146. திரிபுவனச் சக்கரவர்த்தி

எல்லா வேளையும் அறுசுவை உணவு உண்டு, சப்ர மஞ்ச கட்டிலில் படுத்துறங்கி, தோன்றினால் நீதி போதனை சொல்லிக்கொண்டு, ஒன்றும் தோன்றாதபோது பல்லக்கில் ஏறி உலகைச் சுற்றி வரலாம்.

என் வியப்பின் அடி ஆழக் கசண்டு வரை சுரண்டி எடுத்து என் விழிகள் வெளியே கொட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டும். வினய் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்துப் புன்னகை செய்தான். ‘மணல் இப்போது சுடவில்லையா?’ என்று கேட்டான்.

‘இல்லை. எனக்கு சூடு பழகிவிட்டது அல்லது மரத்துவிட்டது’.

‘அநேகமாக மறந்திருக்கும்’ என்று அவன் சொன்னான்.

‘இருக்கலாம். நீ சொன்னதையெல்லாம் கேட்ட பின்பு நீ நினைவில் இருப்பதே வியப்புக்குரிய விஷயம்தான்’.

‘என்னால் அவளைப் புரிந்துகொள்ள முடிகிறது விமல். ஆனால் அவளுக்கு எந்த நியாயமும் உவப்பானதில்லை’.

‘இதில் நியாயம் என்ன இருக்கிறது? அவள் இடத்தில் நீ இருந்தாலும் அதைத்தான் விரும்புவாய். அதுசரி, உன்னை ஒன்று கேட்கிறேன். ஒரு பேயால் கேவலம் ஒரு கொலை செய்ய முடியாதா? அதற்கு எதற்கு அவள் ஒரு அடியாள் தேடுகிறாள்?’

வினய் புன்னகை செய்தான்.

‘அவள் வினோத்தை விரும்பியிருக்கிறாள். நெடுநாள் அல்ல என்றாலும் பழகிய சில தினங்களில் அவன் மீது காதல் வயப்பட்டிருக்கிறாள்’.

‘அதனால் என்ன?’

‘அவனை மீண்டும் சந்தித்தால் பழைய காதல் மீண்டும் துளிக்குமென்று அஞ்சுகிறாள்’.

‘கஷ்டம். ஆவியின் காதல். சனியன், இருந்துவிட்டுப் போகட்டுமே. கொலையும் காமத்துக்கு நிகரான வீரியம் கொண்டதுதானே? செய்துவிட்டுப் போய்விடலாமே?’

‘உனக்குப் புரியவில்லை. அவள் தனது காதலைப் பரிசுத்தமானதென்று கருதுகிறாள். அதன் புனிதத்தை அவன் கொச்சைப்படுத்திவிட்டதாக நினைக்கிறாள். அது உண்டாக்கிய கோபத்தின் மையப்புள்ளிதான் அவளது தவத்தின் தொடக்கம். தவத்தின் உச்சம் என்பது சம்ஹாரம். அது நிகழ்ந்துவிட்டால் அவள் அடங்கிவிடுவாள்’.

‘எங்கிருந்து அடங்குவது? அவளுக்காக நீ கொலை செய்தால் அவளது தவப்பலன் முழுதும் உன்னைச் சேர்ந்துவிடுமல்லவா?’

‘ஆம். அப்படித்தான் சொன்னாள்’.

‘ஒருவேளை நீ செய்ய மறுத்தால்?’

‘அவள் எமனுலகம் போய்விடுவாள். அதன்பின் விதிப்படி அவளுக்கு என்ன உள்ளதோ அதை அனுபவிப்பாள்’.

எனக்கு ஒரு மாயாஜாலக் கதை கேட்பது போலிருந்தது. பிடித்திருந்தது. எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் வினய் தனக்கு நடந்ததை என்னிடம் விவரித்துக்கொண்டிருந்தான். அவனளவு மனக்கட்டுப்பாடும் பரவசம் தவிர்த்த சிந்தையும் எனக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்று வருத்தமாக இருந்தது. உன் தம்பியை எனக்காக நீ கொலை செய்வாயா என்று ஒரு ஆவி என்னிடம் கேட்டிருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்த்தேன். குறைந்தது அசிங்கமாகச் சில சொற்களைப் பேசியிருப்பேன். சொற்களால் அதன் சீற்றத்தைக் கிளறிவிடும் மகிழ்ச்சியையாவது அடையப் பார்த்திருப்பேன். அல்லது அமைதியாக நேரம் எடுத்து யோசிக்க ஆரம்பித்திருப்பேன். அரை நூற்றாண்டுக்கால வாழ்வுக்குப் பிறகு கிடைக்கக்கூடிய ஆத்மிக லாபத்தைக் கருத்தில் கொண்டு யோசித்துப் பார்த்தாலும் தவறில்லை. ஒன்றை அழிக்காமல் இன்னொன்றில்லை என்பது இயற்கை நியதி. அழிக்கும் சக்தியாக அல்லாமல், சக்தியின் கருவியாக மட்டுமே இருப்பதில் பிழையில்லை என்ற முடிவுக்குக் கூட வந்திருப்பேன். சந்தேகமின்றி நான் ஒரு சராசரி. எனது பலங்கள் அனைத்தும் என் பலவீனங்களால் வடிவமைக்கப்பட்டவை. சந்தர்ப்பங்களின் சாதகங்களைப் பற்றிக்கொண்டே எனது காலம் காலடியே உருண்டு சென்றிருக்கிறது. பெரிய இழப்புகள் இதுவரை இல்லை. எதையும் பெரிதாக அடைந்துவிடவும் இல்லை. ஆயினும் நான் ஒரு வெற்றிகரமான சன்னியாசி. ஆயிரக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கையான குரு. என்னை அண்டியிருப்பதன் சௌகரியத்தை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உணர்வதாக எப்போதும் என் சீடர்கள் சொல்லுவார்கள்.

