வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

சொர்ணா ரயிலுக்கு பதிலாக மெமு ரயிலை அறிமுகம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு

கோலார்தங்கவயல் மக்களின் வாழ்வாதாரத்தை காத்துவரும் சொர்ணா ரயிலுக்கு பதிலாக மெமு ரயிலை அறிமுகம் செய்துள்ளதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:59 am

கோலார்தங்கவயல் மக்களின் வாழ்வாதாரத்தை காத்துவரும் சொர்ணா ரயிலுக்கு பதிலாக மெமு ரயிலை அறிமுகம் செய்துள்ளதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
1880-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் தங்க சுரங்கத் தொழிலை கோலார் தங்கவயலில் தொடங்கியபோது, ஆபத்தான சுரங்கப் பணி செய்ய தற்போதைய கர்நாடகத்தைச் சேர்ந்த யாரும் முன் வரவில்லை. இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள, தற்போதைய தமிழகத்தின் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் துணிச்சலாக முன்வந்தனர். 
அங்கிருந்து அழைத்துவரப்பட்ட மக்களால் கோலார் தங்கவயல் நகரம் உருவானது. நாளடைவில், அவ்வப்போது தங்கச் சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்துகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மரணமடைந்தனர். தங்கள் கடின உழைப்பால் டன் கணக்கில் தங்கத்தை வெட்டி தந்த தொழிலாளர்களின் வாழ்க்கையோ ஏழ்மை நிலையில் தான் இருந்து வந்தது. 
இந்நிலையில், 2001-ஆம் ஆண்டு நலிவடைந்த தொழிற்சாலைகள் பட்டியலில் தங்கச் சுரங்கத்தைச் சேர்த்த மத்திய அரசு, அந்த ஆண்டிலேயே அதை மூடிவிட்டது.
வேறு தொழில் இல்லாது திகைத்து நின்ற சுரங்கத் தொழிலாளர்களின் நிலையில் பரிதாபகரமானது. தங்கச் சுரங்கம் மூடப்பட்டதால், இனி கோலார் தங்கவயல் மெல்ல அழிந்து விடும் என்றே அனைவரும் கருதினர். 
அப்போது சுமார் 80 கி.மீ.தொலைவில் இருந்த கர்நாடகத்தின் தலைநகராம் பெங்களூரு, உலகமயமாக்கல் கொள்கையால் 2001-ஆம் ஆண்டு முதல் அதிவேகமாக வளர்ச்சி அடையத் தொடங்கியது. இதனால் பெங்களூருவில் புதிய வகையான வேலைவாய்ப்புகள் அரும்பத் தொடங்கின. 
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் படித்த பிள்ளைகள் வேலைவாய்ப்புக்காக பெங்களூரு நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். பெங்களூருவில் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைத்தாலும், அந்நகரில் வாழ்வதற்கு போதுமான வருவாய் கைநிறையக் கிடைக்காததோடு, வீட்டுவசதி பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. வேலை கிடைத்தும் பெங்களூருவில் தங்கி வாழ்க்கையை நடத்த முடியாத நிலையில், கோலார் தங்கவயலுக்கும் பெங்களூருவுக்கும் தினமும் பயணிக்க மக்கள் முடிவு செய்தனர். அந்த சூழலில், கோலார் தங்கவயலில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் வேலைக்கு சென்று திரும்ப காலையும் மாலையும் உற்றத்துணையாகவும், உதவிக்கரமாகவும் விளங்கியது சொர்ணா பயணிகள் ரயில் தான். கோலார் தங்கவயலில் உள்ள மாரிகுப்பம் ரயில் நிலையத்தில் தினமும் காலை 6.30 மணிக்கு கிளம்பி பெங்களூரு செல்லும் சொர்ணா ரயில், மீண்டும் இரவு 8.30மணிக்கு மாரிகுப்பம் வந்து சேரும். கட்டட வேலை தொடங்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மென்பொறியாளர்கள் வேலை வரை பெங்களூருவில் பணியாற்ற ஏராளமான வேலைவாய்ப்புகள்
குவிந்துள்ளன. 
அந்த வேலைகளை தேடி தினமும் சொர்ணா ரயிலில் கிளம்பி, அதே ரயிலில் இரவு கோலார் தங்கவயல் திரும்புவதை தொழிலாளர்கள் பழகி விட்டனர். இந்த வகையில், தினமும் சுமார் 30ஆயிரம் பேர் கோலார் தங்கவயல்-பெங்களூரு-கோலார் தங்கவயல் இடையே பயணம் செய்கின்றனர். இதனால் கோலார் தங்கவயல் நகரம் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டது. 
கோலார் தங்கவயலுக்கு மாற்றுத் தொழிற்சாலை வேண்டி மக்கள் போராடியும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாத நிலையில் சொர்ணா ரயிலை தங்களுக்கான வாழ்வாதார தூதுவராக மக்கள் கருதுகின்றனர்.
1981-ஆம் ஆண்டு நவம்பர் முதல் கோலார் தங்கவயலின் மாரிகுப்பம் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த முப்பத்து ஏழு ஆண்டுகளாக சொர்ணா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப சொர்ணா ரயிலில் பெங்களூருவுக்கு சென்று பணி செய்து கோலார் தங்கவயல் திரும்புகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கோலார் தங்கவயலின் வாழ்வாதாரமாக திகழும் சொர்ணா ரயிலில் மேலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, கூடுதல் ரயில்களையும் இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.
ஆனால், இதை காதில் வாங்கிக் கொள்ளாத தென்மேற்கு ரயில்வே நிர்வாகம்,100 கி.மீ. தொலைவு பயணங்களுக்கு மெமு (புஷ்புல்) ரயில்களை இயக்க முடிவு செய்தது. மெமு ரயிலில் வசதிகள் குறைவு, பெட்டிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் அதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை கைவிட்ட தென்மேற்கு ரயில்வே வழக்கம்போல சொர்ணா ரயிலை இயக்கி வந்தது. சொர்ணா ரயிலை காட்டிலும் மெமு ரயிலில் பாதி அளவு மக்களே நிம்மதியாக பயணிக்க இயலும் அளவுக்குதான் அந்த ரயிலின் இருக்கை வசதிகள் உள்ளன. இந்நிலையில், மீண்டும் மெமு ரயிலை ஞாயிற்றுக்கிழமை முதல் தென்மேற்கு ரயில்வே இயக்கத் தொடங்கியுள்ளது. 
ரயில் எண்கள்-56507/56508-மாரிகுப்பம்-கேஎஸ்ஆர் பெங்களூரு-மாரிகுப்பம் சொர்ணா பயணிகள் ரயில் இனிமேல் ரயில் எண்-66545/66546-மாரிகுப்பம்-கேஎஸ்ஆர் பெங்களூரு-மாரிகுப்பம் மெமு ரயில் என்று அழைக்கப்படவிருக்கிறது. இந்த ரயிலில் வழக்கமான 18 பெட்டிகளுக்கு பதிலாக 16 பெட்டிகளே இருக்கும். இருக்கை வசதியும் குறைவு. எனவே, இந்த புதிய மெமு ரயில் சேவைக்கு கோலார் தங்கவயல் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
கோலார் தங்கவயல் ஊரை காக்கும் தொழிற்சாலையாகவே திகழும் சொர்ணா ரயிலை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்க வேண்டும், மெமு ரயில் சேவை வேண்டாம் என்பதே தினசரி பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.