அக்னி சாட்சியாக அல்ல நீர் சாட்சியாக நடந்தேறிய லட்சியத் திருமணம்!

ஹோமம் வளர்த்துத் திருமணத்தை திட்டமிடாததற்கு காரணம் நெருப்பு புனிதமானது என்றாலும் இயல்பில் அது அழிவு சக்திக்கான குறியீடு, நீர் தான் மிகச் சிறந்த ஆக்க சக்திக்கான குறியீடு.  ‘நீரின்றி அமையாது உலகு’ என்பத
அக்னி சாட்சியாக அல்ல நீர் சாட்சியாக நடந்தேறிய லட்சியத் திருமணம்!

நவீன திருமண முறைகளில் ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ (லட்சியத் திருமணம்) என்றொரு கான்செப்ட்டைப் பலரும் பின்பற்றி வருகிறார்கள். இந்த கான்செப்ட், அதைப் பின்பற்றும் மணமக்களின் விருப்பங்கள் மற்றும் ஆர்வங்களைப் பொருத்து மாறுபடுகின்றன. வழக்கமாகத் திருமண விழாக்கள் என்றால் சத்திரம், திருமண மண்டபங்கள், கோயில்கள், கிராமங்களில் எனில் அவரவர் வீட்டின் முன்னுள்ள பரந்த மைதானங்கள், இப்படியான இடங்களில் தான் நடத்தப் படுகின்றன.

இந்த வழக்கமான முறைகளில் இருந்து மாற்றி யோசித்து கடலுக்கடியில் திருமணம், விமானத்தில் பறந்து கொண்டே திருமணம், கடற்கரையில் அலைகள் நுரைப்பூக்களை அள்ளித் தெளிக்கும் தூரத்திலான மணற்பரப்பில் மேடை அமைத்து திருமணம், சற்றே மேலை நாட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்றி லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து பார்த்து விட்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, பெற்ற குழந்தைகள் முன்னிலையில் திருமணம் என மணமக்கள் தங்களது விருப்பங்களுக்கும் புதுமையான ஆசைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து திருமணம் நடத்தப்பட வேண்டிய இடங்களைத் தீர்மானித்து அங்கே தங்களது திருமணங்களை தங்கள் இஷ்டப்படி நடத்திக் கொள்வது தான்  ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ அந்த வகையில் திராவிடக் கழகத்தினரின் தாலி இல்லாத, ஹோமம் இல்லாத, சுயமரியாதைத் திருமணங்களைக் கூட ஒரு வகையில் டெஸ்டினேஷன் வெட்டிங்கில் சேர்த்துக் கொள்ளலாம்... ஏனெனில் அந்த வகைத் திருமணங்களும் அது தோன்றிய காலகட்டங்களில் புதுமையானவை என்பதோடு மணமக்களின் விருப்பத்தின் பேரில் திட்டமிடப்பட்டவை என்பதாலும் கூடத்தான்!

அந்த வகையில் இதுவரை நாம் அறிந்த சில டெஸ்டினேஷன் வெட்டிங் கான்செப்டுகள் பிரமாண்டமானவை என்பதோடு அதில் சிக்கனமான திருமணம் அல்லது சூழலியல் சார்ந்த அக்கறை கொண்ட திருமணங்கள் என்பவை அரிதானவையே. பெரும்பாலான டெஸ்டினேஷன் வெட்டிங் கான்செப்டுகளில் முத்லிடம் வகிப்பது மணமக்களின் உள்ளார்ந்த விருப்பங்களே அன்றி அவற்றில் சமூக நலன் சார்ந்த நோக்கங்கள் எனப் பெரிதாக இருப்பதில்லை. ஆனால் நவம்பர் 1 ஆம் தேதி சேலம் மூகனேரியின் நடுவில் இருக்கும் ஒரு தீவில் தனது திருமணம் நடக்க வேண்டும் என முடிவு செய்த சேலம் அரவிந்தின் டெஸ்டினேஷன் வெட்டிங் கான்செப்ட் முற்றிலும் சுற்றுப்புறச் சூழல் குறித்த அக்கறையை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது அவரது திருமண ஏற்பாட்டு விவகாரங்களைத் தெரிந்து கொண்டால் உங்களுக்கே புரியக் கூடும்.

