அத்தியாயம் 46 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 39

தென்னிந்தியாவில் இரும்பு தொழில்நுட்பம் அறியப்பட்டவுடன் அரசியல் தளத்திலும், மக்களின் வாழ்வியலிலும் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பெருங் கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்

இரும்பு, எஃகு குறித்த ஏராளமான செய்திகள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. இவற்றுள் காலத்தால் மூத்த தொல்காப்பியம்,

“குடையும் வாளும் நாள்கோள் அன்றி

மடையமை ஏணி மிசை மயக்கமும்” (புறத்திணை.சூ.71)

“கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்

சென்ற உயிரின் நின்ற யாக்கை

இருநிலந் தீண்டா அருநிலை வகையோடு

இரு பாற் பட்ட ஒரு சிறப்பின்றே” (புறத்திணை.சூ.71)

“களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன்

வாளோர் ஆடும் அமலையும்” (புறத்திணை. சூ.72)

என, வாள், வேல், கணை போன்ற ஆயுதங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவை எந்த வகை உலோகத்தில் செய்யப்பட்டவை என்ற குறிப்பு இல்லை எனினும், தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் இரும்புக் காலம் என்பதால், இவை இரும்பு, எஃகால் செய்யப்பட்டவையே என்பது திண்ணம்.

தொகை நூல்கள் இரும்பு, எஃகு, உருக்கு ஆகிய சொல்லாட்சிகளை வெகுவாகக் கொண்டிருக்கின்றன. இவை உறுதியைச் சுட்டும் உவமைப் பொருளாகவும், கருவிகளுக்கான உலோகங்களைச் சுட்டும் பொருளாகவும் இருக்கின்றன. பெரும்பான்மையும் உலோகப் பெயர் தொழிற் கருவிகளை சுட்டி நிற்பதாக உரையாசிரியர்கள் கொண்டுள்ளனர். பொன் என்ற பொதுவாக எல்லா உலோகங்களைச் சுட்டும் பொதுச் சொல்லாக அறியப்பட்டாலும், சங்க இலக்கியத்தில் பொன் என்ற சொல்லாட்சி மிகுதியாக மஞ்சள் நிறத்தையும், குணத்தையும், தங்கத்தையும் சுட்டி நிற்கிறது. இரும்பு என்ற சுட்டில், பொன் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை, தமிழர் பண்பாட்டில் இரும்பு நிலைபெற்ற தொன்மையான காலத்துக்குச் சான்றாகவும் கொள்ளமுடியும். இரும்பு, எஃகு, உருக்கு சொற்களின் மிகுதியான பயன்பாடும், வேறுபட்ட பொருளிலான பயன்பாடும் இரும்புத் தொழில் பன்முகம் கொண்டு மு.பொ.ஆ.400-க்கு முற்பட்டே நன்கு வளர்ந்திருந்த நிலையைக் காட்டுகிறது. (சங்க இலக்கியத்தில் இரும்பு, எஃகு, உருக்கு, பொன் ஆகிய சொற்களின் பயன்பாட்டுக்கு இணைப்பு அட்டவணையைக் காண்க).

இரும்பு உருக்கும் தொழிலும், இரும்பை எஃகாக்கும் தொழில்நுட்பமும், ஆயுதம் உட்பட பிற கருவிகளாக்கும் தொழில் நுட்பமும் பெருங் கற்படைக் காலத்தில் எவ்வளவு வெகுவாக முன்னேற்றம் அடைந்திருந்தது என்பதைக்கொண்டே, அன்றைய இரும்பின் வரலாற்றை நாம் மதிப்பிட முடியும். ஏனெனில், தென்னிந்தியாவில் இரும்பு தொழில்நுட்பம் அறியப்பட்டவுடன் அரசியல் தளத்திலும், மக்களின் வாழ்வியலிலும் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அம்மாற்றங்கள், அதுநாள்வரை நால்நிலப் பண்பாட்டைப் பேணிவந்த தமிழர் வாழ்வியலை மாற்றியது; நால்வகைத் திணை நிலங்களின் இயற்குணங்களை மாற்றி அமைக்க முனைந்தது. இனக்குழு தலைமை, இனக்குழு வாழ்க்கை முறைகளை அழித்து, மரபுவழி உரிமை பெற்ற ஆளும் குடிமரபு என்ற அரசு உருவாக்கத்தையும் தந்தது. அரசு உருவாக்கத்துக்கும் மருத நிலத்துக்கும், மருத நில மாக்களுக்கும் நெருக்கிய தொடர்பு உண்டு. மருத நில மாக்கள் என்பதற்கு இரும்பின் பங்களிப்பு மிக அதிகம் என்பது குறித்து முந்தைய அத்தியாயங்களிலும் குறிப்பிடப்பட்டது.

