இந்த மழைக்காலத்தை பாதுகாப்புடன் எப்படியெல்லாம் கடக்கலாம்? இந்தாங்க பிடிங்க டிப்ஸ்!

மழை என்றால் நச நசப்பும், காய்ச்சலும், சளித்தொல்லையும், மழைக்காலத்துக்கே உண்டான சில தொற்றுநோய்களும் இலவச இணைப்புகள். அதன் காரணமாகத்தான் மக்கள் சில நேரங்களில் மழையை நொந்து கொள்கிறார்களே தவிர நிச்சயம்
இந்த மழைக்காலத்தை பாதுகாப்புடன் எப்படியெல்லாம் கடக்கலாம்? இந்தாங்க பிடிங்க டிப்ஸ்!

மழையால் ஆயிரம் இன்னல்களை அனுபவித்தாலும் மழை எப்போதும் வரவேற்கத்தக்கதாகவே இருக்கிறது. ஏனெனில் மழை தேவர்கள் மகிழ்ந்து பொழிவிக்கும் தேவாமிர்தம்! மழையால் மண் நெகிழும். மண் நெகிழ்கையில் வேளாண்மை என்ற பெயரில் பூமி வறட்சியின் போது தான் உள்வாங்கிய அத்தனையையும் உயிர் சக்திகளாக்கி தானியங்களாகவும், காய்கறிகளாகவும், கீரைகளாகவும், பழங்களாகவும், கிழங்குகளாகவும் இன்னபிற அத்யாவசியப் பொருட்களாகவும் வாரி வழங்கும்.

‘நீரின்றி அமையாது உலகு’ எனும்  வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப உலகின் ஒட்டுமொத்த நீர்த்தேவையும் மழையால் அன்றோ நிவர்த்தி செய்யப்படுகிறது. பூமிப்பந்தின் இண்டு இடுக்குகள் விடாது அத்தனை ஏரிகளையும், குளங்களையும், குட்டைகளையும், ஆறுகளையும், சுனைகளையும், சிறு கடல், குறுங்கடல், மற்றும் பெருங்கடல், மாக்கடல்கள் அத்தனையும் நிரப்பி ஆகர்சிக்கும் சக்தி மழைக்கு மட்டுமே உரித்தானது. ஆகையால் அத்தகைய மழையை நாம் வேண்டாமென ஒரு போதும் சொல்லக் கூடாது. அதனால் தான் ‘ரெயின் ரெயின் கோ அவே’ என்று பாடப்பட்டு வந்த நர்சரிப் பள்ளிப் பாடலைக் கூட சமீப காலங்களாக பல இடங்களில் ரெயின் ரெயின் கம் அகெயின் என்று மாற்றிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். 

மழை என்றால் நச நசப்பும், காய்ச்சலும், சளித்தொல்லையும், மழைக்காலத்துக்கே உண்டான சில தொற்றுநோய்களும் இலவச இணைப்புகள். அதன் காரணமாகத்தான் மக்கள் சில நேரங்களில் மழையை நொந்து கொள்கிறார்களே தவிர நிச்சயம் அது மழையின் மீதான வெறுப்பு இல்லை. சரி இந்த மழைக்காலம் இதோ நேற்று முதல் வெகு சின்சியராகத் தன் வேலையைத் தொடங்கி விட்டது. இப்போது மக்களான நாம் இந்த மழையையும் ரசித்துக் கொண்டு அதன் இலவச இணைப்புகளில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்று தெரிந்து கொள்வோம். ஏனெனில் மழையை ரசிப்பதைக் காட்டிலும் முக்கியமானது அதை தூஷிக்காமல் இருப்பது.

