கர்நாடகத்தின் பசுமை சிற்பி எம்.எச்.மரிகெளடா

கர்நாடக தோட்டக்கலையின் தந்தை என்று போற்றப்படும் பசுமை சிற்பி எம்.எச்.மரிகெளடாவின் நூற்றாண்டு விழா நிகழாண்டில் தொடங்கியுள்ளது.
கர்நாடகத்தின் பசுமை சிற்பி எம்.எச்.மரிகெளடா
Updated on
2 min read

கர்நாடக தோட்டக்கலையின் தந்தை என்று போற்றப்படும் பசுமை சிற்பி எம்.எச்.மரிகெளடாவின் நூற்றாண்டு விழா நிகழாண்டில் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பசுமை ஆபரணமாக விளங்கும் பெங்களூருக்கு பூங்கா நகரம் என்ற புகழ் கிடைக்க லால்பாக் பூங்கா மற்றும் கப்பன் பூங்காவே காரணமாகும். இத்தனை புகழுக்கும் லால்பாக் பூங்காவை உயர்த்தியவர்தான் டாக்டர் எம்.எச்.மரிகெளடா. இந்தியாவின் தோட்டக்கலை மாநிலம் என்ற பெயரை கர்நாடகத்துக்கு பெற்றுத் தந்தவரும் மரிகெளடாதான். அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பாலமாக விளங்கி கர்நாடகத்தை தோட்டக்கலையின் தொட்டிலாக மாற்றி, அதைப் பாராட்டி தாலாட்டி வளர்த்தவர் மரிகெளடா. இத்தனை புகழுக்கும் சொந்தக்காரரை பசுமை சிற்பி என்று அழைப்பதே பொருத்தமாக அமையும்.
கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா வட்டத்தின் மரேகெளடனஹள்ளி கிராமத்தில் 1916 ஆக.8-ஆம் தேதி பிறந்தவர் எம்.எச்.மரிகெளடா. இந்த ஆண்டு அவர் பிறந்த நூற்றாண்டாகும். இதை ஆண்டு முழுவதும் கொண்டாட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே நிகழாண்டுக்கான சுதந்திர தின மலர்க்கண்காட்சி, எம்.எச்.மரிகெளடாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பை மைசூருவில் உள்ள மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் முடித்து, பெங்களூரு, சென்ட்ரல் கல்லூரியில் பிஎஸ்சி (இயற்கை அறிவியல்) பட்டப் படிப்பை 1939-ஆம் ஆண்டு நிறைவு செய்தார். அதன்பிறகு, லக்னெள பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி முதுநிலை பட்டத்தை 1942-ஆம் ஆண்டு பெற்றார்.
படிப்பை முடித்ததும் அப்போதைய அரசு தோட்டங்கள் துறையில் உதவிக் கண்காணிப்பாளராக அரசுப் பணியில் சேர்ந்தார். இவரது ஆர்வம், திறமை, தனித்தன்மையை உணர்ந்த அப்போதைய மைசூரு மன்னர் அரசு, மரிகெளடாவை மேற்படிப்புக்காக இங்கிலாந்து நாட்டில் உள்ள கீவ் தோட்டத்துக்கு அனுப்பி வைத்தது. இதை தொடர்ந்து ஹோலந்து நாட்டுக்கும் சென்று பயிற்சி பெற்றார். ஓராண்டுகால பயிற்சியில் தோட்டக் கலையில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், நவீன தோட்டக்கலை நுட்பங்கள் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். இங்கிலாந்தில் பயிற்சியை முடித்தகையோடு அமெரிக்காவுக்கு சென்ற மரிகெளடா, அங்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலையில் பிஎச்டி பட்டம் பெற்றார்.
1951-இல் தாய்நாடு திரும்பிய மரிகெளடா, மைசூரு மன்னர் அரசில் அரசு தோட்டங்கள் துறையின் துணைக் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டது. அதையடுத்து விரைவாக கண்காணிப்பாளராகவும் பணி உயர்வு பெற்று உயர்ந்தார். வெளிநாடுகளில் சம்பாதித்த அறிவாற்றலை விவசாயிகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த முடிவுசெய்த மரிகெளடா, அதற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார். அரசு தோட்டங்கள் துறைக்கு புதிய பயணத் திட்டத்தை வகுத்துச் செயல்பட தொடங்கிய மரிகெளடா, 1963-இல் இத்துறையை தோட்டக்கலைத் துறையாக மாற்றி அமைத்து, தனது செயல்பாட்டு பரப்பை விரிவாக்கிக் கொண்டார்.
