சமண சமய பெண் தெய்வங்கள் (தொடர்ச்சி) - 2

தமிழகத்தில் காணப்படும் இயக்கியம்மன்கள் காலத்தால் மிகவும் பழமையானவை என்பதை வலியுறுத்தும் வகையில், இங்குள்ள சிற்பங்களில் நமது பண்டைய மரபும், தொன்மைச் சிறப்பும் குன்றாமல் இருப்பதை காணமுடிகிறது.

தமிழகத்தில் சிறப்புடன் வணங்கப்பட்ட இயக்கியம்மன்கள்

தமிழகத்தில் போற்றி வழிபட்ட இயக்கியர்கள் ஒரு சிலரே. அவர்களில் சக்கரதாரிணி, அம்பிகா, பத்மாவதி, சித்தாக்கியா, ஜீவாலாமாலினி போன்ற இயக்கியர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களது சிற்பங்களே பல இடங்களில் தமிழகத்தில் உள்ள சமணத் தலங்களில் காணமுடிகிறது.*1. அத்தகைய இயக்கியம்மன்களைப் பற்றி காண்போம்.

பத்மாவதி

இயக்கியம்மன் - பத்மாவதி

23-வது தீர்த்தங்கரர் – பார்சுவநாதார்; இயக்கன் - தர்னேந்திரன், இயக்கியம்மன் - பத்மாவதி

சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவர், முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளார். முக்குடைக்குக் கீழ் ஏழு தலைகளைக் கொண்ட நாகம் இவருக்கு அரணாகக் காட்டப்படுகிறது. எனவே, இவரை பார்சுவநாதர் என்று கூறுவர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வமாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன் தர்னேந்திரனும் ஆவர். சிற்பங்களில் பத்மாவதி இயக்கியம்மன் சற்று ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் தனது வலது காலை சற்று தூக்கி அமர்ந்துள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. தனது வலது கையை அபய முத்திரையுடன், தூக்கிய தனது இடது காலின் மேல் வைத்த நிலையில் காணப்படுகிறது.

இச்சிற்பம், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ள வள்ளிமலையில் காணப்பட்ட சமண பெண் தெய்வமாகிய பத்மாவதி இயக்கியம்மன் ஆகும். வள்ளிமலை ஒரு சமணத் தலமாக விளங்கிய ஒன்று. இங்கு குடவரைச் சிற்பங்களும் உள்ளன. இதன் காலம் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு என்பர். கழுகு மலையிலும் பத்மாவதி சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பத்மாவதி வழிபாடு பொ.ஆ.18-ம் நூற்றாண்டு வரை காணப்படுகின்றது.

தாமரை மலரில் வீற்றிருக்கும் பத்மாவதி நான்கு கரங்களுடனும் காட்டப்படுகின்றாள். தனது கைகளில் பாசமும், அங்குசமும், அக்கமாலையும், மற்ற கரங்களில் தாமரை மலரும் ஏந்திய நிலையில் உள்ளது. பெரும்பாலும் பத்மாவதி இயக்கி, பார்சுவநாதரின் இடப்பக்கம் நின்ற நிலையில் வச்சிரக் குடையைப் பிடித்துக் காப்பதுபோல வடிக்கப்பட்டுள்ளாள். இவளது தலை மீது ஏழு தலை நாகம் குடை போன்று படமெடுத்து நிற்பது போன்று காட்டப்பட்டிருக்கிறது. நாக வழிபாட்டோடு தொடர்புடைய இவள், பார்சுவநாதரின் இயக்கன் தர்னேந்திரனின் மனைவியாகத் திகழ்ந்தவள்.

