109. மூவர்

ஒரு மரணத்தை தரிசிக்க நுழைவுச் சீட்டுடன் வந்திருப்பவர்கள் நாங்கள். உயிரோடு இருந்து, கண் திறந்து பார்த்து, ஓரிரு சொற்கள் பேசவும் கூடிய நிலையில் அம்மா இருப்பாளேயானால்..

சிறு வயதில் வினோத் சற்று நிறமாக இருப்பான். அதாவது அண்ணா, வினய், என்னைக் காட்டிலும் சற்று வெளிறிய தோல். இப்போது அவனுக்கு நாற்பத்தொன்பது வயது. என்னைவிட ஒரு வயது மூத்தவன் என்பதால் யோசிக்காமல் அதைச் சொல்லிவிடுவேன். அவனது நிறம் மங்கி என்னைக் காட்டிலும் கறுத்திருந்தான். ஆனால் தலைமுடியும் தாடியும் முற்றிலும் வெளுத்திருந்தது. மாதம் ஒருமுறை மொத்தமாகச் சவரம் செய்துவிடுவான் போலிருக்கிறது. தலையிலும் முகத்திலும் முள் முள்ளாக முடி குத்தி நின்றது. பின்னந்தலையில் சிகை விட்டிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். அரைக்கை வைத்த ஜிப்பாவும் கச்சம் வைத்த வேட்டியும் அணிந்திருந்தான். கழுத்தை ஒட்டி ஒரு துளசி மாலை. நெற்றியில் கோபி சந்தனத் திருமண்.

‘உனக்கு ஏதோ சிவலிங்கம் கிடைத்தது என்று விமல் சொன்னான்’ வினய்தான் ஆரம்பித்தது.

வினோத் சிரித்தான். ‘ஆம். ஆனால் அது இப்போது என்னுடன் இல்லை’.

‘தூக்கிப் போட்டுவிட்டாயா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. அது தேவைப்பட்ட ஒருவருக்குத் தந்துவிட்டேன்’.

‘எனக்கு இது வியப்பாக இருக்கிறது வினோத். நீ ஒரு பயங்கரமான சிவபக்த சிரோமணியாக வருவாய் என்று எதிர்பார்த்திருந்தேன். எப்போது ஹரே கிருஷ்ணாவுக்கு மாறினாய்?’

அவன் நெடுநேரம் அமைதியாக இருந்தான். என்ன சொல்லலாம் என்பதைவிட எதையெல்லாம் தவிர்க்கலாம் என்று அவன் யோசிப்பது போல எனக்குத் தோன்றியது. எதையுமே சொல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தேன்.

அவன் சட்டென்று, ‘அம்மா இன்னும் இருக்கிறாள் அல்லவா?’ என்று கேட்டான்.

‘அப்படித்தான் நினைக்கிறோம். ஆனால் அதிக நாள் இருக்கமாட்டாள் என்று கேசவன் மாமா தந்தி கொடுத்திருந்தார்’.

‘அதனால்தான் வந்தேன்’.

‘நீ மாமாவோடு பேசினாயா?’

‘ஆம். போன் செய்து பேசினேன்’.

‘அட, பரவாயில்லையே? எத்தனை வருடங்களுக்குப் பிறகு?’

‘விட்டுச் சென்று இருபத்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன’.

‘எப்படிப் பிடித்தாய்?’

‘டெலிபோன் டைரக்டரியில் கோயில் நம்பரைக் கண்டுபிடித்துப் பேசினேன்’.

‘அதைவிடு. உனக்கு எப்படித் தகவல் கிடைத்தது?’ என்று வினய் கேட்டான்.

‘அண்ணா சொன்னான்’ என்று அவன் உடனே பதில் சொன்னதும் சிரித்துவிட்டேன்.

‘வேண்டாம். அவனைப் பற்றிப் பேச்செடுக்காதே. விமல் உன்னைக் கடித்துக் குதறிவிடுவான்’.