‘என்ன யோசிக்கிறாய்?’ என்று வினய் கேட்டான்.

‘இல்லை. என்னை சித்ராவிடம் அழைத்துச் செல்கிறாயா?’

‘எதற்கு?’

‘பேசிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது’.

‘அநேகமாக அது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்’.

‘ஏன்?’

‘நீ அதற்குத் தகுந்தவன் அல்ல’.

‘அப்படியா?’

‘அப்படித்தான் நினைக்கிறேன். அவள் உயிரற்றவள். ஆனாலும் அவள் ஒரு ரிஷி. தவம் இருந்து வரம் பெற்றிருப்பவள். யாருடன் பேசுவது என்பது அவளது தேர்வு. அவளது தீர்மானம். நீதான் இதற்குச் சரியானவன் என்று அவள் நினைத்திருந்தால் அவள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்க அவசியமில்லை. நேரடியாக உன்னிடம் வந்திருப்பாள்’.

‘நாய் அவதாரம் எடுத்த சொரிமுத்து என்னைத் தேர்ந்தெடுத்த மாதிரியா?’

வினய் சிரித்துவிட்டான். ‘அது எனக்கே வியப்புத்தான். கிழவன் என் மீது மிகவும் கோபத்தில் இருக்கிறான் என்று நினைக்கிறேன்’.

‘விடு. அப்படியொன்றும் அவன் என்னிடம் தேவ ரகசியம் பேசிவிடவில்லை. அண்ணா வந்துவிட்டானா என்று கேட்டதுடன் சரி. அதன்பின் ஒரு சொல்கூடப் பேசவில்லை’.

வினய் சிறிது நேரம் மணல் பரப்பில் அப்படியே கால் நீட்டிப் படுத்தான். சுட்டெரிக்கும் வெயிலைக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு கிடந்தான். பிறகு மீண்டும் எழுந்து உட்கார்ந்து, ‘விமல், எனக்கு நீ உண்மையாக பதில் சொல்வாயா?’ என்று கேட்டான்.

‘நான் பொய் சொல்வதில்லை. தைரியமாகக் கேள்’.

‘என் இடத்தில் நீ இருந்திருந்தால் அவளுக்கு என்ன பதில் சொல்வாய்?’

நான் ஏற்கெனவே எண்ணியதுதான். திரும்பக் கேட்கிறான். ஆனால் இருவிதமான எனது மனநிலை அவனுக்கு உகந்த பதிலாக இருக்காது என்று தோன்றியது. எனவே யோசித்தேன்.

‘அவசரமில்லை. நிதானமாக யோசித்துப் பதில் சொன்னால் போதும்’.

‘என் பதில் உனக்கு அவ்வளவு முக்கியமா? நீ ஒரு சன்யாசி. பற்றற்றவன். நீ யோசிக்க வேண்டியது ஒன்றுதான். ஒரு கொலை செய்யலாமா, வேண்டாமா. அவ்வளவுதானே? இதை நீ ஒரு கோழி பலி கொடுப்பது போலக்கூடக் கருத இடம் இருக்கிறது’.

‘பலி தத்துவம் வேறு. அதைக் கொச்சைப்படுத்தாதே’ என்று வினய் சொன்னான்.

‘மன்னித்துக்கொள். எனக்கு சடங்குகள் மீது நம்பிக்கை கிடையாது’.

‘என் கேள்வியெல்லாம் ஒன்றுதான். சில தனிப்பட்ட லாபங்களுக்காக ஒரு கொலை செய்வது சன்னியாசத்துக்கல்ல; மனிதப் பிறப்புக்கே இழுக்காகி விடுமல்லவா?’

‘ஆனால் பெரிய லாபம். அதையும் நீ யோசிக்க வேண்டும்’.

‘ஆம். பெரிதுதான். அவள் சொன்னது நடக்குமானால் நான் திரிபுவனச் சக்கரவர்த்தி’.

