காலையில் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாக்டெய்ல் 1 கிளாஸ் போதுமே!

ஆண்டாண்டு காலமாய் குழந்தைகளின் போஷாக்குக்கு அவரவர் அம்மாக்கள் தான் பொறுப்பு என்று ஒரு மையக்கருத்து நிலவி வருவதால்.
காலையில் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாக்டெய்ல் 1 கிளாஸ் போதுமே!

பாதாம், கேரட், பனானா, டேட்ஸ் ஸ்மூத்தி...

முன்பெல்லாம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பத்து மற்றும் 12 வகுப்புகள் தவிர அனைவருமே 8.45 அல்லது 9 மணிக்குப் பள்ளியில் இருந்தால் போதும். ஆனால் இன்றைக்குப் பாருங்கள் எல்.கே.ஜி குழந்தைகளுக்குக் கூட 7.30 க்கு பள்ளி வேன் அல்லது பேருந்து அழைத்துச் செல்ல வந்து விடுகிறது. காரணம் பெரு நகரங்களின் வாகனப் போக்குவரத்து இடைஞ்சல்கள், பெருகிப் போன மாணவர்கள் எண்ணிக்கை, விரிவடைந்து விட்ட நகரத்தின் விஸ்தீரணம் எனப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. என்னென்ன காரணங்கள் சொல்லப் பட்டாலும், இன்றைய நாட்களில் பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் காலை உணவை போஷாக்காக எடுத்துக் கொள்வதே இல்லை. ஒரு இட்லி, ஒரு தோசை அல்லது ஒரு கிளாஸ் பால் என்று ஏனோ தானோவென வெறுமே கொறித்து விட்டு பள்ளிப் பேருந்தை நோக்கி ஓடி விடுகிறார்கள் என்பது பெற்றோரின் பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறது. அதற்காகப் பள்ளிகள் தங்களது பள்ளி நேரத்தை மாற்றப் போகின்றனவா என்ன? அப்படியே மாற்றினாலும் கூட அதெல்லாம் இன்றைய அவசர யுகத்தில் வேலைக்காகுமா என்றும் புரியவில்லை!

சரி நம்மால் ஆனது... ஆண்டாண்டு காலமாய் குழந்தைகளின் போஷாக்குக்கு அவரவர் அம்மாக்கள் தான் பொறுப்பு என்று ஒரு மையக்கருத்து நிலவி வருவதால். மனதார அம்மாக்களான நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டுமில்லையா? இதோ அம்மாக்களான நமது மன திருப்திக்காகவும், நமது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காகவும் இதோ ஒரு புதிய சத்து பான ரெஸிப்பி. வாரத்தில் மூன்று நாட்களேனும் காலையில் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்து, அருந்த வைத்து அனுப்பலாம். இது சத்தானது மட்டுமல்ல, சுவையானதும் கூட. சளித் தொல்லை இல்லாத குழந்தைகளுக்கு மிதமான ஜில்லிப்புடன் அருந்தக் கொடுத்தால் அவர்கள் எப்போதுமே இதை அருந்த மறுக்கவே மாட்டார்கள்.

தேவையான பொருட்கள்:

  • பாதாம் பருப்பு: 8 (முதல் நாள் இரவே ஊற வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்)
  • கேரட்: 2 முதல் 4 வரை
  • வாழைப்பழம்: 1 (நன்கு கனிந்த மலை வாழைப் பழம்)
  • டேட்ஸ்: 4 முதல் 8
  • பால்: 2 முதல் 4 கப்
  • ஐஸ் கியூப்கள்: 6
  • சர்க்கரை: தேவையான அளவு

செய்முறை:

பாதாம் பருப்பை முதல் நாளே ஊற வைத்து தோல் உறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கேரட்டை ஸ்லைஸ்களாக நறுக்கி கொதிக்க வைத்து ஆறிய பாலுடனும், பாதாம் பருப்புடனும் சேர்த்து ஜூஸரில் இட்டு அரைக்கவும். இவற்றோடு நன்கு கனிந்த மலைவாழைப் பழம் மற்றும் விதை நீக்கிய டேட்ஸ் சேர்த்து மீதமுள்ள பாலையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பெரிய குழந்தைகள் எனில் இதில் சிறிது சர்க்கரை சேர்த்து ஐஸ் கியூப்கள் இட்டு நன்கு கலந்து அப்படியே அருந்தத் தரலாம். எல்.கே.ஜி, யூ.கே.ஜி குழந்தைகள் எனில் பழசாறு வடிகட்டி கொண்டு ஒரு முறை வடிகட்டி சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தத் தரலாம். ஏனெனில் சில குழந்தைகளுக்கு பாதாம் துணுக்குகள் தொண்டையில் சிக்கிக் கொண்டு புரையேறி விடக்கூடாது என்பதால். குழந்தைகளுக்கு பாதாம் அலர்ஜி இல்லையென்றால் ஜூசரில் வடிகட்டியதே போதுமானது. அப்படியே அருந்தத் தரலாம். சர்க்கரைக்குப் பதில் தேன் கலந்து சாப்பிடுவது அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிடத் தருவது எல்லாம் அவரவர் சாய்ஸ். 

சத்து நிறைந்த மாக்டெய்ல்:

கேரட்டில் இருக்கும் விட்டமின் ‘A’, பாதாமில் இருக்கும் அதிகப் படியான புரதம், வாழைப்பழத்தின் நார்சத்து, டேட்ஸில் இருக்கும் இரும்புச் சத்து, பாலில் இருக்கும் கால்சியம் என இந்த பானம் காலையில் சாப்பிட மறுக்கும் குழந்தைகளின் வயிற்றைக் குளிர்விப்பது மட்டுமல்லாமல் தேவையான சத்துக்களையும் உள்ளே தள்ள வசதியாக அம்மாக்களுக்கு கை கொடுக்கும். எனவே இனிமேலும் சாப்பிட மறுக்கும் குழந்தைகளை வைத்து மல்லுக் கட்டிக் கொண்டிராமல் இப்படி எதையாவது சத்தாக செய்து சாப்பிடத் தரலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com