தோட்டக்கலைத் துறை முதல் இயக்குநராகவும் மரிகெளடா நியமிக்கப்பட்டார். அது முதல் அயராது உழைத்த மரிகெளடா, 1974-ஆம் ஆண்டில் தனது 23 ஆண்டுகால அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். தோட்டக்கலையில் செய்த சாதனைகளை போற்றும்வகையில் 1993-ஆம் ஆண்டு தோட்டக்கலை ரத்னம் என்ற விருதை மரிகெளடாவுக்கு அளித்து கர்நாடக அரசு கெளரவப்படுத்தியது.
23 ஆண்டுகால பதவிக் காலத்தில் கர்நாடகத்தை தோட்டக்கலை மாநிலமாக உயர்த்திவிட்டார். இந்தியாவின் முதல் தோட்டக்கலை மாநிலமாகவும் கர்நாடகத்தை புகழடையச் செய்தார். 1951-ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் 2 தோட்டக்கலை பண்ணைகள் மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை 1974-ஆம் ஆண்டில் 394 ஆக உயர்ந்தன. மாநிலத்தின் தோட்டக்கலை பரப்பை 100 ஏக்கரில் இருந்து 18 ஆயிரம் ஏக்கராக விரிவாக்கினார். 140 ஏக்கர் பரப்பளவில் பசுமை பொங்கிவந்த லால்பாக் பூங்காவை, 240 ஏக்கர் பரப்பளவில் பல அரிய மரங்கள், மலர்கள், தாவரங்கள் கொண்ட பசுமைக் கடலாக மாற்றிக்காட்டினார்.
தோட்டக்கலையில் விவசாயிகளை ஈடுபடுத்த 4 முனை திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார். அதற்காகவே, தோட்டக்கலைத் துறை (அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்), நாற்றங்கால் கூட்டுறவு சங்கம் (நகர மக்களுக்கு தோட்டம் சம்பந்தமான ஊட்டம் அளித்தல்), தோட்டக்கலை உற்பத்தி விற்பனை கூட்டுறவு சங்கம்(தோட்டக்கலை விளைப்பொருள்களை அறிவியல் ரீதியாக விற்றல்), மைசூரு தோட்டக்கலை சங்கம் (தோட்டக்கலை பரப்புரை மற்றும் கற்பித்தல்) ஆகியவற்றை அமைத்தார். தாவரவியல் மாணவர்களின் குவிமையமாகத் திகழும் அளவுக்கு உலகின் பல்வேறு மூலைமுடுக்குகளில் இருந்து அரியவகை தாவர வகைகளை லால்பாக் பூங்காவில் நட்டுவைத்து அலங்கரித்தார். புதுமையாக சிந்தித்து அவற்றைச் செயல்படுத்துவதில் வல்லவரான மரிகெளடா, தரிசு நிலத்தில் தோட்டக்கலையை மேம்படுத்த ஆர்வம் காட்டி, விவசாயிகளை ஊக்குவித்து அதை தன் வாழ்நாளில் சாதித்துக் காட்டினார். புளி,மா, பலா மரங்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவித்தார். இந்தியாவில் முதல்முறையாக தரிசு நிலத்தில் தோட்டக்கலை பயிர்களை விளைவிக்க திரிபாசனத்தை அறிமுகத்தினார். மண்பானையில் பஞ்சை அடைத்து அதில் சிறு துவாரங்களை ஏற்படுத்தி தண்ணீரை ஊற்றி மரச்செடிக்கு கீழே புதைத்து வைப்பதே திரிபாசனமாகும். இதன்மூலம் ஒருவாரத்துக்கு ஈரப்பதத்தை நிலத்தில் தேக்கிவைத்து மரச்செடிக்கு உயிரூட்ட ஊட்டமாக இருக்க முடியுமென்பதை நிரூபித்தார்.
கோலார், தும்கூரு, சித்ரதுர்கா போன்ற வறண்ட மாவட்டங்களில் இன்றும் திரிபாசனம் நடைமுறையில் இருப்பதும், அங்கு பசுமையான தோட்டக்கலை உயிர்ப்புடன் இருப்பதும் மரிகெளடாவின் முயற்சிக்கு இன்றும் சான்று பகர்ந்துள்ளன. கர்நாடகத்தை பசுமை ஆபரணமாக மாற்றிய மரிகெளடாவின் பசுமையான நினைவுகள் அவரது பிறந்த நாள் நூற்றாண்டில் மனதில் நிழலாடுவதை தவிர்க்க இயலவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com