தமிழ்மொழி வாழ வேண்டுமானால் அது மக்களால் பேசப்பட வேண்டும் என்றுபெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தெரிவித்தார்.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெங்களூரு, ஹெயின்ஸ் சாலையில் உள்ள தென்னிந்தியத் திருச்சபை-கர்நாடக மைய மண்டலத்தின் வெஸ்லி தமிழ் திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை இனிமைத் தமிழ் பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: ஒருமொழி வாழவேண்டுமென்றால் அது மக்களால் பேசப்படவேண்டும், எழுதப்பட வேண்டும்.
அப்போதுதான் அந்த மொழி வாழும். தற்போது இரண்டு தலைமுறைகளாக கர்நாடகத்தில் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை கர்நாடகத் தமிழர்கள் உருவாக்கி விட்டார்கள். அந்தக் குறையைப் போக்க பெங்களூரு தமிழ்ச் சங்கம் மூன்று மாதத்தில் தமிழை எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க இனிமைத்தமிழ் பயிற்சி வகுப்புகளை தொடங்கி நடத்தி வருகிறது.
தமிழ்மொழி வாழவேண்டுமானால் அது நம்மால் பேசப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, தமிழ் பேச, எழுத, படிக்க தெரியாத தமிழர்கள் தமிழ் பயிற்சி வகுப்பில் சேர ஆர்வம் காட்ட வேண்டும்.
இதுவரை சுமார் 40 மையங்களில் இனிமைத்தமிழ் பயிற்சி வகுப்புக்களை நிறைவுசெய்துள்ளோம். 41-ஆவது மையமாக வெஸ்லி தேவாலயத்தில் இனிமைத்தமிழ் வகுப்பு தொடங்கி இருக்கிறோம். இந்த வாய்ப்பை தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
திருச்சபையின் போதகர் அருள்திரு ஜே.பால்தினகரன் பேசும்போது, "198 ஆண்டு கால பழமையான தேவாலயம் இது. இங்கு பெங்களூரு தமிழ்ச்சங்கம் முன்னெடுத்துள்ள பணிகளில் இது மிகச் சிறந்த பணி ஆகும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
சங்கத் துணைச் செயலாளர் அமுதபாண்டியன் தமிழ் படிக்க வேண்டியதன் அவசியத்தினையும், தேவையையும் எடுத்துக்கூறினார். ஒருங்கிணைப்பாளர் திருமதி கார்த்தியாயினி தமிழ் நமது வாழ்வியல்,தமிழர்கள் அதனை முறையாகப் பயிலுதல் அவசியமென்று பேசினார். ஹெயின்ஸ் ரோடு பெங்களூரு 51ல் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தலைவர் தி.கோ.தாமோதரன் துணைச் செயலாளர் அமுதபாண்டியன்,ஒருங்கிணைப்பாளர் கார்த்தியாயினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடக்கவிழாவில் திருச்சபையின் செயலாளர் ஜே.ஜெயச்சந்தர், பொருளாளர் ஜே.ஜான்பாஸ்கோ உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். வகுப்பில் 40 மாணவர்கள் பங்குபெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.