மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக வியூகம்?

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் அமைந்துள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை
Updated on
3 min read

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் அமைந்துள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க, காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அடைந்துள்ள 25 பேரை பாஜகவில் இணைக்க அக் கட்சி வியூகம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்திருந்தும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது. ஆளுநர் வஜுபாய் வாலாவின் அழைப்பை ஏற்று முதல்வராகப் பதவியேற்றிருந்த பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, சட்டப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தவறியதால் 3 நாள்களில் அப்பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். 
இதைத்  தொடர்ந்து முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு பதவியேற்று 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மக்களவைத் தேர்தலை மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்ளவிருப்பதால், மாநிலத்தில் பாஜகவுக்கான வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 
இதனால், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு, கூட்டணியை உடைத்து, மீண்டும் பாஜக ஆட்சியைக் கொண்டுவர எடியூரப்பா திட்டமிட்டிருக்கிறார். இதற்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் ஆசியும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
காங்கிரஸில் உள்கட்சிபூசல்
டிச.10-ஆம் தேதி பெலகாவியில் கர்நாடக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. இதனிடையே, அமைச்சரவையை விரிவாக்காமல் தாமதம் செய்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர், கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனர். 
டிச.10-ஆம் தேதிக்குள் அமைச்சரவையை விரிவாக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள், தனித்தனியே சந்தித்து கலந்தாலோசித்து வருகிறார்கள். அமைச்சரவையை விரிவாக்கம் செய்யாமல் இழுத்தடித்துவருவதற்காக முன்னாள் முதல்வர் சித்தராமையா மீது ஆத்திரமடைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுனகார்கேவைச் சந்தித்து அவருக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளனர். இதனால் காங்கிரஸில் உள்கட்சிபூசல் தீவிரமடைந்துள்ளது. 
பாஜக பேரம்
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அதிருப்தி அடைந்துள்ள 25 காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க பாஜக வியூகம் அமைத்துள்ளது பகிரங்கமாகியுள்ளது. இதுதொடர்பாக பாஜக முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவின் உதவியாளர் மஞ்சுநாத், துபையில் உள்ள தொழிலதிபருடன் தொலைபேசியில் உரையாடியிருப்பது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இது கர்நாடக அரசியலை பரபரப்பாக்கியுள்ளது.  
காங்கிரஸிலிருந்து பாஜகவும் செல்லும் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.30 கோடி வழங்கப்படும் என்றும், பதவியை ராஜிநாமா செய்தபிறகு அதே தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு வாய்ப்பு தரப்படும் என்றும், இடைத்தேர்தல் முழுவதையும் கட்சியே ஏற்கும் என்றும், எடியூரப்பா தலைமையில் புதிதாக அமையும் ஆட்சியில் அமைச்சர் அல்லது வாரியம், கழகங்களின் தலைவர் பதவி வழங்கப்படும் என்றும் ஆசைவார்த்தைகளைக் கூறி  காங்கிரஸின் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேரம் பேசிவருவதாகக்
கூறப்படுகிறது. 
பிளவுபடுத்தத் திட்டம்
பெலகாவியில் டிச.10-ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனிமைப்படுத்தி, கூட்டத்தொடர் முடிந்ததும் ஆட்சியைக் கவிழ்க்க திட்டத்தை வகுத்து பாஜக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 
அமைச்சர் பதவி கிடைக்காததால் கட்சிமீது அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சதீஷ் ஜார்கிஹோளி, பீமாநாயக், நாகேந்திரா, பி.சி.பாட்டீல், ஆனந்த்சிங், சுதாகர், பிரதாப்கெளடாபாட்டீல், சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் உள்ளிட்ட 25 பேருக்கு பாஜகவினர் வலைவீசியுள்ளதாகக்
கூறப்படுகிறது. 
பாஜக தலைவர்கள், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பலரும் பாஜகவுக்கு செல்ல தயாராகி வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, மஜத-காங்கிரஸ் கூட்டணி கவிழ்ந்ததும் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து நிகழ்ந்துவரும் அரசியல் நடவடிக்கைகளால் கர்நாடக அரசியல் பரபரப்பாகியுள்ளது.
பாஜக மறுப்பு
இதுகுறித்த தகவல்களை பாஜக முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு மறுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,"நானோ அல்லது கட்சியின் மூத்த தலைவர்களோ காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுத்து ஆட்சியைக் கவிழ்க்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. எதற்கெடுத்தாலும் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதாகக் கூறி பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முற்பட்டுள்ளனர். எனது உதவியாளர் மஞ்சுநாத்துக்கு ஹிந்தி பேச வராது. அப்படியிருக்கையில், ஆட்சியைக் கவிழ்ப்பது தொடர்பாக துபை தொழிலதிபர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறுவதில் உண்மையில்லை. 
இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஒலிப்பதிவு உண்மையானதல்ல. ஆட்சியைக் கவிழ்க்க எந்தவொரு தொழிலதிபருடனும் பேசவேண்டிய அவசியமில்லை. அப்படி ஒருநிலைமை வந்தால், நானே பேசுவேன். காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுப்பதாகவும், கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கவிருப்பதாகவும் வெளியாகியுள்ள தகவலில் உண்மையில்லை' என்றார்.
மீண்டும் கேளிக்கை விடுதியா?
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ சதீஷ் ஜார்கிஹோளி, பெலகாவியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த சில கருத்துகள் கர்நாடக அரசியல் நகர்வுகளை வெளிப்படுத்துவதாக உள்ளதால், அதுவும் அரசியல் பரபரப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. சதீஷ் ஜார்கிஹோளி கூறுகையில்,"கானாப்பூர் வட்டத்தில் கனகும்பி கிராமத்தில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது, சாத்தேவாரி கேளிக்கை விடுதிக்கு சென்று பார்வையிட்டது உண்மைதான். எதிர்காலத்தில் எம்எல்ஏக்களை அழைத்து வந்து தங்கவைக்க நல்ல இடம் தேவை என்பதால், இதை பார்வையிட்டேன். கேளிக்கை விடுதிக்கு சென்றால் தவறென்ன'?  என்றார்.
முன்னெச்சரிக்கை
காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுத்து, கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர அக்கட்சியினர் திரைமறைவில் பேரம் பேசிவருவது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ள மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா, முதல்வர் குமாரசாமி இருவரும், ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட ஆலோசனை நடத்தியுள்ளனர். 
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்களை பாஜகவினர் இழுத்தால், பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் 50 பேரை இழுக்க மஜதவியூகம் அமைத்துவருவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிருப்தி இல்லை
இதனிடையே மங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, "பாஜகவினர் கூட்டணி அரசை கவிழ்க்க மீண்டும் மீண்டும் முயற்சித்து வருவது சரியல்ல. காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி பணம் தருவதாகக் கூறுகிறார்கள். அந்த பணம் எங்கிருந்து, யாரால் கொடுக்கப்படும்? இது யாருடைய பணம்? இது ஊழல் பணம் அல்லவா? ஆட்சிகவிழ்ப்பு செய்யப்போவதாக பாஜகவினர் கூறுவது வெட்கக்கேடானது. கூட்டணி அரசை கவிழ்க்கப் போவதாக தொடர்ந்து கூறுவது சரியா? பாஜகவினரின் முயற்சிக்கு நடக்காது. மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தொடரும். காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏக்கள் யாரும் அதிருப்தியாக இல்லை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com