கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களிடையே குழப்பமும், அமைச்சர்களிடையே கலக்கமும் உருவாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியல் போக்கையே மாற்றியமைத்துவிட்டன. அடுத்தமுறையும் நானே முதல்வர் என்ற சித்தராமையா, தோல்வியைத் தழுவினார். 104 இடங்களில் வென்றும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைத் தவறிவிட்டு வலுவான எதிர்க்கட்சியாக பரிணமித்துள்ளது பாஜக.
"கிங் மேக்கர்' அல்ல 'கிங்' என்று தேர்தலுக்கு முன்பே கூறியதை எச்.டி.தேவெ கெளடாவும், எச்.டி.குமாரசாமியும் நிரூபித்துள்ளனர். 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், கர்நாடகத்தின் தலையெழுத்தை முடிவு செய்யும் "முதல்வர்'பதவியை மஜத கைப்பற்றியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான ஜி.பரமேஸ்வர். காங்கிரஸுக்கு துணையாக இருப்பார் என்று நினைத்த அக்கட்சியின் தொண்டர்கள், குமாரசாமிக்கு துணையாக இருப்பதை நினைத்து வருத்தமடையத் தொடங்கியுள்ளனர்.
2004-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்முடிவில் 65 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸும், 58 இடங்களில் வென்றிருந்த மஜதவும் கூட்டணி அமைத்து காங்கிரஸின் மூத்த தலைவர் தரம்சிங் தலைமையில் ஆட்சி அமைத்தன. எனினும், தேவெ கெளடாவைச் சந்தித்து வழிகாட்டுதல்களைப் பெற்று சென்று வந்தார் தரம்சிங். அப்போது, துணை முதல்வராகயிருந்த சித்தராமையா, தேவெ கெளடாவின் அசைவுகளை அறிந்து வைத்துள்ள சித்தராமையாவுக்கு மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் எள்ளளவும் விருப்பமில்லை.
காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராகவும், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒருங்கிணைப்புக்குழு தலைவராகவும் சித்தராமையாவை ராகுல் காந்தி தேர்ந்தெடுத்ததில் தேவெ கெளடா குடும்பத்திற்கும், ஜி.பரமேஸ்வருக்கும் விருப்பம் இல்லை. முந்தைய காங்கிரஸ் அரசில் 5 ஆண்டுகாலம் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட சித்தராமையாவுக்கு தேர்தல் முடிவுகள் பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், அவரது மக்கள் செல்வாக்கை சாய்த்துவிடவில்லை. இதனால், ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு நிதி எங்கிருந்து கொண்டுவருவீர்கள்? என்று குமாரசாமியிடம் கேட்டிருந்தார்.
2018-19-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஏற்கெனவே தாக்கல் செய்துவிட்டதால், புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்வது தேவையா? புதிய திட்டங்கள் அறிவிக்க விரும்பினால் துணைநிலை பட்ஜெட் தாக்கல் செய்யலாம் என்று குமாரசாமிக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார் சித்தராமையா.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் மஜத தான் 'கிங்', "கிங் மேக்கராக' காங்கிரஸுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பது தேவெ கெளடாவின் அரசியல் கணக்கு. தேசிய அளவில் பலவீனமான காங்கிரஸ் கட்சியை தனக்கு சாதகமாக வளைந்துகொடுக்க கட்டாயப்படுத்தினார் தேவெ கெளடா. நிதி, பொதுப்பணி, மின்சாரத்துறையை காங்கிரஸிடமிருந்து பறித்து கொண்டது முதல் பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸின் ஆதிக்கத்திற்கு மஜத முட்டுக்கட்டை போட்டு, அதில்வெற்றியும் பெற்றது.
இதேபோல, பட்ஜெட் தாக்கல், பயிர்க்கடன் தள்ளுபடிவிவகாரத்திலும் சித்தராமையாவின் ஆலோசனைக்கு எதிராக நேரடியாக ராகுல் காந்தியைச் சந்தித்து ஆதரவு திரட்டி திரும்பினார் குமாரசாமி. இது சித்தராமையா போன்ற ஆளுமை நிறைந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.
மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு மஜதவிடம் அரசியல் அடாவடித்தனத்தை காங்கிரஸ் தலைவர்கள் சகித்துக் கொண்டனர். 38 இடங்களை வைத்துக்கொண்டு, 80 இடங்களை வைத்திருக்கும் காங்கிரஸை மிக கேவலமாக நடத்த தொடங்கிய குமாரசாமியின் அணுகுமுறையை தடுத்து நிறுத்தவே, இயற்கை மருத்துவசிகிச்சைக்கு சென்று அரசியல் மெளனம் கடைபிடித்த சித்தராமையா, அங்கிருந்தபடியே காணொலிக்காட்சிகள் மூலம் சில "அரசியல் குண்டு'களை வீசிவிட்டு அமைதி காத்திருக்கிறார்.
குமாரசாமி தனது ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது பேசிய பாஜக மாநிலத்தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா,"அப்பா(தேவெகெளடா), மகன்(குமாரசாமி)சேர்ந்துகொண்டு கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை அழிக்கப்போகிறார்கள். இது தெரியாமல் மஜதவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது ஏனோ?' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதில் அரசியல் சாதுர்யம் காணப்பட்டாலும் உண்மையில்லாமல் இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.
மக்களவைத் தேர்தலில் மஜதவை பலப்படுத்திக்கொண்டு, தேசிய அரசியலில் தனது செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டுள்ளார் எச்.டி.தேவெ கெளடா. காங்கிரஸ் கூறுவதை பின்பற்றாவிடில் ஆட்சி நிலைப்பது நடைமுறை சாத்தியமில்லை என்பதை தேவெ கெளடாவுக்கும், குமாரசாமிக்கும் உணர்த்தவே தனது ஆதரவாளர்கள் மூலம் அரசியல் காய்களை நகர்த்திவருகிறார் சித்தராமையா.
இது காங்கிரஸ் தொண்டர்களிடையே குழப்பத்தையும், மஜத மற்றும் காங்கிரஸில் உள்ள சித்தராமையாவின் அரசியல் எதிரிகளிடையே கலக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது. ராகுல் காந்தியை திணறவைத்திருக்கும் சித்தராமையாவின் அரசியல் நடவடிக்கைகள், கர்நாடக அரசியலின் போக்கை மாற்றியமைக்குமா? என்பதை காலம் கனியும்போது உணரலாம் என்று அரசியல் நோக்கர்கள்
கருதுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

