மழை பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு முதல்வர் குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகத்தில் குடகு தென்கன்னடம், ஹாசன், சிக்மகளூரு, சிவமொக்கா மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேலும் வெள்ளத்தில் பல இடங்களில் சாலைகள், பாலங்கள் மூழ்கியுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், மேலும் பல நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மழை பெய்ய வாய்ப்புள்ள குடகு, தென்கன்னடம், ஹாசன், சிக்மகளூரு, சிவமொக்கா மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களைத் தொடர்பு கொண்ட முதல்வர் குமாரசாமி, வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தினார்.
வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படாதவாறு தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் நிவாரண உதவிகளை உடனடியாக செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். நிலைமையை ஆராய்ந்து அதிகாரிகளுக்கு தக்க வழிகாட்டுதல்களை வழங்குமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார்.