  • வானிலை எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் மழை ஓரிரு நாட்கள் பயமுறுத்தி விட்டு ஓடி மறைந்து விடும் என அலட்சியமாக மழையால் நேரக்கூடிய சிரமங்களில் கவனம் செலுத்த மறந்து மழைக்காலத்தின் அத்யாவசியங்களான ரெயின் கோட்டுகள், குடைகள், ஸ்கார்ப்புகள், கைக்குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்களின் உடல் வெப்பநிலையை மாறாமல் காக்க கைக்கு கிளவுஸ்கள், ஸ்வெட்டர்கள், ஜெர்கின்கள் போன்றவற்றை வாங்கி ஸ்டாக் செய்து கொள்ள மறக்கக் கூடாது. ஏனெனில் மழைக்காலத்தின் மூர்க்கமான தன்மை ஒவ்வொரு வருடமும் மாறலாம் ஆனால் மழை வராமலே பருவம் தப்பிப் போக எப்போதும் வாய்ப்புகள் இல்லை. வருடத்தில் ஒரு மழைக்காலம் என்பது எழுதப்படாத விதி. அதனால் நாம் சோம்பேறித்தனமாக மழைக்காலத்தை வரவேற்பதற்கான முன்னெச்சரிக்கை முஸ்தீபுகளில் கவனம் செலுத்த மறந்து விட்டு பிறகு மழையப் பழிக்கக் கூடாது.
  • மழைக்காலங்களில் அதற்கெனவே பிரத்யேகமாக நம் முன்னோர்கள் வகுத்துப் பிரித்து வைத்திருக்கும் சில உணவு வகைகளை மட்டுமே சமைத்து உண்ண வேண்டும். ஏனெனில் மழைக்காலங்களில் உடலுக்கு அதிக குளிர்ச்சி தரக்கூடிய உணவு வகைகளைத் தவிர்த்து விடுவது நல்லது. பால், தயிர், மோர் என்று அருந்துவதைக் காட்டிலும் ரசம், சூப், சூடான கஞ்சி, இட்லி, ஆப்பம், இடியாப்பம், என்று ஆவியில் வேக வைப்பதும், சூடாக்கிச் சாப்பிடத் தக்கதுமான ஊனவு வகைகளைச் சாப்பிடலாம். எண்ணெயில் வறுத்தது, பொரித்தது வகையிலான உணவுப் பொருட்கள் மழைக்காலத்துக்கு ஏற்றவை அல்ல. அவை ஜீரணம் ஆக நேரமாகும். மழைக்காலத்தில் வியர்வைச் சுரப்பிகள் மந்தமடைவதால் வியர்வை மூலமாக வெளியேறக்கூடிய உடலில் நச்சுக்கள் வெளியேற முடியாமலாகி அவை பின்னர் நமது உடற்சருமத்தின் வறட்சிக்கும், ஒவ்வாமைக்கும் காரணமாகி விடக்கூடும்.
  • வீடுகளில் மழையினால் ஈரமாகக் கூடிய பகுதிகள் இருப்பின் மழை நின்றதும் கூடுமான வரை அவற்றை உலர்வானதாக்க முயற்சிக்க வேண்டும். வீட்டுக்குள்ளும் ஈரப்பதம் இருப்பின் அதைத் துடைத்துச் சுத்தமாக வைத்துக் கொள்ள மறக்கக் கூடாது. ஏனெனில் மழை ஈரப்பதத்தை கவனிக்காமல் விட்டால் அது பூஞ்சைத் தாக்குதலுக்கு வழிகோலும். அதனால் வீட்டுச் சுவர்கள் அசிங்கமான தோற்றம் பெறுவது மட்டுமல்லாமல் பூஞ்சையினால் உண்டாகக் கூடிய தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கும்.
  • மழைக்காலத்தில் எப்போது அடை மழை பிடித்துக் கொள்ளும், எப்போது வெறும் தூறலோடு நின்று விடக்கூடும் என்பதைக் கணிப்பது வானிலை ஆய்வாளர்களுக்கே சிரமமான காரியம் என்பதால் மழைக்காலங்களுக்கே உரித்தான பிரத்யேக அத்யாவசியப் பொருட்களான காய்ச்சலுக்கான பாராசிட்டமால் மாத்திரைகள், உடலை வெம்மையாக்க விக்ஸ் டப்பிகள், தலை வலித் தைலங்கள், யூகலிப்டஸ் தைலங்கள், இருமல் மருந்துகள், ஜீரண மருந்துகள் உள்ளிட்டவற்றை மருத்துவர் ஆலோசனையுடன் ஸ்டாக் வைத்துக் கொள்ள மறக்கக் கூடாது.
