அமித் ஷாவின் தேர்தல் வியூகம் பாஜகவுக்கு பலம் சேர்க்குமா?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தேர்தல் வியூகம் நிச்சயம் பாஜகவுக்கு பலத்தை அளித்தாலும்,
Updated on
2 min read

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தேர்தல் வியூகம் நிச்சயம் பாஜகவுக்கு பலத்தை அளித்தாலும்,  அவை வெற்றிக்கான வாய்ப்பாக மாறுமா என்பது வேட்பாளர்களின் கடைசி நிமிட கணிப்பில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் முன்னேற்பாடுகளை மேற்கொண்ட பாஜக,  கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா வழிகாட்டுதலின் பேரில் தீவிரமாக களப் பணியாற்றி வருகிறது.
2014-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும்,  பல்வேறு கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்து வருகிறது பாஜக. இதன்காரணமாக,  இந்தியாவின் 13 மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடனும்,  8 மாநிலங்களில் கூட்டணிகளின் ஆதரவுடனும் மொத்தம் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 
தென்னிந்தியாவில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ள மாநிலமாகக் கருதப்படும் கர்நாடகத்தில் மீண்டும் வெற்றி பெற்று,  பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையை 22 ஆக உயர்த்த அமித் ஷா திட்டமிட்டிருக்கிறார்.
திட்டமிடல்
லிங்காயத்து சமுதாயத்தின் ஆதரவைப் பெற்றுள்ள எடியூரப்பாவுக்கும்,  பழங்குடியினரின் ஆதரவைப் பெற்றுள்ள பி.ஸ்ரீராமுலுவுக்கும் பாஜகவில் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்த அமித் ஷா, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக எடியூரப்பாவை அறிவித்தார். 
அடுத்தக்கட்டமாக, கட்சியை அடிமட்டத்தில் இருந்து முறைப்படுத்த முடிவு செய்து,  வாக்குச்சாவடி அளவிலான நிர்வாகிகளை நியமிக்கத் தொடங்கினார்.  எடியூரப்பா, கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்ட முன்னணித் தலைவர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகளைக் களைந்தார்.  மேலும், சட்டப்பேரவைத் தேர்தலை தனது தலைமையில் எதிர்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். 
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அடிக்கடி கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  அமித்ஷா,  கர்நாடகத்தை பெங்களூரு பகுதி,  பழைய மைசூரு பகுதி, மும்பை கர்நாடகப் பகுதி,  ஹைதராபாத் கர்நாடகப் பகுதி,  கடலோர கர்நாடகப் பகுதி எனப் பகுத்தாய்ந்து,  அவற்றில் கட்சி பலமாக இருக்கும் பகுதிகள்,  பலவீனமாக இருக்கும் பகுதிகள் எனப் பிரித்தார். 
பிரசார வியூகம்
மும்பை கர்நாடகப் பகுதியில் லிங்காயத்து சமுதாயத்தினர் அதிகம் வசித்து வந்ததால்,  அதே சமுதாயத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை அங்கு முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தினார்.  எடியூரப்பா முதல்வரானால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் பட்டியலிட்டு பிரசாரம் செய்தார். 
லிங்காயத்து சமுதாயத்துக்கு தனிமத அங்கீகாரம் வழங்க முதல்வர் சித்தராமையா மேற்கொண்ட முயற்சியை முறியடித்து,  லிங்காயத்து சமுதாயத்தின் ஆதரவைத் தக்கவைக்க வியூகம் அமைத்துள்ளார்.  மத ரீதியான பிரிவினைகள் அதிகம் காணப்படும் கடலோரக் கர்நாடகத்தில் ஹிந்துகள் மீதான தாக்குதல்,  கொலைகளை முன்னிலைப்படுத்தி பிரசாரத்தை முடுக்கிவிட்டார். 