‘ஏன்?’

‘இவன் வந்திருப்பது அம்மாவின் இறுதிச் சடங்குக்கல்ல. அண்ணாவைக் கொலை செய்துவிட்டுப் போவதற்காக. அத்தனைக் கோபத்தில் இருக்கிறான்’.

வினோத் என்னை வியப்புடன் பார்த்தான். ‘அவன் ஒரு யோகி. அனைத்தும் அறிந்தவன். காலம் கடந்தவன். மரணமற்றவன். அவன்மீது உனக்கென்ன கோபம்?’ என்று கேட்டான்.

‘அதெல்லாம் இல்லை வினோத். வினய் சற்று மிகையாகச் சொல்கிறான். ஒரு சில கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்துவிட்டால் போதும். என் கோபம் தணிந்துவிடும்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். அவன் கண்ணை மூடிக்கொண்டு ஹரே கிருஷ்ணா என்று சொன்னான்.

‘சரி வினய் கேட்டதற்கு பதில் சொல். எப்போது நீ மதம் மாறினாய்?’

அவன் எங்கள் இருவரையும் புன்னகையுடன் ஒரு பார்வை பார்த்தான். பிறகு தொலைவில் எங்கோ வெறித்துப் பார்த்தபடி சொன்னான், ‘திருமணத்துக்கு ஒருநாள் முன்பு’.

‘அப்படியா? உன் ஜானவாசத்தன்று உனக்கு சிவன் காட்சி கொடுத்து கடத்திக்கொண்டு போய்விட்டான் என்று நினைத்தேனே?’

‘காட்சி கிடைத்தது உண்மை. ஆனால் சிவனல்ல. கிருஷ்ணன்’ என்று சொன்னான்.

எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. காவிரியில் அவனுக்கு லிங்கம் கிடைத்ததற்கு சாட்சியாக இருந்தவன் நான். அன்றிரவே அவன் விட்டுச் சென்றுவிடுவான் என்று நினைத்திருந்தேன். அது நடக்கவில்லை. வினய் சென்று, நானும் சென்று, பல ஆண்டுகள் வீட்டுப் பிள்ளையாக இருந்து, அம்மாவின் சந்தோஷத்துக்குத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்து, அந்த நாளைத் தவிர்த்துவிட்டு ஓடிப் போயிருக்கிறான். அந்தக் கொலை பாதகத்துக்கு சிவன் தான் காரணம் என்று நினைத்திருந்தேன். கள்ளப் பயல் கண்ணன் ஏன் முந்திக்கொண்டான்?

‘அது ஒரு அதிசயம். நான் எண்ணிப் பார்த்திராத அதிசயம்’ என்று அவன் சொன்னான்.

நாங்கள் செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்ததும் வினய் பல் துலக்க வேண்டும் என்று சொன்னான். ஒரு கடையில் பிரஷ்ஷும் பேஸ்டும் வாங்கினோம். ‘எங்கள் இருவரிடமும் பணம் இல்லை. உன்னிடம் இருக்கிறதா?’ என்று வினோத்தைக் கேட்டேன். அவன் சிரித்தபடி பணம் எடுத்துக் கொடுத்தான்.

‘பார்த்தாயா வினய்? இதைத்தான் சொன்னேன். இதைத்தான் நான் செய்கிறேன். இன்று மட்டுமல்ல. என்றும். எப்போதும்’.

வினய் ஒரு குழந்தையைப் போலச் சிரித்தான். உண்மையில் நெடுங்காலம் கழித்து அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல எனக்குத் தோன்றியது. ஆனால் அதை எப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியும்? ஒரு மரணத்தை தரிசிக்க நுழைவுச் சீட்டுடன் வந்திருப்பவர்கள் நாங்கள். உயிரோடு இருந்து, கண் திறந்து பார்த்து, ஓரிரு சொற்கள் பேசவும் கூடிய நிலையில் அம்மா இருப்பாளேயானால் உண்மையில் அவளும் மகிழ்ச்சியே அடைவாள்.

