113. வா!

தன் மனத்துக்குள் சிவ சிவ சிவ என்று ஜபிக்கத் தொடங்கினான். சில விநாடிகள்கூட ஆகியிருக்காது. அவனையறியாமல் சிவநாமம் மாறி கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண என்று உச்சரிப்பு வேறு விதமானது.

ஒரு நெருக்கடிக்கு ஆட்பட்டாற்போல உணர்ந்தேன். இதற்குமுன் இப்படி இல்லை. என்றுமே இருந்ததில்லை. என் சன்னியாசத்தின் சாரமான சுதந்திரத்தை அதன் பூரண வடிவில் நான் அனுபவித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரே நாளில் அனைத்தையும் யாரோ கலைத்துப் போட்டுவிட்டாற்போல் இருந்தது. நான் ஊருக்கே வந்திருக்கக்கூடாதோ என்று ஒரு கணம் தோன்றியது. உடனே அது சரியல்ல என்றும் தோன்றியது. என்னைப் போன்ற இரண்டு வேறு வேறு சன்னியாசிகளை நான் சந்தித்திருக்கிறேன். தற்செயலாக அவர்கள் என் உடன் பிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அப்படி நினைத்துக்கொள்வது சற்று வசதியாக இருந்தது. ஆனால் அந்த நினைவை மீறியும் அவர்களின் சொந்த அனுபவங்களின் மீது என் கரிசனம் சற்று அதிகம் விழுவதுபோலத் தோன்றியது. எந்தக் கணத்தில் மனம் இளகத் தொடங்குகிறதோ அப்போது ஓடிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

வினோத் தனது கதையை விவரித்துக்கொண்டிருந்தபோது பல சமயம் எனக்கு மிகுந்த மன நெகிழ்ச்சி உண்டானதை கவனித்தேன். வினய் மீதான அவனது அக்கறையையும் கரிசனத்தையும் மேலுக்குக் கிண்டல் செய்தாலும் அதே உணர்வுதான் எனக்கும் உள்ளதென்பதை எண்ணிப் பார்த்தேன். இது ஒரு சன்னியாசிக்குரிய லட்சணமல்ல என்று தோன்றியது. என் குருநாதர் ஒரு சமயம் சொன்னார், ‘விமல்! என்றைக்காவது உன் பெற்றோர், உடன் பிறந்தோர் மீது பிரத்தியேகமாக ஒரு பாசமோ பரிவோ உண்டானால் உடனே சென்று ஒரு சாக்கடைக்குள் படுத்துவிடு. அந்தக் கொசுக்கள் பயந்து அலறி எழுந்து உன்னை மொய்க்கும். ஈக்கள் உன் மூக்கின்மீது வந்து உட்காரும். துர்நாற்றமும் அந்த நாற்றம் எங்கிருந்து வந்திருக்கும் என்ற எண்ணமும் சேர்ந்து உன் வயிற்றைப் புரட்டும். எண்ணிலடங்காத நோய்களின் தொற்று உன்னைத் தாக்கும் என்று அறிவு அச்சுறுத்தும். பத்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்துவிட்டு எழுந்துபோய் நன்றாக சோப்புப் போட்டுக் குளித்துவிடு’.

நான் சட்டென்று எழுந்தேன். ‘என்ன?’ என்று வினோத் கேட்டான்.

‘ஒரு நிமிடம் இரு. வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினேன். பூக்கடை பேருந்து நிலையத்தின் பின்புறம் அந்நாள்களில் ஒரு பெரிய சாக்கடை ஆறு இருந்தது. பன்றிகள் சகஜமாகப் புரண்டு விளையாடும் சாக்கடை. நான் நடக்கத் தொடங்கியபோது அதுதான் முதலில் என் கண்ணில் பட்டது. சற்றும் யோசிக்காமல் அந்தச் சாக்கடைக்குள் இறங்கிப் படுத்துவிட்டேன்.

அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்தவர்கள் முதலில் இதைக் கவனிக்கவில்லை. நான் தவறி விழுந்திருப்பேன் என்று எண்ணி ஒரு சிலர் நெருங்கி வந்து ‘எழுந்திருங்கள், எழுந்திருங்கள்’ என்று கூக்குரலிட்டார்கள். எனக்குப் புன்னகை செய்யத் தோன்றியது. ஆனால் அமைதி காத்தேன். நன்றாக ஒருமுறை அதில் புரண்டு சாக்கடை நீரில் மூக்கை அழுத்தி தரையில் அழுந்தத் தேய்த்து அதன்பின்புதான் எழுந்தேன். அந்தக் கோலத்தில் என்னைக் கண்டவர்கள் சட்டென்று விலகிச் செல்லத் தொடங்கினார்கள். எனக்கே அது ஒரு புதிய அனுபவம்தான். குடலைப் புரட்டும் துர்நாற்றத்தை அதற்குமுன் நான் அனுபவித்ததில்லை. சில விநாடிகள் சிரமமாக இருந்தது. ஆனால் கண்டிப்பாக உயிர் போய்விடாது என்று நினைத்தேன்.

சாக்கடையை விட்டு வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். பேருந்து நிலையத்துக்குள் ஒரு குடிநீர்க் குழாய் இருந்தது நினைவுக்கு வந்தது. நேரே அதை நோக்கிச் சென்றேன். வழியில் என்னைக் கண்ட அத்தனை பேரும் விலகி ஓடினார்கள். குருநாதர் சொன்னது சரிதான் என்று தோன்றியது. அதனைக் காட்டிலும் ஓர் உன்னதமான மருந்து அந்தச் சமயத்தில் எனக்கு வேறு இருந்திருக்க முடியாது என்று பட்டது. நான் அந்தக் குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தைக் கழுவி, ஆடைகளையும் சுத்தம் செய்யத் தொடங்கியபோது வினோத் பார்த்துவிட்டான்.

‘டேய் அங்கே பார்!’ என்று வினய்க்கும் என்னைக் காட்டினான். இருவரும் இருந்த இடத்தில் இருந்து எழுந்து என்னை நோக்கி ஓடி வந்தார்கள்.

என்ன என்ன என்று வினய் பதற்றப்பட்டான்.

‘ஒன்றுமில்லை வினய். சற்று உதவி செய். தண்ணீர் பிடித்து என் மீது ஊற்று’ என்று சொன்னேன்.

அதற்குள் வினோத் ஒரு கடைக்கு ஓடிச்சென்று ஒரு தகர டப்பாவை வாங்கி வந்திருந்தான். அதில் தண்ணீரைப் பிடித்து என் மீது கொட்டினான். அவன் தண்ணீரைக் கொட்டக் கொட்ட, வினய் என் மீது படிந்திருந்த சாக்கடைக் கழிவுகளைக் கையால் தேய்த்து சுத்தம் செய்தான்.

அது முடிய ஐந்து நிமிடங்கள் ஆயின. வினோத் தன் தோள் பையில் இருந்து ஒரு சோப்பை எடுத்துக் கொடுத்தான். அதையும் தேய்த்துக் குளித்தேன். அவன் தனக்கென எடுத்துவந்திருந்த ஒரு மாற்று உடை அவனிடம் இருந்தது. அதைக் கொடுத்து என்னை அணிந்துகொள்ளச் சொன்னான். ஆயிரம் பேர் நடமாடிக்கொண்டிருந்த பேருந்து நிலையத்தில் சற்றும் வெட்கம் கொள்ளாமல் என் ஜிப்பாவையும் குர்த்தாவையும் அவிழ்த்து எறிந்துவிட்டு வினோத்தின் ஜிப்பாவையும் வேட்டியையும் அணிந்துகொண்டேன். இப்போது அவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தேன்.

‘என்ன ஆயிற்று?’ என்று வினய் கேட்டான்.

‘ஒன்றுமே இல்லை. வா’ என்று அழைத்துக்கொண்டு மீண்டும் நாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கே வந்தேன்.

‘நீ எங்கே கிளம்பிப் போனாய்? ஏன் சாக்கடையில் விழுந்தாய்?’ என்று வினோத் கேட்டான்.

‘மீண்டும் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்’ என்று பதில் சொன்னேன். அது அவனுக்குப் புரிந்திருக்காது என்று தோன்றியது.

