பார்வையற்றோரால் ஃபோட்டோ எடுக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் இவர்கள்!

'பிளைன்ட் வித் கேமரா' என்பது புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டுள்ள பார்வையற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வசதிக்காக நடத்தப்படும் பயிற்சிப் பட்டறை... சிம்பிளாகப் புரிய வேண்டுமென்றால் வொர்க் ஷாப்
பார்வையற்றோரால் ஃபோட்டோ எடுக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் இவர்கள்!

பார்வையற்றவர்கள் யாராவது ஒருத்தர் உங்க கிட்ட வந்து, எனக்கு ஃபோட்டோகிராபில ஆர்வம் இருக்கு. நானும் புகைப்படங்கள் எடுப்பேன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா? இதுவரை நம்பலேன்னாலும் இனி நம்பித்தான் ஆகனும். அவங்களாலும் அருமையாக புகைப்படங்கள் எடுக்க முடியும்னு நிரூபணம் ஆகியிருக்கு. அவங்களுக்காகவே பிளைன்ட் வித் கேமரான்னு ஒரு கான்செப்ட் 2006 ஆம் வருஷத்துல இருந்து இயங்கிக்கிட்டு இருக்கு. இந்தியாவுக்கு இந்த விஷயத்தை கொண்டு வந்து சேர்த்த பெருமை பார்த்தோ போமிக் என்ற பார்வையற்ற புகைப்படக்காரரைச் சேரும். அவர் புகைப்படங்கள் எடுக்கறதோட மட்டுமல்லாமல் அதைக் கற்றுத்தருவதற்கான வொர்க் ஷாப்புகளும் நடத்தி வருகிறார். பார்த்தோ யரைப்பார்த்து இன்ஸ்பையர் ஆகி இந்த விஷயத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தார்ன்னு பார்த்தா அவரோட பெயர் ஈவ்ஜென் பாவ்கர். அவரும் ஹங்கேரியைச் சேர்ந்த ஒர் பார்வையற்ற புகைப்படக்காரரே!

'பிளைன்ட் வித் கேமரா' என்பது புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டுள்ள பார்வையற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வசதிக்காக நடத்தப்படும் பயிற்சிப் பட்டறை... சிம்பிளாகப் புரிய வேண்டுமென்றால் வொர்க் ஷாப். கடந்த பல ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான பார்வையற்ற மாணவர்களும், இளைஞர்களும் இந்த வொர்க் ஷாப்களில் கலந்து கொண்டு பார்த்தோவிடம் பயிற்சி பெற்று தங்களது புகைப்படக் கலைக் கனவை நனவாக்கிக் கொண்டு வருகிறார்கள்.

பார்த்தோவின் இந்த வொர்க் ஷாப் மூலமாகத் தூண்டப்பட்டு மேலும் தங்களது புகைப்படக் கலை ஆர்வத்தை பட்டை தீட்டிக் கொண்டவர்களில் முக்கியமானவராக பிரணவ் லாலைக் கூறலாம். பிரணவ் டெல்லியைச் சேர்ந்த ஒரு சைபர் செக்கியூரிட்டி அலுவலர். அதோடு அவருக்குப் பிறவியிலிருந்தே பார்வைக் குறைபாடு இருந்தது. ஆனாலும் தன்னால் மிக அருமையான புகைப்படங்கள் எடுக்க இயலும், தனது கற்பனையின் துணை கொண்டு தனது ஆர்வத்தை வெற்றிகரமானதாக்கிக் காட்ட தன்னால் முடியும் என பிரணவ் நம்பினார். அந்த நம்பிக்கையின் அடுத்த கட்டம் தான் பார்த்தோவின் ‘பிளைன்ட் ஃபோட்டோகிராபி’ வொர்க் ஷாப்பில் கலந்து கொள்ளத் தொடங்கியது.

வொர்க் ஷாப்பில் கலந்து கொள்ள புகைப்படக் கலை மீது கொண்ட ஆர்வம் மட்டுமே காரணமில்லை. அதைத் தாண்டி தனது புலன்களுக்குத் தட்டுப்படாத, தனது அறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களை பதிவு செய்து, அதை உணர வேண்டும் என்ற ஆர்வம் பிரணவுக்கு இருந்தது.

அப்போது தான் அவருக்கு voice எனும் தொழில்நுட்பத்தின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை என்னவென்றால் ஒளி அலைகளை ஒலி அலைகளாக மாற்றித் தரக்கூடிய வல்லமை. முகமூடிக் போன்ற இந்த உபகரணத்தில் இரண்டு கருப்புக் கண்ணாடிகள் பொருத்தப் பட்டிருக்கும். அந்தக் கண்ணாடிகளுடன் ஒரு மினியேச்சர் கேமரா மிக மெல்லிய வயர்களால் இணைக்கப்பட்டிருக்கும். இதை கண்களில் அணிந்து கொண்டு பார்க்கையில் பார்வையற்றவர்களால் தங்களது பார்வைப் புலனுக்கு புலப்படாத உருவங்களைப் பற்றி அவர்கள் அது வரை அறிந்திராத புது புதுப் பரிணாமங்கள் கிடைக்கக் கூடும் என்கிறார் பிரணவ். அதுமட்டுமல்ல, இந்த உபகரணம் மூலமாக புகைப்படப்படமெடுக்கவிருக்கும் நபர்களின் அசைவுகளைக் கணித்து அதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பொருளின் அல்லது நபரின் உயரம், தேவையான ஒளி அமைப்புகள் முதலியவற்றைக் கணிக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்ப உபகரணங்களையும் காணும் போதெல்லாம், தொழில் நுட்ப வளர்ச்சி அதன் உச்ச பட்ச இலக்கை எட்டி விட்டதா? என்றால் ஆம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பார்வையற்றவர்களால் புகைப்படமெல்லாம் எடுக்க முடியாது என இனி யாரும் துணிந்து சொல்ல முடியாது பாருங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com