மூன்று வகை இரும்புகள்

பண்டைய தமிழகத்தில் மூன்று வகை இரும்புகள் உற்பத்தி செய்து வந்ததை தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு அறியமுடிகிறது. அவை - 1. மெல்லிரும்பு (Wrought Iron), 2. வார்ப்பிரும்பு (Cast Iron), 3. எஃகு அல்லது உருக்கு (Steel, or the Wootz) ஆகியவை. மெல்லிரும்பு என்பதில் கரியம் (கார்பன்) முதலான பிற தனிமங்கள் குறைவாக இருக்கும். இதனால், இது நல்லிரும்பு என்றும் அழைக்கப்படுகிறது. இரும்புக்கு உறுதித்தன்மையை வழங்கும் கரியத்தின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், உறுதியான நீடித்து உழைக்க வேண்டிய கருவிகள் செய்யப் பயன்படாது. வார்ப்பிரும்பில், எஃக்கில் உள்ளதைவிட கரியம் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கும். இது இரும்புக்கு கெட்டித்தன்மையை அளித்தாலும், எளிதில் நொறுங்கும் இயல்புடையது என்பதால், இதன் பயன்பாடும் குறுகிய நோக்கம் கொண்டதே. எஃகில் இரும்புக்கு உறுதித்தன்மையை வழங்க, 1.2 முதல் 2 சதவீத கரியம் சமச்சீரான வகையில் நுட்பமாகச் சேர்க்கப்பட்டிருக்கும். இதுவே எஃகுக்குத் தேவையான உறுதியையும், எளிதில் நொறுங்காத தன்மையையும் வழங்குகிறது. 1.7 சதவீத கரியச் சேர்க்கையே சிறப்பான எஃக்கை வழங்குகிறது என தற்பொழுது நிறுவப்பட்டுள்ளது. தரமான எஃகே ‘உருக்கு’ என்றும் அழைக்கப்பட்ட இரும்பாகும். உருக்கு என்ற தமிழ்ச்சொல்லே “ஊட்ஸ் இரும்”பாக மேற்குலகின் வழக்கில் திரிபடைந்துள்ளது என இரும்பின் வரலாற்றை எழுதப்புகும் அனைவரும் குறிப்பிடுகின்றனர். “உருக்”, தென்னிந்தியாவில் வழக்கில் உள்ள திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த எல்லா கிளை மொழிகளிலும் இடம்பெற்றிருக்கும் சொல்லாகும்.

இயற்கையான இரும்பில், சில இடங்களில் கரியம் அதிகமாகவும், சில இடங்களில் குறைவாகவும் இருக்கும். அதிகமாக உள்ள கரிமத்தை தேவையான அளவுக்குக் குறைக்க “கரியநீக்கம்” தொழில்நுட்பமும், (Decarbonisation), தேவையான அளவுக்குச் சேர்க்க “கரியசேர்க்கை” (Carbonisation) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இடைக்கும் இரும்புத்தாதுக்களில் கரியம் அதிகமாகக் காணப்படுவதால் கரியநீக்கத் தொழில்நுட்பமே இங்கு மேற்கொள்ளப்பட்டது.