பீதர்,  கலபுர்கி,  யாதகிரி,  ராய்ச்சூரு,  பெல்லாரி,  கொப்பள் மாவட்டங்களை உள்ளடக்கிய ஹைதராபாத் கர்நாடகப் பகுதிகளில் புதிய தலைவர்களை நியமித்து,  பிரசாரத்தை முடுக்கியுள்ளார்.  பெங்களூரில் பாஜகவுக்கு கணிசமான ஆதரவும்,  தலைவர்களும் உள்ளதால்,  எவ்விதச் சிக்கலும் இல்லை.  பெங்களூரில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
மத்திய பாஜக அரசு அளித்த நிதியை ஆளும் காங்கிரஸ் அரசு முறையாகப் பயன்படுத்தாததை முன்னிலைப்படுத்தி பிரசாரம் நடத்தி வருகிறார் அமித் ஷா.  பழைய மைசூரு பகுதியில் பாஜகவுக்கு அமைப்பு ரீதியான பலம் இல்லாததால்,  அங்கு கட்சியைப் பலப்படுத்த பிரதமர் மோடி,  அமித் ஷா ஆகியோர் அடிக்கடி அப் பகுதிக்குச் சென்று பிரசாரம் செய்தனர். 
செயல்திட்டம்
கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள்,  நிர்வாகிகளுக்கு தனித்தனி வேலைத் திட்டங்கள் அளித்தார்.  வாக்குச்சாவடிக் குழுக்களை அமைப்பது,  வாக்குச்சாவடிஅளவில் வாக்காளர்களின் புள்ளிவிவரங்களைச் சேகரித்தல்,  முக்கியமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல்,  பைக் ஊர்வலம் நடத்துவதற்கு பைக் வைத்திருப்போர் பட்டியல் தயாரித்தல்,  கட்செவி செய்திகளைப் பகிர்வதற்காக ஸ்மார்ட்போன் வைத்திருப்போரின் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பிரசார வேலைகளை கட்சியினருக்கு அளித்திருந்தார். 
ஒரேநேரத்தில் 9 வகையான பிரசாரத் திட்டங்களையும் அமித் ஷா செயல்படுத்தினார்.  விவசாயிகள்,  மாணவர்கள், மகளிர்,  தாழ்த்தப்பட்டோர்,  பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர்,  வடகிழக்கு மாநிலத்தவர்,  தொழிலாளர்கள் போன்ற பல்வேறு பிரிவினரைக் குறிவைத்து பிரசாரத் திட்டங்களைச் செயல்படுத்தினார்.  இது பாஜகவுக்கு ஓரளவு பலம் தரும் என்று நம்பப்படுகிறது.
பலமும்,  பலவீனமும்
அமித் ஷாவின் தேர்தல் முன்னேற்பாடுகளுக்கு கட்சியின் நிர்வாகிகள் பம்பரம் போல சுழன்று வேலை செய்து வருகிறார்கள்.  பெங்களூரு,  கடலோர கர்நாடகம், மும்பை கர்நாடகத்தில் கட்சி பலமாக உள்ளது அமித் ஷாவின் வியூகத்துக்கு துணையாக உள்ளது. 
சமூக வலைதளங்களில் பாஜக வலிமையாக இருப்பதால்,  இளைஞர்களிடையே பாஜகவுக்கு ஆதரவு உள்ளது. அமித் ஷாவின் நுண்மேலாண்மைக் கலை பாஜகவுக்கு ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஹாசன்,  ராமநகரம்,  மண்டியா போன்ற பல மாவட்டங்களில் பாஜகவின் அமைப்பு பலமாக இல்லாதது பாதகமாக உள்ளது.
 2008 முதல் 2013 வரை நடந்த பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள் பாஜகவை துரத்தி வருகின்றன.  தாழ்த்தப்பட்ட மக்களிடையே பாஜகவுக்கு சாதகமான அலை இல்லை. எனினும்,  பாஜகவுக்கு அமித் ஷாவின் தேர்தல் வியூகம் மிகப் பெரிய பலமாக விளங்கிவருவதை மறுக்க முடியாது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com