‘எனக்கென்னவோ இது பேராசை என்று தோன்றுகிறது’ என்று வினய் சொன்னான்.

‘ஆசையெல்லாம் இல்லை. இப்படியே என்னைத் திரும்பிப் போகச் சொன்னால்கூடப் போய்விடுவேன்’ என்று சொன்னேன்.

‘அது நம் அனைவருக்குமே முடியும். இப்போது தோன்றுகிறது. என் துறவின் ஆகப்பெரிய லாபம், என்னால் உறவுச் சிடுக்குகளில் இருந்து முற்றிலுமாக விடுபட முடிந்திருப்பதுதான். அம்மா சாகக் கிடக்கிறாள் என்ற செய்தி எனக்கு எந்தச் சலனத்தையும் தரவில்லை’ என்று வினய் சொன்னான்.

நான் வினோத்தைப் பார்த்தேன். ‘இல்லை. எனக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. கிருஷ்ணனின் பாதாரவிந்தங்களில் அவள் சென்று சேரப் பிரார்த்தனை செய்வது தவிர. நான் வந்ததே அதற்குத்தான். ஒரு சிறிய பிரார்த்தனை. அதை மட்டும் செய்துவிட்டுப் போய்விடுவேன்’ என்று சொன்னான்.

‘அந்தப் பிரார்த்தனையை நீ இருந்த இடத்தில் இருந்தபடியே நிகழ்த்த முடியாதா?’

‘முடியும். ஆனாலும் அம்மா அல்லவா?’

நான் சிரித்தேன். அவன் தோளைத் தட்டி, ‘சும்மா கேட்டேன்’ என்று சொன்னேன்.

நாங்கள் பல் துலக்கி முகம் கழுவினோம். ரயில் நிலையத்திலேயே இருந்த ஒரு உணவகத்துக்குள் சென்று அமர்ந்தோம்.

‘மூன்று பேர் ஏதாவது சாப்பிடும் அளவுக்கு நீ பணம் வைத்திருக்கிறாயா?’ என்று வினய், வினோத்திடம் கேட்டான். வினோத் தன் ஜிப்பா பாக்கெட்டில் கைவிட்டு இருந்ததை எடுத்து எண்ணிப் பார்த்துக்கொண்டு, ‘இருக்கிறது’ என்று சொன்னான்.

‘உன் இடாகினியை நீ போகவிட்டிருக்கக்கூடாது வினய். அது இருந்திருந்தால் இப்போது மிகவும் உதவியிருக்கும்’ என்றேன். அவன் என்னை முறைத்தான். நாங்கள் ஆளுக்கு இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு காப்பி குடித்தோம்.

‘நீ ஏன் இப்படி இருக்கிறாய்? ஏன் இந்தக் கோலம்?’ என்று வினோத், வினய்யைப் பார்த்துக் கேட்டான். அவன் சிரித்தான். தார்ப்பாய்ச்சிக் கட்டிய நான்கு முழ அழுக்கு வேட்டி மட்டுமே அவன் அணிந்திருந்தான். வெற்று மார்பில் பாதிக்குமேல் முடியெல்லாம் நரைத்திருந்தது. முகம் மண்டிய தாடியும் சிடுக்கு விழுந்த தலைமுடியும் அழுக்கேறிய நகங்களும் அவனை உறுத்தியிருக்க வேண்டும்.

‘எனக்கு இதுவே அதிகம்’ என்று வினய் சொன்னான். ‘அதைவிடு. அண்ணாவை நீ நடுவில் பார்த்தாயா?’

‘ஓ. ஒருமுறை பார்த்தேன்’.

‘எங்கே?’

