உலகின் மிகவும் தொன்மையானது திராவிடப் பண்பாடு என்று காங்கிரஸைச் சேர்ந்த பெங்களூரு முன்னாள் துணை மேயர் மஞ்சுளா நாயுடு தெரிவித்தார்.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஓர் அங்கமாக திகழும் திருமண மேடையின் 128-ஆவது நேர்காணல் நிகழ்ச்சி தமிழ்ச் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை பெங்களூரு மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் மஞ்சுளா நாயுடு, ஆர்.ஆர்.பி. மேம்பாட்டாளர்கள் நிறுவன உரிமையாளர் எஸ். செல்வராஜ், தில்லி தமிழ்ச் சங்கத் தலைவர் இந்துபாலா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தனர்.
வரவேற்புரை ஆற்றிய தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ. தாமோதரன்:
மதிக்கத்தக்க அரசியல்வாதிகளில் மஞ்சுளாநாயுடுவுக்கு தனியிடம் உண்டு. தனது 21 வயதில் பெங்களூரு மாநகராட்சியின் துணை மேயராக பதவியேற்று திறம்பட பணியாற்றியவர். இவரது தந்தை தமிழ்மொழியில் படித்தவர் மட்டுமல்லாது பெரும்பாலான தமிழர்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட உதவியாக இருந்தவர்.
ஆர்.ஆர்.பி. மேம்பாட்டாளர்கள் நிறுவன உரிமையாளர் எஸ்.செல்வராஜ், நல்ல தமிழ் உணர்வாளர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே "தளா' என்ற தமிழ் வார பத்திரிகையை நடத்தி வந்தவர் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய மஞ்சுளா நாயுடு பேசியது: திராவிடப் பண்பாடு உலகத்திலேயே மிகவும் தொன்மையானதாகும். அதிலும் திராவிட இலக்கியம் வளமானது மட்டுமல்ல, பழமையானதும் ஆகும். திராவிட இலக்கியத்தில் அங்கம் வகிக்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை இந்தியாவின் இலக்கிய வளத்தை உலகுக்குப் பறை சாற்றி வருகின்றன.
அனைத்து மொழி பேசும் மக்களும் கர்நாடகத்தில் வாழும் உரிமை பெற்றவர்கள். நாம் அனைவரும் திராவிடப் பண்பாட்டின் கூறுகள். இதற்காக அனைவரும் பெருமைப்படுவதோடு, ஒன்றுபட்டு வாழ்வதே சிறந்த மனிதநேயமாகும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தில்லி தமிழ்ச் சங்கத் தலைவர் இந்துபாலா, இனிமைத் தமிழ் அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை வழங்கினார்.
திருமண மேடை நிகழ்ச்சியை சங்கத் துணைச் செயலாளர்கள் இல.பழனி, அமுதபாண்டியன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பாரி, பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கத் துணைச் செயலாளர் சுந்தரவேலு நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.