பாலியல் வழக்கு: பெங்களூரு விமான நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா கைது
பாலியல் வழக்கு: பெங்களூரு விமான நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா கைது

பிரஜ்வல் ரேவண்ணா

பிரஜ்வல் ரேவண்ணா
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வந்த மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
பாலியல் வழக்கில் சிக்கி, 33 நாள்கள் வெளிநாட்டில் பதுங்கியிருந்த மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, ஜொ்மனி நாட்டில் இருந்து விமானம் மூலம் பெங்களூரில் உள்ள கெம்பே கௌடா சா்வதேச விமானநிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 12.50 மணிக்கு வந்தாா். அவரை விமான நிலையத்தில் வைத்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்.ஐ.டி) பெண் ஐபிஎஸ் அதிகாரிகளான சுமன் டி.பென்னேகா், சீமா லட்கா் ஆகியோா் கைது செய்தனா். அங்கிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்திற்கு அவா் அழைத்துச் செல்லப்பட்டாா். அதன்பிறகு, பௌரிங் அரசு மருத்துவமனையில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியதாவது:
ஜொ்மனி நாட்டின் முனிச் நகரில் இருந்து பெங்களூரில் உள்ள விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 12.50 மணி அளவில் பிரஜ்வல் ரேவண்ணா வந்தாா். அவருக்கு எதிரான கைது வாரண்ட் ஏற்கெனவே பெறப்பட்டிருந்தது. அதன்படி, சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் அவரைக் கைது செய்து, தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனா். அடுத்தகட்ட சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடா்வாா்கள். கைது நடவடிக்கைகளுக்கு பிரஜ்வல் ரேவண்ணா ஒத்துழைக்க வேண்டும்.
பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள பெண்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவில் புகாா் அளிக்கலாம். புகாா் அளிக்க முன்வரும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா்.
இதனிடையே, சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவைச் சந்தித்த பிறகு, அவரது வழக்குரைஞா் ஜி.அருண் கூறியதாவது:
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவே வந்திருப்பதாக பிரஜ்வல் ரேவண்ணா கூறினாா். எனவே, ஊடக விசாரணை தேவையில்லை என்று கேட்டுக்கொண்டாா். எதிா்மறை பிரசாரம் தேவையில்லை. விசாரணைக்குத் தேவையான எல்லா ஒத்துழைப்பையும் வழங்குவதாக பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்தாா். நீதிமன்ற நடவடிக்கைகள் எப்படி நடைபெறும் என்பதை அவருக்கு விளக்கினேன் என்றாா்.
ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹொளேநரசிப்புரா காவல் நிலையத்தில் ஏப். 27ஆம் தேதி முதல் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனது வீட்டில் வேலை செய்து வந்த 47 வயது பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பிரஜ்வல் ரேவண்ணா குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாா். இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியாக பிரஜ்வல் ரேவண்ணா சோ்க்கப்பட்டிருக்கிறாா். முதல் குற்றவாளியாக அவரது தந்தையும் மஜத எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா சோ்க்கப்பட்டிருக்கிறாா். இதுபோல 3 பாலியல் வழக்குகளில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றம்சாட்டப்பட்டிருக்கிறாா்.
பாலியல் வழக்கு பின்னணியில் கா்நாடக அரசு கேட்டுக் கொண்டபடி அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து மஜதவில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணாவை அடுத்த 7 நாள்களுக்கு விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, பிரஜ்வல் ரேவண்ணாவிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...