பார்சுவநாதர் அடர்ந்த காட்டில் நின்றுகொண்டு தவம் மேற்கொண்டார். அவரது தவத்தைக் கலைக்க, அவரது எதிரியாகிய சம்பரதேவன் கல்லையும் ஆயுதங்களையும் அவர் மீது வீசினான். பார்சுவநாதருக்கு ஏற்பட்ட இந்த இன்னலை, அவரது இயக்கனான தர்னேந்திரன் அரவக் குடைக்கும், பார்சுவநாதருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம், தனது ஆயிரம் முடியுள்ள அரவின் தலையால் பாதுகாத்தான். அதுசமயம், அவரது மனைவியாகிய பத்மாவதி, தர்னேந்திரனின் அரவக் குடைக்கும், பார்சுவநாதருக்கும் தீங்கு நேரா வண்ணம், அரவக் குடைக்கு மேலே வச்சிரக் குடையைக் கவிழ்த்துப் பிடித்துப் பாதுகாத்தாள் என்று ஸ்ரீபுராணம் தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

அம்பிகா இயக்கியம்மன்

அம்பிகா இயக்கியம்மன் சமண சமயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றவள். இவள் பெரும்பாலான சமணத் தலங்களில் வழிபட்டு வந்துள்ளாள். இவளை கூஸ்மண்டினி, அமரா என்ற வேறு பெயர்களிலும் குறிப்பிடுவர். இரண்டு மற்றும் நான்கு கரங்களுடன் படைக்கப்படுவாள். கைகளில் மாங்கனிகள், பாசம், குழந்தை ஆகியவற்றுடன் காணப்படுவாள். இவரது வாகனம் சிம்மம் அகும். ஸ்ரீபுராணத்தில் இவர்களது வரலாறு மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தென்னிந்தியா முழுவதும் மிகவும் சிறப்பான வழிபாட்டில் காணப்பட்ட இயக்கி அம்பிகாவின் சிற்பம், பதாமில் (Badami) உள்ள சமணக் குடவரைக் கோயிலில் சிறப்பான நிலையில் படைக்கப்பட்டுள்ளது. இராட்டிரகூடர் காலத்தில் எல்லோரா குடவரைக் கோயில்களிலும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.

எல்லோரா குகைச் சிற்பம் - அம்பிகாதேவி

அம்பிகா இயக்கியின் காரணப் பெயர்கள்

இயக்கியம்மன்களிலேயே பல காரணப் பெயர்களையும், அதற்குத் தகுந்த காரணங்களையும் பெற்றவள் இந்த அம்பிகா இயக்கியே ஆவாள். இவளது பெயர்க்காரணமே ஒரு பெரிய வரலாறுபோல அமைந்துள்ளது. அம்பிகா இயக்கியின் பெயர்கள் பிங்கலம், சூடாமணி நிகண்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவளுக்கு சமண சமயத்தில் குறிப்பிடும் பொதுவான இயக்கியம்மன் என்ற பெயருடன் மேலும் பல காரணப் பெயர்கள் உள்ளன. அம்பிகா, அருகனை முடிகவித்த பகவதி, மரகதவல்லி, பூகமர்நிழல்வஞ்சி, கழியாவரத்தின் மூர்த்தி தெரியல், அம்பாலிகா, பரமசுந்தரி போன்ற பெயர்களை அறியமுடிகிறது.*2.

அம்பிகா – செப்புத் திருமேனி

அருகனை முடிகவித்த பகவதி

தமிழகத்தில் காணப்பட்ட இவளது திருவுருவங்களில், தனது தலைமுடியின் முன்புறம் அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரரை சுமந்து நிற்கும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. விளாத்திகுளம், செங்கனிக்குப்பம் போன்ற பல இடங்களில் காணப்பட்ட இயக்கி அம்பிகாவின் உருவங்களில், தலையிலுள்ள கரண்ட மகுடத்தின் முன்பகுதியில் சிறிய வடிவில் அர்த்தபரியங்காசனத்தில் நேமிநாதர் வீற்றிருப்பதைக் காணலாம். இவ்வாறு, தன் தலையிலேயே சுமந்து நிற்கும் நிலையைக் காட்சிப்படுத்தப்படுவதாலேயே அருகனை முடிகவித்த பகவதியம்மை என்ற பெயர் பெற்றிருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. இவருக்குரிய அம்பிகா என்ற பெயரை அம்பிகை, அம்பாலிகை என்று நிகண்டுகளில் குறிக்கப்படுகின்றன.

கழியாவரத்தின் மூர்த்தி தெரியல்

நேமிநாதருக்கு அணி போன்று மாலையாகத் திகழ்பவர் என்ற பொருளில் குறிப்பிடப்படுவதே கழியாவரத்தின் மூர்த்தி தெரியல் என்ற பெயர் உணர்த்துகிறது.

