எங்கள் குலதெய்வம் ‘உலகாயி’ வாசகர் குலதெய்வக் கதை - 3

எனது முந்தைய தலை முறைகளில் இருந்த முன்னோர்கள் மிகுந்த நம்பிக்கை, ஆசார, அனுஷ்டானத்துடன் உலகாயியை வழிபட்டதால், இந்த 'உலகாயி' பல்வேறு சித்து விளையாட்டுக்களை நிகழ்த்திக் காட்டியவள்.
எங்கள் குலதெய்வம் ‘உலகாயி’ வாசகர் குலதெய்வக் கதை - 3

எங்கள் ஊர் வாளாடியில் குடி கொண்டிருக்கும் 'உலகாயி' எனப் பாமர பக்தர்களால்  அன்புடன் அழைக்கப் படும் ஸ்ரீ லோகநாயகி அம்மனே ஊர் எல்லையோரக் காவல் தெய்வம்; ஊரில் பலருக்கு மானசீகமான குல தெய்வமும் கூட. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டதாகச் சொல்வார்கள். வெள்ளம் வடிந்தும் வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி ஓடியபடியே இருந்தது. அப்படி ஓடிய பாசன வாய்க்காலிலிருந்து கண்டெடுக்கப்பட்டது தான் சப்த கன்னிகைகள் ஒரே சேர அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ள சிலா ரூபமான கல் விக்கிரஹம். ஊர்ப் பெரியவர் ஒருவர் கனவில் தோன்றி தான் இங்கே இருப்பதாகவும் தன்னை இங்கே பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தால், தான் காவல் தெய்வமாய்ஊரைக் காப்பாற்றுவதாகவும் சொல்லவே, உடனே 'மள மள'வென‌ கோவில் எழுந்தது எனச் சொல்வார்கள். 

எனது முந்தைய தலை முறைகளில் இருந்த முன்னோர்கள் மிகுந்த நம்பிக்கை, ஆசார, அனுஷ்டானத்துடன் உலகாயியை வழிபட்டதால், இந்த 'உலகாயி' பல்வேறு சித்து விளையாட்டுக்களை நிகழ்த்திக் காட்டியவள். பலரது கனவில் தோன்றி தன்னை வந்து காணுமாறு அழைத்தவள். தன்னை நம்பி வந்தவரை உலகில் எங்கு இருந்தாலும் தான் காப்பேன் என பக்தர்களுக்கு அவள் அருள்வாக்கு அருளியதாகச் சொல்வார்கள். இதன் பொருட்டே இந்த அம்மன் 'உலகாயி' என்றும் 'லோகநாயகி' எனவும் போற்றப் படுகிறாள். இது ஒரு சப்தகன்னிகைக் கோவில். 

தமிழ்நாட்டில் சப்த கன்னியர் வழிபாடு பல்வேறு கிராமங்களில் இருந்து வந்துள்ளன என்பதற்கு ஆதாரம் உண்டு. ப்ராஹ்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களுள் நடு நாயகமாக, லோகமாதாவாக வீற்றிருக்கும் வைஷ்ணவியே 'உலகாயி' என அழைக்கப் படுகிறாள். சப்த கன்னியரும் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர். மூல ஸ்தானத்தில் சப்த கன்னியருடன் விநாயகர் ஒரு புறமும், ஐயனார் ஒரு புறமும் ஒரே வரிசையில் அமர்ந்திருப்பது தனிச் சிறப்பு. தவிரவும், பரிவார தேவதைகளாக கருப்பண்ண சுவாமி, சேவுகப் பெருமாள் சுவாமி, காத்தவராய சுவாமி, மதுரைவீர ஸ்வாமி ஆகிய நால்வரும் கோவிலுள்ளே வீற்றிருக்கிறார்கள். இவர்கள் நால்வரும் லோகமாதா எனும் ராணியின் தளபதிகள். அறவழி மீறி நடப்போரை தண்டிப்பவர்கள். 

