114. ஒளியின் வழி

அந்தக் கணமே பாய்ந்து சென்று கிருஷ்ணனின் பாதாரவிந்தங்களைப் பற்றிக்கொண்டு அவனோடே கரைந்து காணாமலாகிவிட வேண்டும் என்ற வெறி உண்டானது. தன் சக்தியெல்லாம் திரட்டிக்கொண்டு அவன் கோயிலை நோக்கி ஓடத் தொடங்கினான்.

மூன்று பகல்கள், நான்கு இரவுகள். வினோத் நடந்துகொண்டே இருந்தான். அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த ஒளிக்கோடு ஒரு கட்டத்தில் அவன் கண்ணைவிட்டு மறைந்துவிட்டது. ஆனாலும் தனக்கு வழி தெரியும் என்று அவனுக்குத் தோன்றியது. ஒரு தீர்மானத்துடன் செலுத்தும் சக்தியைப்போல அவன் மனமே அவனை வழிநடத்திப் போய்க்கொண்டிருந்தது. இடையில் அவன் எங்கும் நிற்கவில்லை. உணவு உட்கொள்ளத் தோன்றவில்லை. நீர் அருந்தவும் அவசியம் இருக்கவில்லை. தன் உணர்வு முற்றிலும் இல்லாமல் போய் அவன் மனமும் மூளையும் முற்றிலும் பாதங்களுக்கு இறங்கி அவற்றைச் செலுத்திக்கொண்டிருந்தன. விடிந்தால் தனக்குத் திருமணம் என்பதோ, தன்னைக் காணாமல் வீட்டில் தேடுவார்கள் என்பதோ அவன் நினைவில் அறவே இல்லை. கனவுகளுடன் காத்திருந்த சித்ராவைக் குறித்த எந்த எண்ணமும் எழவில்லை. ஊரே கூடித் தன் வீட்டின் முன் நின்று சபிக்கும் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை. அவன் சிந்தை முழுதும் கிருஷ்ணன் நிறைந்திருந்தான். கிருஷ்ணன் அவன் பாதங்களில் அமர்ந்துகொண்டு அவனைச் செலுத்திக்கொண்டிருந்தான்.

நாள்களும் நேரமும் பகலிரவும் முற்றிலும் மறந்து நடந்துகொண்டே இருந்தவன் ஏதோ ஓரிடத்தில் மயங்கி விழுந்தான். எவ்வளவு நேரம் அவன் மயக்கத்தில் இருந்தான் என்று அவனுக்குத் தெரியாது. கண் விழித்தபோது மிகவும் பசித்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். அது ஒரு நெடுஞ்சாலை. கண்ணுக்கெட்டிய தொலைவில் கடைகள் ஏதும் இல்லை. மனித நடமாட்டமும் தென்படவில்லை. தான் எங்கே வந்திருக்கிறோம் என்று அறிந்துகொள்ள விரும்பினான். இன்னும் சிறிது தூரம் நடக்கலாம் என்று முடிவு செய்தபோது, எந்தப் பக்கம் இருந்து வந்தோம் என்ற குழப்பம் ஏற்பட்டது. சட்டென்று அங்கேயே அமர்ந்து கண்களை மூடி கிருஷ்ண ஜபம் செய்யத் தொடங்கினான். நூற்றெட்டு முறை ஜபித்துவிட்டு எழுந்ததும் அவனது பாதங்கள் மீண்டும் அவனைச் செலுத்திக்கொண்டு போயின. ஆனால் இப்போது அவனுக்குக் கால் வலித்தது. களைப்புத் தெரிந்தது. பசி குதறிப் போட்டுக்கொண்டிருந்தது. ஒரு நெடுஞ்சாலை உணவகம் கண்ணில் பட்டது. உணவகத்தின் வெளியே நான்கைந்து பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன.

வேறெதையும் சிந்திக்காமல் அவன் நேரே உணவகத்தினுள் நுழைந்து அமர்ந்தான். காணாதது கண்டாற்போல எட்டு இட்லிகள் சாப்பிட்டான். நிறையத் தண்ணீர் குடித்தான். நேரே கல்லாவுக்கு வந்து, தன்னிடம் உண்டதற்குப் பணமில்லை என்று சொன்னான். அங்கிருந்த நான்கைந்து பேர் அவனை இழுத்துப்போட்டு அடி அடி என்று அடித்தார்கள். வினோத் பொறுமையாக அடிகளை வாங்கிக்கொண்டான். அவன் சுருண்டு விழுந்துவிடுவான் என்று தெரிந்தபோது உணவக முதலாளி, ‘சனியனை விட்டுவிடுங்கள்’ என்று சொன்னார். அவன் அந்த நபருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான். மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.