பரமசுந்தரி

பிறப்பால் உயர்ந்த தன்மையுடைய பெண்ணாக விளங்கும் பேற்றினை அம்பிகா பெற்றுள்ளதால், உயர்ந்த பேற்றினைப் பெற்றுள்ள அழகிய பெண் என்ற பொருளில் இவள் பரமசுந்தரி என அழைக்கப்பட்டாள்.

பூகமர்நிழல்வஞ்சி

இப்பெயர், இவளது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் அடிப்படையில் பெற்ற பெயர் ஆகும். இயக்கி அம்பிகா மானிட வாழ்க்கை நடத்தும்பொழுது, தனது கணவனால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டாள். அச்சமயம் அவள் முன் தெய்வக் கருணையால் கற்பகவிருட்சம் ஒன்று தோன்றி, அவளுக்கு வேண்டியவற்றையெல்லாம் அளித்து உதவியது. அக்கற்பக மரத்தின் நிழலில் கவலையின்றித் தங்கியிருந்ததால், இவள் பூகமர்நிழல்வஞ்சி என்ற பெயரைப் பெற்றிருத்தல் வேண்டும். மரகதவல்லி என்பது இவளது நிறத்தினால் பெற்ற பெயராகத் தெரியவருகிறது.

தமிழகத்தில் பல இடங்களில் அம்பிகாவின் உருவங்கள் கிடைத்துள்ளன. சில இடங்களில், குறிப்பாக ஆறகளூர் (சேலம் மாவட்டம்) போன்ற இடங்களில் செப்புப் படிமங்களாகவும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை, காலத்தால் பொ.ஆ. 10-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. விளாத்திகுளம், பள்ளன்கோயில், செங்கனிக்குப்பம் போன்ற இடங்களில் காணப்பட்டவை, காலத்தால் பொ.ஆ.13-14-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. சித்தாமூர், சிதறாள், அனந்தமங்கலம், கழுகுமலை, ஆனைமலை போன்ற இடங்களில் காணப்படும் அம்பிகை இயக்கியின் உருவங்கள் மிகக் குறைந்த வித்தியாசங்களுடன் தோற்றமளிப்பவை.

இவை அனைத்தும் ஒரே உருவ அமைதியைக் கொண்டவையாக, அவளது வாழ்வை சித்தரிக்கும் வகையில் வடிக்கப்பட்டவை. பெரும்பாலும், இயக்கி அம்பிகையின் திருவுருவத்தில் அவளது குழந்தைகளும் அவளது சேடிப்பெண்ணும் அவளது வாகனமாகிய சிம்மமும் சேர்ந்தே காணப்படும். இயக்கி அம்பிகையின் உருவ அமைதியைக் குறித்து ஸ்ரீபுராணம் கூறும் தகவல்களையும், அவை காரைக்கால் அம்மையார் அவர்களுடன் பொருந்துவதையும் அடுத்து வரும் கட்டுரைகளில் விரிவாகக் காணலாம்.

தமிழகத்தில் அம்பிகா சிற்பங்கள் காணும் இடங்கள்

தமிழகத்தில் அம்பிகாவின் திருவுருவங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. திருப்பான்மலை, சித்தாமூர், அனந்தமங்கலம், வள்ளிமலை, திருமலை, வெண்குன்றம் முதலிய இடங்களிலும், பாண்டி நாட்டில் ஆனைமலை, விளாத்திகுளம், அனுமந்தக்குடி, இளையான்குடி, சிங்கிக்குளம் முதலிய இடங்களிலும் கிடைத்துள்ளன. பிற்காலப் பாண்டியர்களும், சேதுபதிகளும் இயக்கி அம்பிகாவுக்குக் கோயில்கள் எடுப்பித்துள்ளனர். ஆறகளூர், தச்சாம்பாடி போன்ற இடங்களில் செப்புப் படிமங்களும் காணப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொசக்குடி, செம்பட்டூர் போன்ற இடங்களிலும் அம்பிகாவின் திருவுருவங்கள் காணப்படுகின்றன.*3. தாய் தெய்வ வழிபாட்டின் எச்சமாக அமையப் பெற்ற இயக்கியம்மன் வழிபாடு சிறப்புற்று திகழ்ந்துள்ளதையே இவை சுட்டுகின்றன.