திரிபுவனச் சக்கரவர்த்தி! எத்தனை வண்ணமயமான பீடம்! என் சகோதரன் அப்படியொரு பீடத்தில் ஏறி அமருவானேயானால் நான் அவனது சபையில் ஒரு ராஜகுருவாக இருப்பேன். எல்லா வேளையும் அறுசுவை உணவு உண்டு, சப்ர மஞ்ச கட்டிலில் படுத்துறங்கி, தோன்றினால் நீதி போதனை சொல்லிக்கொண்டு, ஒன்றும் தோன்றாதபோது பல்லக்கில் ஏறி உலகைச் சுற்றி வரலாம். ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டுமானால் அவன் வினோத்தைக் கொலை செய்ய வேண்டும்.

‘அவன் பாவம் விமல். என்னால் அவனைப் புரிந்துகொள்ள முடிகிறது. பக்தி என்பதே ஒருவித உணர்வுநிலை உச்சம்தான். மூளையை மழுங்கடித்துத்தான் மனம் எழுச்சி பெறுகிறது. அவன் அப்படியொரு தருணத்தில் சித்ராவை விட்டுச் சென்றான். உண்மையில் அந்தக் கணத்தில் அவனுக்கு சித்ரா உள்பட யார் நினைவும் வந்திருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் அம்மாவைக்கூட அவன் நினைத்துப் பார்த்திருக்கமாட்டான்’ என்று வினய் சொன்னான்.

‘உண்மை. நானும் அதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் உனக்கு ஒன்று சொன்னால் நம்புவாயா? நான் முற்று முழுதான விழிப்பு நிலையில்தான் என் துறவு நிலையை எட்டிப் பிடித்தேன். இனி இது எதுவும் வேண்டாம் என்று முடிவு செய்தபோது நான் அம்மாவை நினைத்தேன். அப்பாவை நினைத்தேன். அண்ணாவை, உன்னை, வினோத்தை, மாமாவை, கோயிலை, நித்ய கல்யாணப் பெருமாளை, பட்டாச்சாரியாரின் வியர்வை துர்நாற்றத்தை, கோவளம் சம்சுதீனை - ஒருத்தர் மிச்சமில்லை. அனைவரையும் நினைவுகூர்ந்து என்னிடம் இருந்து விலக்கி வைத்தேன்’.

‘அப்போதே நீ நாத்திகனாக இருந்தாயா?’

‘இல்லை என்றுதான் நினைக்கிறேன். கோயிலுக்குப் போகும்போது நான் கும்பிட்டுக்கொண்டுதான் இருந்தேன்’.

‘நான் அதைக் கேட்கவில்லை. உன் மனத்தில் கடவுள் இருந்தாரா?’

‘ஆம். இருந்தார்’.

‘பிறகு எப்படி இல்லாமல் போனார்?’

‘வேண்டாம் என்று தோன்றியது. தள்ளி வைத்தேன்’.

‘ஏன் அப்படித் தோன்றியது?’

‘தெரியவில்லை வினய். எனக்கு நானே போதும் என்று நினைத்துவிட்டேன்’.

‘அப்படித் தோன்றியது உனக்குத் தன்னம்பிக்கை அளித்ததா?’

நான் சற்று யோசித்தேன். அப்படியொன்றும் தன்னம்பிக்கை பொங்கி வழிந்த நினைவெல்லாம் இல்லை. என்னால் மானசீகத்தில் எதையும் நெருங்க முடியாததே காரணம் என்று தோன்றியது. அம்மாவைக்கூட நெருங்கித் தொட்ட கணத்தில்தான் அம்மாவாக உணர்ந்திருக்கிறேன். இரண்டடி விலகி நிற்கும்போது பாசம் நிகர்த்த எதுவும் எனக்குள் உதித்ததில்லை.

இதைச் சொன்னபோது, ‘அப்படி இருக்க வாய்ப்பில்லை’ என்று வினய் சொன்னான்.

‘ஆனால் நான் அதையெல்லாம் பெரிதாக எண்ணவேயில்லை. குறிப்பிட்ட காலம் வரை அண்ணாவைத் தேடிக்கொண்டிருந்தேன். பிறகு அதுவும் எதற்கு விட்டுவிடு என்று தோன்றியது. விட்டுவிட்டேன்’.

‘அப்படியா?’

‘ஆம். அம்மா சாகக்கிடக்கிறாள் என்று மாமாவிடம் இருந்து தகவல் வந்தபோது மீண்டும் சில நாள் அண்ணாவைத் தேடினேன். வழக்கம்போல் அவன் எனக்கு அகப்படவில்லை. சரி ஒழிகிறான் என்று விட்டுவிட்டு ரயிலேறிவிட்டேன்’.

வினய் என்னை நெருங்கித் தொட்டான். என் கன்னத்தை மெல்ல வருடினான். ‘நீ இப்படியே இரு. அதுதான் உனக்கு நல்லது’ என்று சொன்னான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com