மேலும் இரண்டு நாள்கள் நடந்த பின்பு அவன் கோயமுத்தூரை அடைந்தான். கண்ணில் தென்பட்ட திருமண மண்டபத்தில் இருந்து நாகஸ்வர ஓசையும் மேளச் சத்தமும் கேட்டது. வினோத் அந்த மண்டபத்துக்குள் நுழைந்து நேரே உணவு அரங்கத்துக்குச் சென்றான். திருப்தியாக அமர்ந்து சாப்பிட்டான். வெளியே வரும்போது வெற்றிலை பாக்கு கவர் ஒன்று கொடுத்தார்கள். அதில் ஒரு தேங்காயும் இருந்தது. அதை அடுத்த வேளைக்கு வைத்துக்கொண்டான். ஒரு லாரி டிரைவரிடம் தன்னிடம் பணம் இல்லாததைச் சொல்லி, எப்படியாவது தன்னை குருவாயூருக்குக் கொண்டு சேர்த்துவிட முடியுமா என்று கேட்டான். இரக்க சுபாவம் கொண்ட அந்த டிரைவர், அவனை குருவாயூர் வரை செல்லும் தனது சக டிரைவர் நண்பனின் லாரியில் ஏற்றி அனுப்பிவைத்தார்.

வினோத் குருவாயூரைச் சென்றடைந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. தன்னை ஏற்றிவந்து இறக்கிவிட்ட லாரி டிரைவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவன் கோயிலை நோக்கி நடந்தான். இதுதான், இதுதான் என்று அவன் மனத்துக்குள் ஒரு குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தக் கணமே பாய்ந்து சென்று கிருஷ்ணனின் பாதாரவிந்தங்களைப் பற்றிக்கொண்டு அவனோடே கரைந்து காணாமலாகிவிட வேண்டும் என்ற வெறி உண்டானது. தன் சக்தியெல்லாம் திரட்டிக்கொண்டு அவன் கோயிலை நோக்கி ஓடத் தொடங்கினான். பத்து நிமிடங்கள் ஓடியபின்பு கோயில் கண்ணுக்குத் தென்பட்டது. வழியெங்கும் இருந்த கடைகளை மூடியிருந்தார்கள். பக்தர்கள் வெகு சாதாரணமாகச் சாலை ஓரங்களிலேயே குடும்பம் குடும்பமாகப் படுத்துக் கிடந்தார்கள். கோயிலை நெருங்கிய பின்புதான் அவனுக்கு இந்நேரம் கோயில் நடை சாத்தியிருக்கும் என்பதே நினைவுக்கு வந்தது. வேறு வழியின்றி அவனும் ஒரு கடை வாசலில் படுத்தான். நன்றாக உறங்கிவிட்டான்.

மறுநாள் காலை விடிந்து எழுந்தபோது அவனுக்குள் இருந்த வெறி சற்று மட்டுப்பட்டு கனிந்த பக்தி ஒன்றே மேலோங்கியிருந்தது. யாரோ ஒரு பக்தரை நிறுத்தி, தனக்கு ஒரு வேட்டி மட்டும் வாங்கித் தர முடியுமா என்று கேட்டான். அவர் சம்மதித்து, அவனை ஒரு கடைக்கு அழைத்துச் சென்று ஒரு வேட்டி வாங்கிக் கொடுத்தார். வினோத் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ருத்ர தீர்த்தத்தை நோக்கிச் சென்றான். நிம்மதியாக நீரில் இறங்கிக் குளித்து எழுந்தான். படிக்கட்டில் கிடந்த ஒரு கோபி சந்தனத் துண்டை எடுத்துக் குழைத்து நெற்றியில் இட்டுக்கொண்டான். புதிய வேட்டியை அணிந்துகொண்டு பழைய உடைகளைத் தூக்கிப் போட்டான். கோயிலுக்குள் செல்ல வரிசையில் நிற்கும் கூட்டத்தோடு சென்று தானும் நின்றுகொண்டான். அன்று காலை எட்டு முப்பதுக்கு அவனுக்கு குருவாயூரப்பன் தரிசனம் கிடைத்தது. சன்னிதியில் அவன் தன்னிலை மறந்து கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறியதை சுற்றி இருந்தவர்கள் வினோதமாகப் பார்த்தார்கள். தன்னை அதுவரை செலுத்திவந்த ஒளி இப்போது மீண்டும் தோன்றி அப்படியே தன்னை ஏந்தி எடுத்துச்சென்று கிருஷ்ணனுடன் சேர்த்துவிடாதா என்று மிகவும் ஏங்கினான். ஆனால் அவ்வாறு ஏதும் நிகழவில்லை. ஆள்கள் பிடித்து இழுத்து அவனை மற்றவர்களோடு வெளியே தள்ளிவிட்டார்கள்.