மேற்குறித்தவற்றில், சித்தாமூர் அம்பிகா, நேமிநாதரின் இடப்பக்கம், பல்லவர் காலத்தில் பனைமலையில் உள்ள ஓவியத்தில் வரையப்பட்டுள்ள பார்வதி போன்று வலது காலை சிம்மத்தின் மீது ஊன்றி இடது காலை மடித்து சுவற்றில் சாய்ந்தகொண்டு ஒய்யாரமாக நிற்பதுபோலக் காட்சியளிக்கிறாள். அனந்தமங்கலத்தில் உள்ள இயக்கியின் வலக்கரம் தனது இடையில் வைத்த நிலையிலும், இடக்கரம் சேடிப்பெண்ணின் தலையின் மேல் வைத்த நிலையிலும் காணப்படுகிறது.

கழுகுமலை அம்பிகையின் உருவத்தில், வலக்கரம் சேடிப்பெண்ணின் தலையின் மீது வைத்த நிலையையும், இடக்கரத்தில் மாங்கனி ஒன்றை ஏந்திய நிலையிலும் வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கழுகுமலை அம்பிகையின் வாகனமாகிய சிம்மம், அம்பிகாதேவியின் அருகில் கம்பீரமாக நின்றுகொண்டு, வாலை மேல்பக்கம் சுருட்டியவாறு காட்டப்பட்டுள்ளது. பிற இடங்களில், அம்பிகையின் வாகனமாகிய சிம்மம் அவளது காலடியில் அமர்ந்த சிலையில் காட்டப்பட்டிருப்பதையும் காணலாம்.

செம்பட்டூரில் காணப்படும் அம்பிகா தனித்த நிலையில் இருக்கிறாள். வலக்கரத்தில் தாமரை மலர் ஏந்தியிருக்கிறாள். இடக்கரம் அவளது இடது தொடையின் மீது உள்ளது. இடப்புறம் தோழிப்பெண்ணும், வலப்புறம் அவளது குழந்தைகளும் காட்டப்பட்டுள்ளனர். இச்சிற்பத்தை வடிவத்தவனின் கல்வெட்டும் அருகிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வம்பிகையை ஜெயங்கொண்ட சோழகுல மங்கல நாட்டு மூவேந்தலூர்த்தேவர் என்பவர் செய்வித்தார் என்று அக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. இதன் காலம் பொ.ஆ.12-ம் நூற்றாண்டாகும்.*4.

சித்தாக்கியா

இவர், 24-வது தீர்த்தங்கரராகிய மகாவீரரின் இயக்கி ஆவார். சிம்மம் இவளது வாகனமாகும். நான்கு கரங்களுடன் காணப்படும் சித்தாக்கியா உருவத்தில், மேலிருகரங்களில் புத்தகம், பாசம் முதலியவற்றை ஏந்திக் காட்சியளிப்பாள். தமிழகத்தில் இவளது திருவுருவங்கள் சமணமலை, அனந்தமங்கலம் ஆகிய இடங்களில், அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் காட்சியளிக்கிறாள்.

மதுரைக்கு அருகில் உள்ள சமணமலையில், இவள் அவுணனோடு போரிடும் நிலையிலுள்ள அரிய சிற்பம் தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத அரிய சிற்பமாகும். ஆனை மேல் அமர்ந்த அவுணன், வலக்கரத்தில் வாள் ஏந்தி இடக்கரத்தில் கேடயத்தைப் பற்றிய நிலையில் இயக்கியை எதிர்கொள்ளும் காட்சியும், எதிரே சிம்மத்தின் மேல் குத்திட்டு அமர்ந்த இயக்கி, வில்லாக வளைத்து இடதுகரத்தினால் அவுணன் மீது அம்பு தொடுப்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பம், மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்டுள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்துக்கு ஒப்பிட்டுக் காணத் தகுந்ததாக உள்ளது. யாப்பெருங்கலவிருத்தியுரையில், அவுணனோடு போரிட்ட காட்சியையும், போரிட்ட இயக்கியைப் புகழ்ந்து கூறும் பின்வரும் பாடல் கீழ்வருமாறு குறிக்கின்றது.

