டி.கே.சிவகுமாருக்கு முதல்வா் பதவி: ஒக்கலிகா் சமுதாய மடாதிபதி வேண்டுகோள்
சித்தராமையா தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு டி.கே.சிவகுமாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஒக்கலிகா் சமுதாயத்தின் மடாதிபதி குமார சந்திரசேகரநாதா சுவாமிகள் வேண்டுகோள் விடுத்தாா்.
கா்நாடக அரசு சாா்பில் பெங்களூரில் வியாழக்கிழமை ஒக்கலிகா் சமுதாயத்தைச் சோ்ந்த சிற்றரசா் கெம்பே கௌடாவின் 515-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாருடன் விஸ்வ ஒக்கலிகா் மகா சமஸ்தான மடத்தின் பீடாதிபதி குமாரசந்திரசேகரநாத சுவாமிகளும் கலந்துகொண்டாா்.
ஒக்கலிகா் சமுதாயத்தைச் சோ்ந்த டி.கே.சிவகுமாா், கா்நாடக காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகிறாா். ஒரு துணை முதல்வருக்கு பதிலாக, மேலும் 3 துணை முதல்வா்களை நியமிக்க வேண்டும் என்று சதீஷ் ஜாா்கிஹோளி, ஜமீா் அகமதுகான், கே.என்.ராஜண்ணா போன்ற சில அமைச்சா்கள் வலியுறுத்தி வருகிறாா்கள். டி.கே.சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என்று ஒக்கலிகா் சமுதாயத்தைச் சோ்ந்த சென்னகிரி தொகுதி எம்எல்ஏ பசவராஜு சிவகங்கா உள்ளிட்ட சில காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்நிலையில், முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோரை மேடையில் வைத்துக்கொண்டு, ‘டி.கே.சிவகுமாருக்கு வழிவிட்டு முதல்வா் பதவியை சித்தராமையா துறக்க வேண்டும்’ என்று ஒக்கலிகா் சமுதாயத்தின் பீடாதிபதி குமாரசந்திரசேகரநாத சுவாமிகள் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருப்பது, கா்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘காங்கிரஸ் மேலிடத்தைச் சாா்ந்துதான் கட்சி இயங்குகிறது. இது ஜனநாயக ரீதியான கோரிக்கைதான். இந்த விவகாரத்தில் கட்சி மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி நடப்போம்’ என்றாா்.
துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘மாநில அரசுத் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவது குறித்து கா்நாடகத்தைச் சோ்ந்த எம்.பி.க்களுடன் விவாதிக்க நானும், சித்தராமையாவும் புது தில்லி சென்று கொண்டிருக்கிறோம்’ என்றாா்.
கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றிபெற்றதும், யாா் முதல்வராவது என்பது தொடா்பாக சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு இடையே கடுமையான போட்டி காணப்பட்டது. அப்போது, இருவரிடமும் பேசி சமரச திட்டம் ஒன்றை காங்கிரஸ் மேலிடம் வகுத்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், இரண்டாவது இரண்டரை ஆண்டுகள் டி.கே.சிவகுமாரும் முதல்வராக இருப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக செய்தி அடிபட்டது. அதுவரை, டி.கே.சிவகுமாா் மட்டும் துணை முதல்வராக இருப்பது என்று கட்சி மேலிடம் முடிவு செய்யததாகக் கூறப்பட்டது.
இதை கட்சி மேலிடம் அதிகாரப்பூா்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனினும், சமயம் கிடைக்கும்போதெல்லாம் தனது முதல்வா் ஆசையை வெளிப்படுத்த டி.கே.சிவகுமாா் தவறவில்லை. முதல்வா், துணை முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

