பட்டாசை பற்ற வைக்கும் முன் கண்கள் மீது பற்று வையுங்கள்

பெங்களூர், அக். 23: குழந்தைகளை கவர்ந்து இழுக்கும் பண்டிகைகளில் தீபாவளிக்கு என்றுமே முதலிடம்தான். புத்தாடை, புத்தொளி தவிர பட்டாசுகளின் வெடிசத்தமும், மத்தாப்பின் வண்ணக்கோலமும் குழந்தைகளை குதூகலிக்க வைக்
Updated on
1 min read

பெங்களூர், அக். 23: குழந்தைகளை கவர்ந்து இழுக்கும் பண்டிகைகளில் தீபாவளிக்கு என்றுமே முதலிடம்தான்.

புத்தாடை, புத்தொளி தவிர பட்டாசுகளின் வெடிசத்தமும், மத்தாப்பின் வண்ணக்கோலமும் குழந்தைகளை குதூகலிக்க வைக்கும் அம்சங்கள். தீபாவளி வந்தால் பட்டாசு கொளுத்தி பட்டையை கிளப்ப வேண்டுமென காத்திருக்கும் குழந்தைகள், முன்ஜாக்கிரதையின்றி பட்டாசுகளை வெடிப்பதால் கண்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகியுள்ளது. எத்தனை முறை எடுத்து சொன்னாலும் முகத்துக்கு அருகே வைத்து பட்டாசு வெடிப்பதை குழந்தைகள் நிறுத்துவதில்லை என்று பெற்றோர்கள் அங்கலாய்ப்பதை கேட்டிருக்கிறோம்.

பட்டாசு வெடிப்பவர்களைவிட அதை காண சென்ற 40-60 சதவிகிதம் பேருக்கு தான் எதிர்பாரா விபத்து நேர்ந்து கண்கள் பாதிப்படைந்து விடுகின்றன. 30 சதவிகிதம் பேருக்கு இரண்டு கண்களிலும் காயமேற்படுகிறது. வெடிகுண்டுகள் (பாம்) மற்றும் ராக்கெட்களால் 60 சதவிகிதம் பேருக்கு கண்கள் பாதிக்கப்படுகின்றன. தீபாவளி காலங்களில் பட்டாசு வெடிகளால் காற்று மாசடைந்து ஆஸ்துமா பிரச்னையும் ஏற்படும் என்று எச்சரிக்கிறார் சம்பிராதி கண் மருத்துவமனை மருத்துவர் அருண் சம்பிராதி.

தகுந்த முன்னெச்சரிகையுடன் பட்டாசு வெடிக்க தவறினால் தீபத் திருநாள், இருண்டநாளாக மாறிவிடும். எனவே ஆபத்து வருவதற்கு முன் தற்காத்து கொள்வது சாதுர்யமானது. பட்டாசு வெடிப்பதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், பட்டாசுகளுக்கு பதிலாக பெரியவர்களின் கண்காணிப்பில் ஒளிதரும் மத்தாப்புகளை கொளுத்தி மகிழலாம். எளிதில் தீ பற்றிக்கொள்ளும் பொருள்களில் இருந்து விலகியிருந்து மத்தாப்புகளை கொளுத்த வேண்டும்.

அவரச தேவைக்காக எப்போதும் வாளியில் தயாராக தண்ணீர் வைத்திருக்க வேண்டும். சரியாக வெடிக்காத பட்டாசு அல்லது மத்தாப்புகளை தொட வேண்டாம். கண்ணாடி அல்லது பெட்டியில் வைத்து பட்டாசு வெடிக்கக் கூடாது. பட்டாசின் திரியை கொளுத்தும் போது கண்களை தூரவையுங்கள். பட்டாசு வெடிக்கும் போது தளர்வான ஆடைகளை அணியக் கூடாது.

பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. கண்களுக்கு பாதுகாப்பாக மூக்கு கண்ணாடி அணிவது உகந்தது. ராக்கெட்கள், பாம்கள், பூந்தொட்டிகள்தான் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

மின்னல் கம்பிகளை தூரமாக வைத்து கொளுத்தவும். அப்போது கையுறைகளை அணிவதும் நல்லது. 5 வயது குழந்தைகளிடம் மின்னல்கம்பிகளை தரக்கூடாது. ஒருவேளை காயம் ஏற்பட்டால் கண்களை தேய்க்காதீர்கள். கண் உள்ளே காயம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அருகாமையுள்ள கண் மருத்துவமனைக்கு விரையுங்கள். கண்ணில் காயம் இல்லாதபட்சத்தில் கொப்பளம் ஏற்பட்டுள்ள இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றிவிட்டு மருத்துவரை அணுகுங்கள் என்றார் அருண் சம்பிராதி.

பெங்களூரில் செயல்படும் அகர்வால் கண் மருத்துவமனை, நாராயணா நேத்ராலயா, சம்பிராதி கண் மருத்துவமனை, மென்டோ அரசு கண் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனைகள் அக்டோபர் 25 முதல் 27-ம் தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

பட்டாசு காயங்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 080-23367544, 9845423955 என்கிற தொலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com