 இடங்கை வெஞ்சிலை வலங்கை யாளியின் எதிர்ந்ததானையை

     இலங்கும் ஆழியின் விலங்கியோள்

 முடங்கு வாலுழை மடங்கல் மீமிசை முனிந்து சென்றுடன்

     முரண்ட ராசனை முருக்கியோள்

 வடங்கொண் மென்முலை நுடங்கு நுண்ணிடை மடந்தை சுந்தரி

     வனங்கொள் பூண்முலை மகிழ்ந்த கோன்

 தடங்கொள் தாமரை யிடங்கொள சேவடி தலைக்குவைப்பவர்

     தமக்கு வெந்துயர் தவிர்க்குமே.

சமணமலையில், இவள் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில், மகாவீரரின் இடதுபக்கம் சித்தாக்கியா தனித்த நிலையில் வலதுகையில் சாமரம் ஏந்திய நிலையிலும், இடதுகரத்தை தொடையின் மீது வைத்த நிலையிலும் காட்டப்பட்டுள்ளது. அனந்தமங்கலத்தில் காணப்படும் சித்தாக்கியா சிற்பத்தில், இரண்டு கரங்களுடன் மகாவீரரின் இடதுபுறத்தில் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளது.

சக்கரேஸ்வரி

சக்கரேஸ்வரி - கன்காளி

இவர், முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதரின் இயக்கியம்மன் ஆவார். எட்டுக் கரங்களுடன் சக்கரப் படையை ஏந்தி காட்சியளித்தமையால் சக்கரேஸ்வரி என்றும் சக்கரதாரிணி என்றும் அழைக்கப்பெற்றாள். நான்கு கரங்களுடன் சில இடங்களில் காட்சியளிக்கிறாள். இவற்றில், மேலிரு கரங்களில் சக்கரத்தையும், கீழ்கரங்களில் கொடுக்கும் நிலையில் உள்ள வரதமுத்திரையையும் கொண்டவளாவாள். இருபது கரங்களைக் கொண்டவளாகவும் படைக்கப்பட்டுள்ளாள். தமிழகத்தில், வல்லமங்கலத்தில் எடுக்கப்பட்ட செப்புப் படிமம் தற்போது புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படிமத்தில், ஆதிநாதரின் இடப்புறம் சக்கரத்தைக் கையில் ஏந்திய நிலையில் சக்கரேஸ்வரியின் உருவம் காட்டப்பட்டுள்ளது. பொ.ஆ. 10-ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று குறிப்பர். பள்ளன்கோயிலில் நின்ற நிலையில் சக்கரத்தைக் கையில் ஏந்திய பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சக்கரேஸ்வரியின் உருவம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சமணக்காஞ்சியான திருப்பருத்திக்குன்றத்துக் கோவிலில், பிற்காலத்தைச் சார்ந்த ஆதிநாதருடன் சக்கரேஸ்வரியின் செப்புப் படிமம் உள்ளது.

சக்கரேஸ்வரி செப்புப் படிமம்

சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சக்கரேஸ்வரி செப்புப் படிமம் மிகவும் சிறப்புக்குரியது. வந்தவாசி வட்டம், சளுக்கை கிராமத்தில் காணப்பட்ட இச் சக்கரேஸ்வரி செப்புப் படிமம், வீரகேரளபெரும்பள்ளி எனும் 11-ம் நூற்றாண்டைச் சார்ந்த சமணக் கோயிலுக்குச் சார்ந்ததாகும். நான்கு கரங்களுடன் அர்த்தபத்மாசனத்தில் தாமரை மலரின் மீது அமர்ந்த நிலை.

