அதை ஊத வேண்டும்? ஆளை நேரில் பார்த்து விசாரித்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டு எழுந்தான்.

அவன் அதற்கு முன் திருவண்ணாமலைக்கு வந்ததில்லை. சிவபக்தி மேலோங்கி சிவ ஸ்மரணையிலேயே கிடந்த நாள்களில் என்றாவது அங்கே போய்வர வேண்டும் என்று எண்ணிக்கொள்வான். ஆனால் முடிந்ததில்லை. விதியே போல இம்முறை திருவண்ணாமலை தன்னை இழுத்துத் தன் பக்கம் வரவழைத்துக்கொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இறங்கிய கணத்தில் கேட்ட குழலோசை, அந்நகரின் மீது அவனுக்கு இருந்த பழைய பரவசமூட்டும் ஞாபகங்களைச் சற்று மட்டுப்படுத்தியது. தனக்கு ஏற்பட்டிருக்கும் ஊசலாட்டம் அவனுக்கு மிகவும் வெட்கமளித்தது. கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே இருந்தென்ன. மனத்தின் பக்குவம் அரைக்கும் கீழான வேக்காட்டில்தான் உள்ளது. நல்லது. தான் எத்தனைக் கீழானவன் என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு சந்தர்ப்பம் என்று நினைத்துக்கொண்டான்.

குழலோசை கேட்ட திக்கில் அவன் நடந்துகொண்டிருந்தான். பேருந்து நிலையத்துக்குத் தெற்குப்புறமாக அந்த ஓசை வந்துகொண்டிருந்தது. அவன் வேறெதையும் கவனிக்காமல் ஓசையை மட்டுமே இலக்காக வைத்து நடந்தான். இரண்டு நிமிடங்களில் அவனுக்கு அந்த ஓசையின் பிறப்பிடம் தெரிந்துவிட்டது. கதவு பூட்டப்பட்டிருந்த ஒரு சிறு அடகுக் கடையின் வெளித் திண்ணையில் அமர்ந்திருந்த பெண்தான் ஒரு புல்லாங்குழலை வைத்து ஊதிக்கொண்டிருந்தாள். அது கச்சேரி வாசிக்கும் புல்லாங்குழல் அல்ல. திருவிழாக்களில் கிடைக்கும் சிறுவர்களுக்கான ஊதுகுழல். கணக்கு வழக்கின்றி ஒன்பது துவாரங்கள் அதில் இருந்தன. அந்தப் பெண்ணோ, முதல் மூன்று துவாரங்களை மட்டுமே பயன்படுத்தி ஊதிக்கொண்டிருந்தாள். மனத்துக்குள் அவள் ஏதோ ஒரு பாடலை அல்லது ஆலாபனையை உத்தேசித்திருக்கக்கூடும். ஆனால் வெளிப்பட்ட ஓசை கொடூரமாக இருந்தது.

அவளைக் கண்டதும் வினோத் நின்றுவிட்டான். சிறிதுநேரம் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். மிஞ்சினால் அவளுக்கு நாற்பது வயது இருக்கும் என்று தோன்றியது. தலைமுடியின் முன்புறம் முழுதும் நரைத்திருந்தது. பின்னால் அத்தனை வெளுப்பில்லை. வேர்க்கடலைத் தோலின் நிறத்தில் இருந்தாள். ஒழுங்காகத் தேய்த்துக் குளித்தால் இன்னமும் சற்றுப் பளிச்சென்று இருப்பாள் என்று தோன்றியது. ஆனால் அவள் குளித்துப் பல நாள்கள் ஆகியிருக்க வேண்டும். முகமெல்லாம் எண்ணெய் வழிந்துகொண்டிருந்தது. வாராத தலைமுடி காற்றில் அலைந்து ஆடிக்கொண்டிருந்தது. ஏராளமான சுருக்கங்களும் கிழிசல்களும் கொண்ட புடைவை ஒன்றை அணிந்துகொண்டிருந்தாள். ரவிக்கை கிழியாதிருந்தது. அவளுக்குப் பக்கத்தில் ஒரு அழுக்கு மூட்டை இருந்தது. கொஞ்சம் துணிகளும் ஒரு தட்டும் வெளியே தென்பட்டன.

ஒரு பிச்சைக்காரியாகவோ, பைத்தியக்காரியாகவோ அவள் இருக்கலாம் என்று வினோத்துக்குத் தோன்றியது. போகலாம் என்று நினைத்த கணத்தில் அவள் ஊதுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். அருகே வரும்படிச் சைகை செய்தாள். வினோத்துக்குப் போவதா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது. தன் மேலாடையின் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அதில் சில சில்லறைகள் இருந்தன. அழைத்த மரியாதைக்கு நெருங்கிச் சென்று காசைப் போட்டுவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்து அவளை நெருங்கினான். அவன் நெருங்கி அருகே வரும்வரை சிரித்தபடியே இருந்தவள், கிட்டே வந்ததும், ‘சிவனிடமும் ஒரு குழல் உண்டு’ என்று சொன்னாள்.

அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அடுத்தக் கணம் அப்படியே அவள் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். எழவேயில்லை. வெகுநேரம் அப்படியே கிடந்தான். அவனை மீறி அழுகை வெடித்துச் சிதறியது. நெடுநேரம் அழுதுகொண்டே இருந்தான். பிறகு அவனே தன்னைத் தேற்றிக்கொண்டு எழுந்து அவள் எதிரே அமர்ந்து கைகூப்பினான். அந்தப் பெண் ஒன்றும் பேசவில்லை. கண்ணை இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு, ‘நீ பாவம். உன்னை அவன் மிகவும் படுத்துகிறான்’ என்று சொன்னாள்.

‘ஆம் தாயே. சிறு வயது முதல் நான் ஒரு சிவ பக்தனாகவே இருந்தேன். ஒரு நாளில் நடைபெற்ற ஒரு சம்பவத்துக்குப் பின் என் கவனம் முழுதும் கிருஷ்ணனின்பால் சென்றுவிட்டது. பல வருடங்களாக கிருஷ்ணனைத் தவிர வேறு எதையும் நான் நினைக்கவேயில்லை. திடீரென்று இப்போது சில நாள்களாக எனக்கு வினோதமான சம்பவங்களும் அனுபவங்களும் நேர்கின்றன’.

‘என்ன தோன்றுகிறது? சிவன்தான் உனக்கு உரியவன் என்றா?’

‘இல்லை. எனக்கு எதுவும் தோன்றவில்லை. குழப்பமும் அச்சமும்தான் மனமெங்கும் நிறைந்திருக்கிறது’.

‘சரிதான். குழப்பமும் அச்சமும் இருந்தால் கிருஷ்ணன் எப்படி இருப்பான் அல்லது சிவன்தான் எப்படி வந்து உட்காருவான்?’

‘தெரியவில்லை தாயே. இதற்கு விடைதேடித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்’.

‘இங்கே என்றால்?’

வினோத் ஒரு கணம் யோசித்தான். ‘ஆம். நான் திட்டமிட்டுத் திருவண்ணாமலைக்கு வரவில்லை. ஏறி உட்கார்ந்த பேருந்து என்னை இங்கே கொண்டுவந்து இறக்கிவிட்டது. இதுவும் சிவன் செயலாக இருக்குமோ என்ற ஐயம் இருக்கிறது’.

அவள் சிரித்தாள். ‘என்னோடு வா’ என்று அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

அது கிட்டத்தட்ட கிரிவலம்தான். மலையைச் சுற்றிவரும் பாதையில் அவள் போய்க்கொண்டே இருந்தான். வினோத்தும் அவள் பின்னால் நடந்துகொண்டே இருந்தான். இடையே இரண்டு முறை நின்று, ‘உனக்குப் பசிக்கிறதா? தாகம் எடுக்கிறதா?’ என்று அவள் கேட்டாள். வினோத் இல்லை என்று சொன்னான். அதற்குமேல் அவள் எதுவும் பேசாமல் நடந்துகொண்டே இருந்தாள். ஓரிடத்துக்கு வந்து சேர்ந்ததும், ‘சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள். நாம் சிறிது தூரம் மலையில் ஏறவேண்டி இருக்கும்’ என்று சொன்னாள். வினோத் அங்கேயே அமர்ந்தான். அவள் தனது புல்லாங்குழலை அந்த அழுக்கு மூட்டைக்குள் சொருகியிருந்தது அவன் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது. சட்டென்று அதை எடுத்துப் பார்த்தான். அவள் சிரித்தாள். ‘ஊது’ என்று சொன்னாள். வினோத் அதைத் தன் வாயில் வைத்து ஊதினான். அவள் ஊதியபோது வந்தது போன்ற ஓசையே வந்தது.

அவள் மீண்டும் சிரித்தபடி, ‘காற்றில் ஒன்றுமில்லை. குழலிலும் ஒன்றுமில்லை. துவாரங்களை மூடித் திறப்பதில்தான் உள்ளது’ என்று சொன்னாள்.

‘ஆம் தாயே. சரியாக மூடவும் சரியாகத் திறக்கவும் தெரிந்தவன் கலைஞன் ஆகிறான்’.

‘ஆனால் சரியாக மூடிக்கொள்ளத் தெரிந்தால் மட்டுமே நீ சன்னியாசி ஆவாய்’ என்று அவள் சொன்னாள். வினோத்துக்கு அவள் சொன்னதன் பொருள் உடனே புரியவில்லை. ஆனால் அவள் தன்னைக் குறிவைத்து அனுப்பப்பட்டவள் என்பது மட்டும் புரிந்துவிட்டது.