யோசித்துப் பார்த்தால், நான் அவ்வளவு பதற்றமடைந்ததற்குக் காரணம் வினோத் விவரித்த அவனது அனுபவங்கள்தாம். ஐயோ என்று ஒரு கணம் மனத்துக்குள் கதறிவிட்டபோதுதான் சுதாரித்துக்கொண்டேன். நான் சன்னியாசி ஆனதுபோல அத்தனை சுலபமாக இன்னொருவர் ஆகியிருக்க முடியாது என்பதே உண்மை. கடைசி வரை போராடி, தனக்குத்தானே தீட்சை அளித்துக்கொண்ட வினய், இன்றுவரை அது பற்றிய குற்ற உணர்வில் தவிப்பதுகூட எனக்குப் பெரிதாகப் படவில்லை. கிருஷ்ணனால் அலைக்கழிக்கப்பட்ட கதையை வினோத் சொன்னபோதுதான் நான் மனம் நெகிழ்ந்து போனேன். வினய்யை அவன் கடைத்தேற்றுவதற்கு முன்னால் அவனுக்கு நான் என்னவாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதிர்ஷ்டவசமாக குருநாதர் சொன்ன வைத்தியம் நினைவுக்கு வந்து அதைச் செயல்படுத்தியதால் சற்று நிதானமடைந்தேன். என் நாசிக்குள் இன்னமும் அந்தச் சாக்கடையின் நெடி அடித்துக்கொண்டே இருந்தது. அது இருக்க வேண்டியதுதான் என்று தோன்றியது. அது இருக்கும்வரை நான் மீண்டும் ஒருமுறை சலனமடைய மாட்டேன் என்று சொல்லிக்கொண்டேன்.

நாங்கள் அந்தப் பேருந்து நிலைய இருக்கையிலேயே அமர்ந்திருந்தோம். இரண்டு மணி நேர இடைவெளியில் திருப்போரூர் செல்லும் பேருந்துகள் நான்கும், கோவளம் செல்லும் பேருந்துகள் இரண்டும் கிளம்பிச் சென்றதைப் பார்த்தோம். ஆனால் ஏறத் தோன்றவில்லை. அன்றைக்குச் செவ்வாய்க்கிழமை. வியாழக்கிழமை இரவுதான் அம்மா காலமாவாள் என்று அண்ணா சொல்லியிருந்ததாக வினோத் சொன்னது ஒரு காரணமாயிருக்கலாம். எப்படி யோசித்துப் பார்த்தாலும் ஐயோ என்று பதறித் துடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடும் நிலையில் நாங்கள் மூவருமே இல்லை என்பது புரிந்தது. இதை வினய்யிடம் குறிப்பிட்டு, ‘சந்தேகப்படாதே. நீ ஒரு சன்னியாசிதான் என்பதை நிரூபிக்க இந்த ஒரு காரணமே போதும்’ என்று சொன்னேன். அவன் சிரித்தான்.

சட்டென்று பேச்சை மாற்றி, ‘உன் கிருஷ்ணன் அத்தனைக் கொடூரமானவனா? எப்படி அவனைச் சகித்துக்கொண்டு இன்னமும் சுமந்துகொண்டிருக்கிறாய்?’ என்று வினோத்திடம் கேட்டான். அவன் புன்னகை செய்தான். ஆனால் பதில் சொல்லவில்லை.

எனக்கே அது வியப்புத்தான். திருமணத்துக்கு முதல் நாள் இரவு அவனது வாழ்வின் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியிருக்கிறது. அன்றைக்கு ஜானவாச ஊர்வலமெல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து படுத்தபோது வினோத் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியும் கிளுகிளுப்பும் கொண்டிருந்தான். விடிந்தால் திருமணம். புதிய மனைவி. புதிய வாழ்க்கை. தானும் மகிழ்ந்து, அம்மா அப்பாவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த அவன் தேர்ந்தெடுத்திருந்த சிறந்த உபாயம். எப்படியாவது சிரமப்பட்டு ஒரு எம்.ஏ., எம்.எட்., முடித்துவிட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியராகிவிட வேண்டும் என்று அவன் அப்போது நினைத்தான். அது அவனுக்கு முடியாத காரியமும் அல்ல. சித்ரா நிச்சயமாக அதற்கு ஒத்துழைப்பதாகச் சொல்லியிருந்ததும் அவனுக்கு மானசீக பலத்தைத் தந்திருந்தது.