அன்று முழுதும் அவன் கோயிலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தான். பிரசாத வரிசையில் நின்று பிரசாதம் வாங்கி உணவாக உட்கொண்டான். இந்த உலகத்திலேயே தனக்கு மிகுந்த பாதுகாப்பான இடம் அந்தக் கோயில்தான் என்று அவன் மனத்துக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. காலம் முழுதும் அங்கேயே இருந்து தீர்த்துவிட முடிவு செய்துகொண்டு, மாலை மீண்டும் ருத்ர தீர்த்தக் கரைக்குச் சென்றான். அங்கே அவன் க்ஷேத்ரக்ஞ தாஸ் கோஸ்வாமி என்ற சன்னியாசியைச் சந்தித்தான்.

சுவாமிஜி பாலக்காட்டைச் சேர்ந்தவர். ஆலத்தூரில் பிறந்து வளர்ந்து அங்கேயே படிப்பை முடித்துவிட்டு கிருஷ்ண பக்தி இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவர். குளக்கரையில் வினோத் அவரைப் பார்த்தபோது அவனையறியாமல் அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. சற்றும் தயங்காமல் அவர் அருகே சென்று நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்தான். ஆசி சொல்லி எழுப்பிய சுவாமி அவனைப் பற்றி விசாரித்தார்.

‘என்னைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை சுவாமி. எனக்கு கிருஷ்ணனைக் காட்டித் தருவீர்களா?’ என்று வினோத் கேட்டான்.

அன்றைக்கு நெடுநேரம் அவனோடு பேசிக்கொண்டிருந்த சுவாமிஜி, தான் கிளம்பும்போது அவனைத் தன்னோடு அழைத்துச் சென்றார். வினோத் சில மாதங்கள் பெங்களூரில் தங்கியிருந்தான். அதற்கு முன்புவரை ஒரு வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த கிருஷ்ண பக்தர்கள், அந்த ஆண்டுதான் பெங்களூர் வளர்ச்சிக் கழக அதிகாரிகளைச் சந்தித்து கிருஷ்ணருக்குக் கோயில் கட்ட ஓர் இடம் ஒதுக்கித் தரும்படிக் கேட்டார்கள். அந்த ஆண்டு ஆகஸ்டு மாதத் தொடக்கத்தில் கிருஷ்ணருக்கு அங்கே ஓர் இடம் கிடைத்துவிட்டது. பெங்களூர் நகரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு சிறு குன்றை அதிகாரிகள் கிருஷ்ணருக்காக விட்டுக்கொடுக்க முன்வந்தார்கள். ஏழு ஏக்கர் பரப்பளவுள்ள வெறும் பாறைக் குன்று. மருந்துக்கும் அங்கே பசுமை கிடையாது. ‘முடிந்தது இந்த இடம்தான். என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள்’ என்று அதிகாரிகள் சொன்னார்கள்.

அந்தக் குன்றை கிருஷ்ணனின் பேராலயமாக மாற்றும் முயற்சியில் பெங்களூர் பக்தர்கள் ஈடுபட ஆரம்பித்தபோது, வினோத் தன்னை அந்தப் பணியில் முற்றுமுழுதாக ஈடுபடுத்திக்கொண்டான். ஒரு தன்னார்வலனாக அவனது ஈடுபாடும் அர்ப்பணிப்பும் க்ஷேத்ரக்ஞ தாஸ் கோஸ்வாமிக்கு மிகவும் பிடித்துப்போனது. அடுத்த வருடம் இலங்கைக்கு ஒரு நீண்ட சுற்றுப்பயணம் புறப்பட்ட சன்னியாசிகள் குழுவோடு, பிரம்மச்சாரி உதவியாளர்களுள் ஒருவனாக வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டான். வெள்ளை உடுப்பும் சிறு சிகையும் துளசி மாலையும் கோபி சந்தனமும் அணிந்து அவன் டோலக் அடித்துக்கொண்டும் கிருஷ்ண பஜன் பாடிக்கொண்டும் சன்னியாசிகளோடு சேர்ந்து சென்னை வந்தான். வீட்டைக் குறித்த நினைவு அவனுக்கு அப்போது அறவே இல்லை. ஓரிரவு மட்டும் பிராட்வே ஆர்மீனியன் தெருவில் ஒரு இல்லத்தில் தங்கியிருந்துவிட்டு மறுநாள் புறப்பட்ட கப்பலில் அவர்கள் குழு இலங்கைக்குக் கிளம்பியது.

அந்தக் கப்பல் கொழும்பு சென்றடைந்தபோது, அவனுக்கு மீண்டும் அந்தப் பேரொளியின் தரிசனம் கிடைத்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com