இரும்பு உலைக்கலங்கள்

இரும்பு செய்யவும், எஃகு செய்யவும் இரு வேறு உலைக்கலங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை தொல்லியல் அகழாய்வுகள் காட்டுகின்றன. இரும்புத்தாதுவிலிருந்து இரும்பை உருக்கி எடுக்க, நிலத்துக்கு மேல் உலைக்கலன்கள் அமைக்கப்படும். இதற்கு சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊதுஉலைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரும்பை எஃக்காக மாற்றுவதற்கு புடமிடும், அதாவது கரியச்சேர்க்கைக் கலன்களை நிலத்துக்குள் அமைத்து பயன்படுத்துவர். இவ்விரு உலைக்கலன்களும் கொடுமணல் அகழாய்வில் வெளிப்பட்டுள்ளது. எஃகுத் தொழிற்சாலை ஆங்காங்கே பரவலாக நடைபெற்றிருந்துள்ளது என்பதை களப்பரப்பு ஆய்வுகள் வெளிப்படுத்திவருகின்றன. இன்றைய தமிழகத்தின் வடக்குப் பகுதி தரமான இரும்பு வளத்தால் நிறைந்திருக்கும் பகுதி என்பதால், அங்கும் எஃகுத் தொழில் சிறப்பாக நடைபெற்றது.

மூன்று வகை இரும்புகள் செய்ய, இரும்புத் தாதுவுக்குத் தரப்படும் வெப்பநிலையும், குளிர்விக்கும் முறையுமே தீர்மானிக்கின்றன. தாதுவிலிருந்து இரும்பை உருக்கி எடுக்க 1100 டிகிரி சென்ட்டிகிரேட் வெப்பநிலையும்; அவ்விரும்பை எஃகாக வடித்தெடுக்க 1300 டிகிரி வெப்பமும் தேவை.

குட்டூர் உலைக்கலம் - மு.பொ.ஆ. 500 அளவில், இந்தியாவில் செயல்பட்ட மிகப்பெரிய உலைக்கலம்

ரகுநாத ராவ் மற்றும் சசிசேகரன் ஆகிய இருவரும் இணைந்து தகடூர்ப் பகுதியின் குட்டூர் (இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம்) என்ற இடத்தில் கிடைத்த உலைக்கலங்கள் மீது நடத்திய உலோகவியல் ஆய்வில், குட்டூரில் “வார்ப்பு இரும்பு” செய்யப்பட்டதை நமக்கு விளக்கியுள்ளனர். இவ்வார்பு இரும்பை செய்ய தனி நிபுணத்துவம் வேண்டும் என உலோகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அது எவ்வாறெனில், 1300 டிகிரி சென்ட்டிகிரேடுக்குப் இரும்பை உருக்கி, அதே வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டும். இத்தகைய தொழில் நிபுணத்துவத்தை தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

1982-1983-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட குட்டூர் அகழாய்வு குறித்து சசிசேகரன் தெரிவிக்கும் பிற செய்திகளும், தகடூர்ப் பகுதியின் இரும்பு வளம் மற்றும் இரும்புத் தொழில்நுட்ப வளர்ச்சியையும் காட்டுகிறது. “குட்டூர் அகழாய்வுப் பொருட்கள், அங்கு மு.பொ.ஆ.500 அளவில் வார்ப்பிரும்பு செய்ததற்குச் சான்றாக உள்ளன. இங்கு, அளவு நீட்டிக்கப்பட்ட நீள் உருண்டை என்ற முட்டை வடிவம் கொண்ட இரு உலைக்கலன்கள்கள் 2.02 மீட்டர் நீளமும், 0.63 மீட்டர் அகலமும், 0.45 மீட்டர் உட்குழிவும் (ஆழம்) கொண்டு காணப்பட்டன என்றும்; உலைக்கலன்களின் இருபுறமும், இரண்டுக்கு இடையிலும் செங்கல் கட்டுமானம் காணப்பட்டன” என்றும் குறிப்பிடுகின்றார். உலைகளின் அமைப்பின் நோக்கத்தையும், பயன்பாட்டையும் விளக்க அவர் தெரிவிக்கும் கண்டுபிடிப்பு முக்கியமானது. “குட்டூர் உலைக்கலனின் அளவுகளை இதுவரை கண்டுபிடித்த உலைகலன்களின் அளவுகள் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால், அன்றைய நிலையில், அதாவது மு.பொ.ஆ.500 அளவில், “இந்தியாவில் செயல்பட்ட மிகப்பெரிய உலைக்கலமாக குட்டூர் உலைக்கலம் திகழ்கிறது” எனக் குறிப்பிடுகின்றார்.