அதையெல்லாம் எண்ணிக்கொண்டுதான் அவன் உறங்கச் சென்றான். அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுப்பிவிடுவேன் என்று அம்மா சொல்லியிருந்தாள். அதற்குள் சிறிது தூங்கிவிடுவது நல்லது என்றே அவனுக்குத் தோன்றியது. படுத்த சில நிமிடங்களில் தூங்கியும் விட்டான். நள்ளிரவு தாண்டி அரை மணி நேரம் ஆகியிருக்கும். சட்டென்று அவனை யாரோ தொட்டு எழுப்புவது போலிருந்தது. வினோத் கண் விழித்துப் பார்த்தபோது அறைக்குள் யாருமில்லை. விளக்கைப் போட்டுப் பார்த்தான். ஒன்றுமேயில்லை. மீண்டும் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.

இப்போது மீண்டும் யாரோ தொட்டு எழுப்புவது போன்ற உணர்வு ஏற்பட, திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தான். யாருமில்லை. வினோத்துக்குச் சிறிது அச்சமாகிவிட்டது. ‘யார்? யாரது?’ என்று குரல் கொடுத்துப் பார்த்தான். பதில் இல்லை. எழுந்து சென்று கதவைத் திறந்து மாமாவின் பக்கத்தில் படுத்துக்கொண்டுவிடலாமா என்று அவன் நினைத்த கணத்தில் அறைக்குள் யாரோ வத்திக்குச்சி கிழிப்பது போன்றதொரு சத்தம் வந்தது. ஒரு ஒளிப்புள்ளி. புள்ளிதான் அது. ஆனால் தோன்றிய கணத்தில் ஒரு பூதாகாரப் பந்தாக உருப்பெற்று சுவரின் மீது படர்ந்து உத்தரத்தில் ஏறித் தொங்கியது. வினோத்துக்கு மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டது. ஐயோ என்று கத்த நினைத்த கணத்தில் ஒரு ஓங்கார சத்தம் எழுந்து அறையெங்கும் நிறைந்தது. அவன் தன் மனத்துக்குள் சிவ சிவ சிவ என்று ஜபிக்கத் தொடங்கினான். சில விநாடிகள்கூட ஆகியிருக்காது. அவனையறியாமல் சிவநாமம் மாறி கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண என்று உச்சரிப்பு வேறு விதமானது.

அதுவரைதான் அவனுக்கு நினைவிருந்தது. அதன்பின் அந்த ஒளிக்கோளம் மெல்லக் கீழிறங்கி வந்து அவனைத் தொட்டது. ‘ஹே கிருஷ்ணா...’ என்று அலறிக்கொண்டு வினோத் விழுந்து சேவித்தான். அந்த ஒளி தரையில் படர்ந்து அவன் மார்பு வரை ஊர்ந்து அப்படியே அவனை மெல்லத் தூக்கியது. தரையைவிட்டு ஓரடி உயரத்தில் தான் மிதந்துகொண்டிருப்பதை வினோத் கண்டான். பரவசத்தில் அவன் கண்கள் தாரை தாரையாக நீர் சொரிந்துகொண்டே இருக்க, கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண என்று ஓயாமல் உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருந்தன.

சட்டென்று அந்த ஒளிப் பாளம் ஒரு குச்சியைப் போல ஒல்லியாகி நின்றது. அந்தரத்தில் இங்குமங்கும் ஆடி மிதந்தபடி அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. வினோத்துக்குத் தன்னிலை மறந்துபோனது. கிருஷ்ண ஜபத்தை விடாமல் செய்தபடி அவனும் அந்த ஒளிக் குச்சியைச் சுற்றி வர ஆரம்பித்தான். எவ்வளவு நேரம் அப்படி செய்திருப்பான் என்று தெரியாது. இறுதியில் ‘வா’ என்ற ஒற்றைச் சொல் ஒன்று எங்கிருந்தோ ஒலித்தது. யாரும் கைவைத்துத் திறக்காமல் அறைக்கதவு தானே திறந்துகொள்ள அந்த ஒளிக் குச்சி வெளியேறிச் சென்றது. வினோத் அதைப் பின்பற்றிச் செல்லத் தொடங்கினான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com