சூழலியல் செயல்பாட்டாளரான பியூஷ் மனுஷுடன் இணைந்து தமிழகத்திலிருக்கும் ஏரிகள் மற்றும் நதிகளை மீட்டெடுக்கும் நற்பணியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகத் தன்னை இணைத்துக் கொண்ட சேலத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் தனித்த ஈடுபாட்டுடன் பல ஏரிகளை மீட்டெடுத்து அவற்றின் நடுவில் பல தீவுகளை உருவாக்கி நீர்நிலைகளை புனர்ஜென்மம் எடுக்க வைப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டார். சேவை நோக்குடன்கூடிய தனது செயல்பாட்டின் உச்சமாக தனது திருமணத்தையும் கூட தான் உருவாக்கிய தீவுகளில் ஒன்றில் நடத்த வேண்டும் என முடிவு செய்து கொண்டார். தற்போது 29 வயதாகும் அரவிந்துக்கு வீட்டில் பெண் பார்த்து திருமணம் நிச்சயமான போது அவர் மணமகளான பூவிழியிடம் தனது விருப்பம் சார்ண்ட்து ஒரு கோரிக்கை வைத்தார். 

தனது திருமணம் வழக்கமான பிற திருமணங்களைப் போல அல்லாது, தானே உருவாக்கிய ஒரு ஏரியின் நடுவில் நடக்க வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கை. அரவிந்தின் கோரிக்கையை மணப்பெண் பூவிழி ஏற்றுக் கொண்டார். இளங்கலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவியான பூவிழி, தனது வருங்காலக் கணவரான அரவிந்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதோடு திருமணத்துக்கான மேலும் சில கண்டீசஷன்களையும் கூட ஒப்புக் கொண்டார். அது என்ன கண்டீஷன் என்றால்... திருமணத்திற்கான உடை பட்டு கிடையாது. சுத்தமான பருத்தியில் தயாரான காதி ஆடைகள் மட்டுமே! அதோடு திருமணம் நடத்தப்படும் இடம் சின்னஞ்சிறு தீவு என்பதால் அங்கே அதிக உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ இடமில்லை. மணமகன் மற்றும் மணமகளது பெற்றோர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ளலாம். தீவில் திருமணம் எனும் முயற்சியின் காரணத்தால்  மணமக்கள் ஒரு சிறு பரிசலில் ஏறிச் சென்று தான் அங்கே இறங்கியாக வேண்டும். திருமணத்தில் அக்னியை சாட்சியாக வைக்காமல் பஞ்சபூதங்களில் முதலாவதான நீரை சாட்சியாக வைத்து நடத்தப்படும்... என்பது மாதிரியான சில கோரிக்கைகளை பூவிழி ஏற்றுக் கொண்டார்.

ஹோமம் வளர்த்துத் திருமணத்தை திட்டமிடாததற்கு காரணம் நெருப்பு புனிதமானது என்றாலும் இயல்பில் அது அழிவு சக்திக்கான குறியீடு, நீர் தான் மிகச் சிறந்த ஆக்க சக்திக்கான குறியீடு.  ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதால் நீர் ஆதாரங்களை மீட்டெடுக்கும் சமூக நல அமைப்பைச் சார்ந்த ஒரு தன்னார்வச் செயல்பாட்டாளரான அரவிந்துக்கு நீரை சாட்சியாக வைத்து திருமணம் செய்வதே சாலப் பொருத்தமாக இருக்கக் கூடும் என அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். அதன்படி இவர்களது திருமணம் கடந்த 1 ஆம் தேதி சேலம் மூகனேரி தீவில் நடந்து முடிந்திருக்கிறது. 

திருமணம் என்றாலே பணம், உறவினர் கூட்டம், பள, பளக்கும் பட்டாடைகளின் அணிவகுப்பு, கிலோ கணக்கில் அள்ளிப் போட்டுக் கொள்ளும் நகைகள், நாசியைத் திணறடிக்கும் பூ அலங்காரங்கள்... ஆடம்பர பிளக்ஸ் பேனர்கள், பந்தியில் பரிமாறப்பட்டு தொட்டுக் கூட பாராமலே வீணடிக்கப்படும் பல தினுசான பதார்த்தங்களுடன் கொட்டப்படும் எச்சில் இலைகள், இப்படிப் பார்த்தே பழக்கப்பட்டுப் போன நமக்கு இம்மாதிரியான சமூக அக்கறையுடன் கூடிய டெஸ்டினேஷன் வெட்டிங்குகள் நிச்சயம் வித்யாசமானவையே!

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

Image courtesy: ntd.tv.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com