‘நான் மாயாபூரில் இருந்தபோது அவன் அங்கே வந்தான். அன்றைக்கு ஜென்மாஷ்டமி. எங்கள் கோயிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தார்கள். பாட்டும் நடனமும் பஜனையும் பாராயணமுமாக அன்று முழுவதும் நாங்கள் கொண்டாடித் தீர்த்துக்கொண்டிருந்தோம். எல்லாம் முடிந்து நள்ளிரவுக்குப் பிறகுதான் நான் சாப்பிட்டுவிட்டுக் கைகழுவப் போனேன். அண்ணா அங்கே நின்றுகொண்டிருந்தான்’.

‘எங்கே?’

‘எங்கள் கோயிலுக்குப் பின்புறம் இருந்த குழாயடியில்’.

‘எதற்கு வந்தான்?’

‘என்னைப் பார்க்கத்தான்’.

‘என்ன சொன்னான்?’

'அப்பா இறந்துவிட்டார் என்று சொன்னான்.'

எனக்கு நினைவுக்கு வந்தது. அப்பா ஒரு கிருஷ்ண ஜெயந்தி அன்றுதான் இறந்ததாக கேசவன் மாமா சொன்னார். எனக்கு அவர் சொன்னதை நான் வினய்க்குச் சொல்லியிருந்தேன். இவனுக்கு மட்டும் அண்ணாவே நேரில் போய் எதற்குச் சொல்ல வேண்டும்?

‘நான் கிருஷ்ணனால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என் மூலமாக அப்பாவுக்கு நற்கதி கிடைக்கச் செய்ய அவன் நினைத்திருப்பான்’ என்று வினோத் சொன்னதும் நான் உரக்கச் சிரித்தேன்.

‘வினய், சொரிமுத்துவைக் காட்டிலும் இவன் பெரிய டிராவல் ஏஜெண்டாக இருப்பான் போலிருக்கிறதே?’ என்றேன். வினய்யும் சிரித்தான். சட்டென்று வினோத்திடம், ‘நீ திருவானைக்கா சொரிமுத்துவிடம் போனாயா?’ என்று கேட்டான்.

‘யார் அது?’

‘சரி. இவன் மட்டும் தப்பித்தான்’.

நாங்கள் சாப்பிட்டு முடித்து ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். வினோத் ஒரு பிளாட்பாரத் துணிக்கடையில் ஒரே ஒரு காவி வேட்டியும் துண்டும் வாங்கி வினய்யிடம் கொடுத்தான். அது டிசம்பர் மாதம் என்பதால் எங்கெங்கும் ஐயப்ப பக்தர்கள் நிறைந்திருந்தார்கள். எல்லா கடைகளிலும் காவி வேட்டி எளிதாகக் கிடைத்தது. வினய், நடுச் சாலையிலேயே அதை விரித்து உதறிக் கட்டிக்கொண்டு, தனது பழைய அழுக்கு வேட்டியை உருவி சுருட்டி எறிந்தான். நாங்கள் பேசியபடியே செண்ட்ரலில் இருந்து பிராட்வேக்கு நடக்க ஆரம்பித்தோம்.

‘பரவாயில்லை வினோத். நீ ஒரு பணமுள்ள சன்னியாசியாக இருக்கிறாய். உன் கிருஷ்ணன் உன்னை சௌக்கியமாக வைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன்’ என்று வினய் சொன்னான்.

‘சௌக்கியத்துக்கு என்ன குறை? ஆனால் நான் ஒரு அமைப்பில் சிக்கிக்கொண்டதில் அண்ணாவுக்குச் சற்று வருத்தம்தான்’.

‘வெளியேறச் சொல்கிறானா? செய்துவிடாதே. அவன் ஒரு சர்வ அயோக்கியன். அவன் பேச்சைக் கேட்டால் நீ இவனைப் போலாகிவிடுவாய்’ என்று சொன்னேன்.

வினய் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். வினோத்துக்கு அது புரியவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com