  • அதோடு இப்போதெல்லாம் பேட்டரிகளைப் பயன்படுத்தி பவர் கட் சிரமங்களை பெரும்பாலானோர் சமாளித்து வந்தாலும் வார்தா புயல் மாதிரியான கடுமையான புயலினால் உண்டாகக் கூடிய இயற்கைச் சீற்றங்களை சமாளிக்க மழைக்காலங்களில் எல்லா வீடுகளிலும் எப்போதும் மெழுகுவர்த்திகள், எமர்ஜென்ஸி லைட்டுகள், டார்ச் லைட்டுகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • சமையலறை ஸ்டோர் ரூமில் ஸ்டாக் வைத்திருக்கும் அரிசி, பருப்பு வகைகள், புளி, காய்ந்த மிளகாய், வத்தல், வடாம், தின்பண்டங்கள் போன்றவற்றை கடுமையான மழை நாட்களிலும் கூட அவ்வப்போது முகம் காட்டும் சூரியனின் முன் வைத்தெடுக்க மறக்கக் கூடாது. இல்லாவிட்டால் இந்தப் பண்டங்களில் எல்லாம் மழைக்காலத்தில் எளிதில் வண்டுகள் விழக்கூடும். எனவே வெயில் கிடைக்கையில் அதை உபயோகிக்காது புறக்கணித்து விடக்கூடாது.
  • இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் இருக்கும் வீடுகளில் வாகனங்களை மழையில் நிறுத்தி வைக்காமல் அவற்றுக்கான உறைகளையிட்டுப் பாதுகாக்க மறக்கக் கூடாது. மழைத்தண்ணீரால் வாகனங்களின் இஞ்சின் பழுதுற்று அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருக்கையில் நடுவழியில் நமது வாகனங்களை நம்மைப் பழி வாங்காதிருக்க இந்த உபாயம் உதவலாம்.
  • மற்றொரு முக்கியமான விஷயம், மழைக்கு ஒதுங்குகிறேன் என்று பெருமழை பெய்து கொண்டிருக்கையில் பச்சை மரத்தடியில் எப்போதும் புகலிடம் தேடி நின்று விடாதீர்கள். அதற்குப் பதிலாக நீங்கள் நனைந்தாலும் கூடத் தவறில்லை. ஏனெனில் பசும் மரங்களில் தான் இடி தாக்கும் அபாயம் அதிகம் உண்டு. எனவே மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி விடக்கூடாது. இப்போது தான் முக்குக்கு முக்கு மேம்பாலங்களைக் கட்டி வைத்திருக்கிறார்களே! அங்கே மொத்தச் சென்னையும் கூட குடித்தனம் செய்யலாம். எனவே பாலத்தடி, கடை முகப்புகள் என்று எங்காவது நனையாமல் ஒதுங்குங்கள். மரங்களைத் தவிருங்கள்.
  • அது மட்டுமல்ல, வீடுகளின் கட்டுமானத்தில் ஏதேனும் சிறு தவறுகள் இருந்து மழைத்தண்ணீர் வீட்டுச் சுவர்களின் உட்புறத்தில் கசிவதாக இருந்தால் அவற்றை ஈரக்கையுடன் ஸ்விட்சுகளை அழுத்தி வேண்டாத விருந்தாளியை வீட்டுக்கு வருந்தி அழைத்தது போல மின்சார விபத்துகளில் நம்மை நாமே தள்ளி விட்டு விடக் கூடாது. எனவே மழைக்காலத்தில் ஈரக்கைகளுடன் ஸ்விட்சுகளை இயக்குவதைத் தவிர்த்து விட வேண்டும்.
  • மழைக்காலத்தில் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே மழைக்காலங்களில் எங்கேனும் பயணிக்க வேண்டிய நிர்பந்தங்கள் இருப்பவர்கள் பயண நேரத்தைக் காட்டிலும் 1 மணி நேரம் முன் கூட்டியே செல்ல வேண்டிய பேருந்து நிலையங்களுக்கோ, ரயில் நிலையங்களுக்கோ, விமான நிலையங்களுக்கோ சென்று சேர்ந்து விடுவது நல்லது. 
  • கைக்குழந்தைகள் அல்லது சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகள் எனில் அவர்கள் எப்போதும் தவழ்ந்து கொண்டும், ஓடி ஆடி திரிந்து கொண்டும் இருப்பது வாடிக்கை. அப்படியான வீடுகளில் தரை ஈரமற்று உலர்வாகப் பராமரிக்கப் பட வேண்டும். இல்லா விட்டால் குழந்தைகள் வழுக்கி விழுந்து விபத்துகள் உண்டாகும் நிலை வரலாம். இது முதியவர்களுக்கும் பொருந்தும்.
  • மழைக்காலத்தில் நாம் அணியும் உடைகளிலும் மாற்றம் வேண்டும். மழைக்காலங்களில் லேசான ஆடைகளை அல்லது பெரும்பாலும் உடல் வெளித்தெரியக்கூடிய வகையிலான ஆடைகளைத் தவிர்த்து விட்டு சற்றுக் கனமான, உடல் முழுவதையும் மறைக்கக் கூடிய வகையிலான ஆடைகளை அணிவதே உகந்தது. 

மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தையும் தவறாமல் பின்பற்றி இந்த மழைக்காலத்தை இனிதாகக் கடப்போம்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com