அவரது தலையை கரண்ட மகுடமும், சிரச்சக்கரமும் அலங்கரிக்கின்றன. காதணிகளுடனும், கழுத்தணிகளுடனும், வளையல்களுடனும் அழகுடன் காட்சியளிக்கிறாள். இவளது மார்பில் கூச்சுபந்தம், அதாவது மார்புக்கச்சையும் காட்டப்பட்டுள்ளது. மேலிரண்டு கரங்களில் சக்கரங்களும், கீழிரண்டு கரங்களில் ஒன்றில் தாமரை மொட்டும், மற்றொன்றில் பழமும் ஏந்தியுள்ளவாறு காட்சி தருகிறாள். சக்கரேஸ்வரி சங்கு சக்கரத்துடன் உள்ளதுபோல, சமண சமயத்து இயக்கிகள் வடிக்கப்பட்டுள்ளனர்.*5

ஜீனவானி

சளுக்கை கிராமம் (வந்தவாசி வட்டம்) அமைந்த ஜீனாலயத்தில் காணப்பட்ட செப்புப் படிமம் இந்த ஜீனவானி. இதைக் காணும்போது, இந்து மக்கள் வழிபடும் தேவி சரஸ்வதி போன்றே தோன்றுகிறது. அர்த்தபத்மாசனத்தில் தாமரை மலரின் மீது அமர்ந்த நிலையில் காணப்படும் இத்தேவி, சமணர்கள் வழிபட்ட சரஸ்வதியாகும். எனவேதான், இவள் ஜீனவானி என்று அழைக்கப்படுகின்றாள். இங்கு இவள் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறாள். மேலிரண்டு கரங்களில் முத்துமாலையும், பாசமும் காணப்படுகிறது. கீழிரண்டு கரங்களில் பனை ஓலைச்சுவடியும், கமண்டலமும் கொண்டுள்ளாள். தலையலங்காரமாக தலையை வாரி அழகிய வடிவில் கட்டப்பட்டு, கேசபந்தமும் சிரசக்கரமும் போடப்பட்டுள்ளன. காதணிகளும், கழுத்தணிகளும், முப்புரிநூலும், கேயூரமும் காட்டப்பட்டுள்ளன. கீழ்வரை ஆடை காட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.*6

ஜீனவானி

பிரம்மாவின் துணைவியாகிய சரஸ்வதி போன்று இத்தெய்வமும் சமணர்களால் வழிபட்ட கல்விக் கடவுளாகும் என்று முன்னர் குறிப்பிடப்பட்டது. அனைத்து சமயங்களும் வழியுறுத்துவது என்னவெனில், இறைவன் ஒருவனே நம்மை இயக்குகின்றான். அவர்களுக்கு வழித்துணையாக நிற்பவர்கள் பெண் தெய்வங்கள் என்ற கருத்தின் அடிப்படையிலேயே இங்கும் எடுத்துக் கூறப்படுகிறது என்பதை நன்கு அறியமுடியும். வழிபடும் தெய்வம் ஒன்றே; சமயங்களும் இடங்களும் வேறுபடுகின்றன. ஆனால், உள்கருத்துகள் சிறதளவும் மாற்றம் பெறவில்லை என்பதே உண்மையாகிறது.

ஜீவாலாமாலினி

சந்திரபிரபா எனும் எட்டாவது தீர்த்தங்கரரின் இயக்கி ஜீவாலாமாலினி ஆவார். ஜீவாலா மகுடம் அணிந்துள்ளதால், இவள் ஜீவாலாமாலினி என்று அழைக்கப்பட்டாள். இவளுக்கு பிருகுடி என்ற வேறு பெயரும் உண்டு. சிற்பங்களில் நான்கு கரங்களிலிருந்து எட்டு கரங்கள் வரை பெற்று விளங்குவாள். இவளது கரங்களில் சக்கரம், அம்பு, வில், கத்தி, கேடயம், பாசம், திரிசூலம் முதலியவற்றைக் கொண்டு திகழ்வாள். இவளது வாகனம் எருமை. அரகண்டநல்லூரில் அதாவது, பென்னையாற்றங்கரையின் வடபகுதியில் பொன்னியம்மன் என்ற பெயரில் ஜீவாலாமாலினிக்கு ஒரு கோயில் உள்ளது.

