பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தல் திட்டமிட்டப்படி வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என்று சங்கத் தலைவர் தி.கோ. தாமோதரன், தேர்தல் பொறுப்பாளர் எஸ். பத்மநாபன் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் 2018-2020-ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக ஒரு சில நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்ச் சங்கத் தேர்தலுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. 2016-2018-ஆம் ஆண்டுக்கான தேர்தல் நடைமுறைகள் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக நடந்த வழக்கை விசாரித்த கூட்டுறவுச் சங்க மாவட்டப் பதிவாளர் கடந்த திங்கள்கிழமை தீர்ப்பை வழங்கியிருந்தார். அதில், அடுத்த 2 மாதங்களுக்குள் தமிழ்ச் சங்கத் தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அந்த உத்தரவின்படி, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் 2018-2020-ஆம் ஆண்டு பருவத்துக்கான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் பொறுப்பாளராக புலவர் எஸ். பத்மநாபனை நியமிக்கப்பட்டு தேர்தல் அட்டவணையும் வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, ஏற்கெனவே அறிவித்தப்படி, நவம்பர் 25-ஆம் தேதி திட்டமிட்டப்படி தமிழ்ச்சங்கத் தேர்தல் நடைபெறும். இதில் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
முறைகேடு நடைபெறவில்லை எனக் கருத்து: பெங்களூரு தமிழ்ச் சங்கத் தேர்தலில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று 2016-2018-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களான முன்னாள் செயலாளர் வா. ஸ்ரீதரன், முன்னாள் பொருளாளர் வா.கோபிநாத், நா. மகிழ்நன், இராம. இளங்கோவன், நாகராஜ், தீனதயாளன், கோபால்மணி, மகேந்திர வர்மா, முருகன்ஜி, எம்.ரவி, மு. புண்ணியமூர்த்தி, அன்புநிதி உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் 2016-2018-ஆம் ஆண்டுக்கான தேர்தல் 2016, செப். 25-ஆம் தேதி நடைபெற்றது. அத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக போட்டியிட்ட நாங்கள் யாரும் கூட்டுறவுச் சங்கத் துணைப் பதிவாளரிடம் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தவர்கள் எவரும் அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. சங்கம் தொடங்கிய நாள் முதல் இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் முறைகேடு நடந்ததாக வரலாறு இல்லை.
அதுபோலவே, 2016-2018-ஆம் ஆண்டுக்கான தேர்தலிலும் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று உறுதி அளிக்கிறோம். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நற்பெயரையும், பெருமைகளையும் கட்டிக்காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
அரசு பரிந்துரையை வைத்துக்கொண்டு, சங்கத்தேர்தல் தடை செய்யப்பட்டதாக பொய்ச் செய்திகளைப் பரப்புவது, உண்மைக்குப் புறம்பானதாகும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








