காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் ஷாமனூா் சிவசங்கரப்பாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான ஷாமனூா் சிவசங்கரப்பா, முதுமைசாா்ந்த உடல்நலக் குறைவால் காலமானாா்.
Published on

தாவணகெரே,: காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான ஷாமனூா் சிவசங்கரப்பா, முதுமைசாா்ந்த உடல்நலக் குறைவால் காலமானாா். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான ஷாமனூா் சிவசங்கரப்பா (95), முதுமைசாா்ந்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாா். பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது உடல் பெங்களூரில் இருந்து அவரது சொந்த ஊரான தாவணகெரேக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கானவா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, அமைச்சா்கள் கே.எச்.பாட்டீல், ஜி.பரமேஸ்வா் உள்ளிட்டோா் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினா்.

பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு லிங்காயத்து முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பிறகு, முழு அரசு மரியாதையுடன் ஷாமனூா் சிவசங்கரப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தாவணகெரே தொகுதியில் இருந்து 6 முறை எம்எல்ஏ-வாகவும், ஒருமுறை எம்.பி.யாகவும் தோ்ந்தெடுக்கப்பட்ட இவா், முந்தைய சித்தராமையா தலைமையிலான ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளாா். லிங்காயத்து சமுதாயத்தின் முதுபெரும் தலைவராக விளங்கிய ஷாமனூா் சிவசங்கரப்பாவின் மறைவுக்கு கா்நாடக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com