மேலும், ஆங்கிலேயரான புச்சனன் அவர்களின் குறிப்புகளில் இருந்து, “மலபார்ப் பகுதியில் செயல்பட்ட இரட்டை அடுப்பு உலைகலன்கள் மிகப்பெரியது என்றும், அது ஒரு கொதிக்கு 250 கிலோ இரும்பை வடித்தெடுக்கும் அளவு பெரியது” என்றும் பிரகாஷ் எடுத்துக்காட்டுவதைச் சுட்டி, “அவை 18-19-ம் நூற்றாண்டில் செயல்பட்டவை என்றும், மலபாரில் செயல்பட்ட உலைக்கலனின் அளவு, வடிவ மாதிரியின் ஒப்புமையைக் கொண்டுள்ள குட்டூர் உலைகலன் மு.பொ.ஆ.500 அளவிலேயே செயல்பட்டன என்று குட்டூரின் தொன்மைச் சிறப்பையும், உற்பத்தி அளவுச் சிறப்பையும் எடுத்துக்காட்டுவார்”. (Sasisekaran.B, Metallurgy and Metal Industries in Ancient Tamil Nadu, Indian Journal of History and Science, 37.1, (2002), p.23.) இன்றுவரை மேற்கோள்ளப்பட்டுள்ள அகாழாய்வுகளில், குட்டூரைவிட பெரிய தொன்மையான உலைகலன் வெளிப்படவில்லை என்பதை நினைவில் கொள்வோம். ஆகையால், மு.பொ.ஆ.500 அளவில் இந்தியாவில் செயல்பட்ட மிகப்பெரிய உலைகலன் என்ற சிறப்பை இன்றும் குட்டூரே தக்கவைத்துக்கொண்டுள்ளது.

கொடுமணல் மற்றும் தென் தமிழக பிற அகழாய்வுகளில் பெருங் கற்கால ஈமச்சின்னங்களில் இருந்து பிராகிருத மற்றும் வடமொழி சார்புடைய பெயர் பொறித்த பானை ஓடுகள் கிடைத்திருப்பது கொண்டு, தமிழகத்து இரும்புத் தொழிலில் அவர்களது பங்கு உள்ளது எனக் கருதும் போக்கும் உள்ளது. ஆனால், தகடூர்ப் பகுதிகளிலிலும், வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு பகுதிகளில் மெற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், இவ்வகைப் பெயர்ப்பொறிப்பு ஓடுகள் கிடைக்கப்பெறாத நிலை கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளது.

வட இந்தியாவில் பெருங் கற்படைப் பண்பாடுடனோ அல்லது, பிறவகையிலோ பெயர்ப்பொறிப்பு பெற்ற பானை ஓடுகள் கிடைத்திராத நிலையும் கணக்கில்கொண்டு பார்த்தால், இங்கு வட இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காகக் குடியேறி, தென்னிந்தியப் பண்பாட்டால் ஈர்க்கப்பட்டு, எரிக்கும் மரபைக் கைவிட்டு, புதைக்கும் மரபை ஏற்றுத்தழுவி தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள, தம்முடைய பெயரைப் பொறித்து தமது ஈமச்சின்னங்களை அமைத்தனர் என எண்ணுவதே பொருத்தமுடையதாக உள்ளது.

இணைப்பு - அட்டவணை (இரும்பு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com