சிறிது நேரம் கழித்து அவள், ‘புறப்படலாம்’ என்று சொன்னாள். அவன் எழுந்துகொண்டான். பாதையற்ற வழியில் அவள் முன்னால் உள்ள பாறைகளைப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருந்தாள். வினோத்தும் அவளைப் பின்பற்றி மலையின் மீது ஏறிக்கொண்டிருந்தான். பத்து நிமிடங்களில் அவனுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது. வியர்த்துக் கொட்டியது. அவள் திரும்பிப் பார்த்து, ‘முடியவில்லையா?’ என்று கேட்டாள். அவன் ஆம் என்று தலையசைத்ததும், ‘சரி அப்படியே உட்கார்’ என்று அவளும் ஒரு பாறையின் மீது அமர்ந்தாள். வினோத் உட்கார்ந்ததும் தனது மூட்டையைப் பிரித்து உள்ளிருந்து ஒரு சிறிய காகிதப் பொட்டலத்தை எடுத்தாள்.

‘என்ன அது?’

‘சிவ மூலிகை’ என்று அவள் சொன்னாள். அதை நன்றாகக் கசக்கி ஒரு சிறிய குழலுக்குள் திணித்தாள். மீண்டும் மூட்டைக்குள் கைவிட்டுத் தேடி ஒரு தீப்பெட்டியை எடுத்தாள். குழலை வாயில் வைத்து அதைப் பற்றவைத்தாள். அடி வயிறு வரை காற்றை இழுத்து புகையை உண்டாக்கினாள். பிறகு அந்தக் குழலை அவனிடம் கொடுத்து, ‘சாப்பிடு’ என்று சொன்னாள்.

வினோத்துக்குத் தயக்கமாக இருந்தது. ‘பழக்கமில்லை’ என்று சொன்னான்.

‘ஒன்றும் செய்யாது. சாப்பிடு’.

‘சாப்பிடுவதா?’

‘ஆம். இழுப்பதல்ல இது. இது ஒருவித உணவு. சாப்பிடு’ என்று மீண்டும் சொன்னாள். மிகுந்த தயக்கமும் அச்சமும் பதற்றமும் மேலோங்க, வினோத் அந்தக் குழலைக் கையில் வாங்கினான். விரல்கள் நடுங்கின.

‘ஏன் இவ்வளவு அச்சப்படுகிறாய்? ஒன்றும் செய்யாது. சாப்பிடு’.

அவன் வாயில் வைத்துப் புகையை இழுத்தான்.

‘உடனே விடாதே. உள்ளே தேக்கிவை’ என்று அவள் சொன்னதும், அவன் கண்ணை மூடிக்கொண்டு மனத்துக்குள் ஓம் பூஹு ஓம் புவஹ என்று சொல்ல ஆரம்பித்தான்.

அவள் வாய்விட்டு உரக்கச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அவனது ஜபம் கலைந்து கண்ணைத் திறந்து பார்த்தான். வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் புகை வெளியேறியது.

‘மீண்டும் சாப்பிடு’ என்று சொன்னாள். அவன் மீண்டும் இழுத்தான். நான்கைந்து முறை இழுத்துவிட்டு அவளிடம் கொடுத்துவிட்டான். அவள் அதை வாங்கி, தானும் இரண்டு முறை இழுத்தாள். பிறகு எரிந்த பகுதியைக் கீழே கொட்டிவிட்டு, மிச்சமிருந்த இலைத் தூளை மீண்டும் காகிதத்துக்குள் போட்டு மடித்து மூட்டைக்குள் வைத்துக்கொண்டு, ‘இப்போது நாம் போகலாம். களைப்புத் தெரியாது’ என்று சொன்னாள்.

வினோத்துக்குத் தன்னால் நடக்க முடியுமா என்று ஐயமாக இருந்தது. கால் பாதங்களுக்குள் யாரோ ஒரு மூட்டை பஞ்சை அடைத்துவைத்துவிட்டாற்போல் இருந்தது. காதுகளுக்குள் சூடாக ஒரு திரவம் வழிவதுபோல் இருந்தது. மூக்கு எரிந்தது. பசுமையற்ற மலைப்பரப்பின் வெளியெங்கும் பழுப்பு நிறத்துக்கு மாறித் தெரிந்தது. அவன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் போனதும் அவன் நின்றான். அவள், ‘என்ன’ என்று கேட்டாள். வினோத் படபடப்பாகத் தொலை தூரத்தில் எதையோ சுட்டிக்காட்டினான். அவள் பார்த்துவிட்டு மீண்டும் ‘என்ன’ என்று கேட்டாள்.

‘அதோ.. அதோ.. என் கிருஷ்ணன் தெரிகிறான்.. அவன் என்னைக் கூப்பிடுகிறான்...’

‘முட்டாள். இங்கு யாருமில்லை’.

‘இல்லை. ஒளி தெரிகிறது பாருங்கள் தாயே. அதுதான். அது அவன்தான். கிருஷ்ணா...’ என்று கதறிக்கொண்டு ஓட ஆரம்பித்தான். பத்தடி ஓடுவதற்குள் அவனுக்குக் கால் தடுக்கியது. தடாலென்று கீழே விழுந்தவன் பிடிமானமின்றி அப்படியே உருள ஆரம்பித்தான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com