தவிரவும் ஐயனாருக்கென தனி சன்னதி உண்டு. ஆதிகாலத்தில் கோவிலிலேயே இருந்து வாழ்ந்து மறைந்த ஸ்ரீ ராசப்பா ஸ்வாமிகளின் சுதையினாலான சிலா ரூபமும், கருங்கல்  பலி பீடங்களும் உள்ளன. 'உன்னை மறக்க எவர்தான் துணிவார்? உலக‌ நாயகி அம்மையே" என்ற பாடல் அம்மனின் விருத்தாந்தங்களைப் போற்றிப் புகழ்கிறது. வருடம் ஒருமுறை கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து பொருள் திரட்டி அம்மனுக்கு  'லட்சார்ச்சனை' செய்கிறார்கள். வேண்டுதலுக்காக இங்கு குழந்தைகளுக்கு முடியிறக்குதலும், காது குத்துதலும், பொங்கல் வைப்பதும், மாவிளக்கு ஏற்றுதலும், திருமணங்களும்  நடைபெறுகின்றன. ஓவ்வொரு வருடமும் பங்குனி மாதம் முதல் புதன் கிழமையன்று  முதல் காப்பு காட்டு; அடுத்து வரும் புதனில் இரண்டாவது காப்பு கட்டுடன் திருவிழா தொடங்குகிறது. அதன் பின்னர் திங்கட் கிழமை தொடங்கி ஓவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து, மேற்கு, கிழக்கு எல்லைகளில் கொடுக்கப்படும் பலிகளை ஏற்றுக் கொண்டு  திருப்தியடைந்தவளாய் தனது கோவிலினுள் குடி புகுகிறாள். அதி அற்புதமான திருவிழாவாக, மக்கள் அனைவரும் சாதி பேதமின்றி ஒருங்கிணைந்து கொண்டாடும் ஒரே திருவிழாவாக இது கொண்டாடப் படுகிறது. 

சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மக்களை, குழந்தைகளை ஒரு சேர அரவணைத்து தனது திருவிழாவை பக்தர்கள் மூலமாக நடத்திக் கொள்பவள் உலகாயி. கிராமத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு மனிதர்களுக்கு கனவுகள் மூலமாகவும், சூசகமாகவும் அறிவித்து வித்தைகள் பல புரிந்தவள். இவளை வழிபட்டோர் புகழின் உச்சிக்குச் சென்றுள்ளனர், எதிர்த்தவர்கள் வாழ்ந்த இடம் சுவடின்றிப் போயுள்ளனர். தன் மக்களிடம், பயத்தையும், கருணையையும் ஒன்றாகக் கலந்து அவர்களின் இடர்களைக் களைபவள் உலகாயி. அகிலாண்டேஸ்வரி என்பது திருவானைக்காவில் உள்ள அம்பாளின் பெயர். காளமேகப் புலவர் வழிபட்டது. பெயரளவிலும் சரி, கருணை பொழிவதிலும் சரி, உலகாயியும் அகிலாண்டேஸ்வரியும் வேறு வேறு அல்ல என்றுதான் நினைக்கத் தோன்றும். 

இதே வாளாடிக்குத் தென் கிழக்கே சப்தரிஷிகள் வழிபட்ட திருத்தவத்துறை எனும் (லால்குடி) ஷேத்திரம் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு. அடுத்து உள்ள மாந்துறை எனும் ஊருக்கு இராமயண காலத் தொடர்பு உள்ளதாகச் சொல்வார்கள். இது செவிவழிச் செய்தியேயாயினும், இங்கு மான்கள் துள்ளி  விளையாடியதையும்,  மாஞ்சோலைகள் இருந்ததையும் சரித்திர‌ ஆசிரியர்கள் நினைவு கூறுகிறார்கள். குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைமுறை, தலை முறையாக உலகாயி அம்மன் திருவிழாவுக்கென‌ காப்புக் கட்டிக் கொள்கிறார்கள். இது தங்களுக்கு அளிக்கப் பட்ட மிகப் பெரிய கவுரவமாகவும் கருதுகிறார்கள். அதே போல பூக்கள் கட்டி விற்கும் 'பண்டாரத்தார்' குடும்பத்தினரே இக் கோவிலில் பரம்பரை பரம்பரையாக பூசாரியாக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய பெருமை வாய்ந்த இக் கோவிலுக்கு நீங்களும் ஒரு முறை வந்து வழிபட்டு அம்பாள் லோகமாதாவின் அருளாசியையும் பெற வேண்டுகிறோம்.

குலதெய்வக் கதையை அனுப்பிய வாசகர்...

A.மாதவன், லால்குடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com