வந்தவாசி வட்டத்தில் அமைந்துள்ள பொன்னூரில் ஜீவாலாமாலினிக்கு செப்புப் படிமம் ஒன்று உள்ளதை கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் அமைந்துள்ள ஜீனாலயத்தில், ஜீவாலாமாலினிக்கு என ஒரு சிறு ஆலயம் உள்ளது. பொன்னூர் ஆதிநாதர் ஆலயத்தில் காணப்படும் ஜீவாலாமாலினி செப்புப் படிமத்தில், வலதுபக்கக் கரங்களில் சக்கரம், அபயமுத்திரை, கதை, ஈட்டியும், இடதுகரங்களில் சங்கு, கேடயம், கபாலம், புத்தகத்தையும் கொண்டு திகழ்கிறது.*7

தமிழகத்தில் காணப்படும் இயக்கியம்மன் திருவுருவங்கள் உருவாக்கம் பெறுவதற்குத் தமிழகத்துக்கு வெளியே இருந்து பெறப்பட்ட கலை மரபுகளும், பழமையான சிற்பங்களுமே உறுதுணையாக நின்றுள்ளன. வடஇந்தியாவில் காணப்படும் சில சிற்பக்கலை நுணுக்கங்களை, தமிழகத்தில் காணப்படும் இயக்கியம்மன் சிற்பங்களில் காணமுடிகிறது. சாளுக்கியர், கங்கர், இராட்டிரகூடர் ஆகியோரது சமண சமயப் படைப்புகளிலிருந்து பெற்ற தாக்கங்களையும் தமிழகச் சிற்பங்களில் காணமுடிகிறது.

எவ்வாறிருப்பினும், தமிழகத்தில் காணப்படும் இயக்கியம்மன்கள் காலத்தால் மிகவும் பழமையானவை என்பதை வலியுறுத்தும் வகையில், இங்குள்ள சிற்பங்களில் நமது பண்டைய மரபும், தொன்மைச் சிறப்பும் குன்றாமல் இருப்பதை காணமுடிகிறது. தமிழக மக்களின் தொன்றுதொட்டு வந்த கலை மரபையும், கலைப் படைப்பையும் மனதில் இருத்தி, தாய் தெய்வ வழிபாட்டை சிறப்பித்து நிற்பது தமிழகம் என்ற கருத்திலிருந்து பிசகாமலும், தங்களது சமணப் படைப்புகளைச் செய்து மக்களிடம் கொண்டு சர்த்த பெருமை தமிழக மக்களுக்கு உண்டு என்பதே ஒருமித்த கருத்தாகும்.

பொதுவாக, தாய் தெய்வ வழிபாடு என்பது உலகம் தோன்றியது முதல் பின்பற்றிவந்த ஒன்றாகும். அதன் அடிப்படையில், ஒவ்வொரு சமயத்தினரும் தங்களுக்கு ஏற்ப தாய் தெய்வங்களைப் பல்வேறு வடிவங்களில் மாற்றி அமைத்துக்கொண்டனர் என்பதே, அதன் உட்கருத்தாகும்.

வரலாற்றுக் காலங்களில் அரச பரம்பரையினர் சைவ, வைணவத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்துள்னர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவற்றில் சைவமும் வைணவமும் தாய் வழிச் சமுதாய அடிப்படையிலிருந்து விலகி, ஆணாதிக்க சமுதாயமாக மாற்றம் பெற்றுக்கொண்ட சூழலில், அவர்கள் வழிபட்ட இறைவனைப் படைக்கும்போது அவர்கள் பெண்களுக்கு, அதாவது தாய் தெய்வங்களுக்கு, அதாவது சக்தி வழிபாட்டுக்கு அவர்கள் வழங்கிய இடத்தையும், அதன் சிறப்பையும் அடுத்து வரும் கட்டுரைகளில் காணலாம்.

சான்றெண் விளக்கம்

1. வெ. வேதாசலம், இயக்கி'ம்மன் வழிபாடு, அன்னம் (பி) லிட், சிவகங்கை. 1989.

2.  P.B. Desai, Jainism in South India, Jaina Sanskrit samrakshaka Samga, Sholapur, 1957.

3. R. Nagasamy, Jaina Art and Architecture under the Cholas.

4. A.R.E, 218, 1940-41.

5. Dr. R. Kannan & K. Laksminarayanan, Iconography of the Jain images in the Government museum, Chennai - 8, New Series - vol-XVI.No.1, 2001.

6. மேலது, பக். 85.

7. வெ. வேதாசலம், இயக்கி'ம்மன் வழிபாடு, அன்னம் (பி) லிட், சிவகங்கை. 1989.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com